தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து 591 பேர் ஓட்டு போட விரும்பாதவர்கள்

சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து 591 பேர், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில், 91.89 சதவீதமும், குறைந்தபட்சமாக, துறைமுகம் தொகுதியில், 63.65 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த சட்டசபை தேர்தலில், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதற்காக, "49 ஓ' வாய்ப்பை, 24 ஆயிரத்து 591 பேர், பதிவு செய்துள்ளனர். இதில், கே.வி.குப்பம் தொகுதியில் பதிவானவர்கள் விவரம் வரவில்லை. நெய்வேலி, ரிஷிவந்தியம், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஒருவர் கூட, "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

மாவட்ட வாரியாக, "49 ஓ' பயன்படுத்தியவர்கள் விவரம் வருமாறு:

திருவள்ளூர் 1,347
சென்னை 3,407
காஞ்சிபுரம் 1,391
வேலூர் 464
கிருஷ்ணகிரி 381
தர்மபுரி 252
திருவண்ணாமலை 209
விழுப்புரம் 280
சேலம் 940
நாமக்கல் 530
ஈரோடு 1,133
திருப்பூர் 1,796
நீலகிரி 1,306
கோவை 3,061
திண்டுக்கல் 554
கரூர் 335
திருச்சி 1,046
பெரம்பலூர் 203
அரியலூர் 106
கடலூர் 430
நாகப்பட்டினம் 377
திருவாரூர் 181
தஞ்சை 543
புதுக்கோட்டை 331
சிவகங்கை 233
மதுரை 783
தேனி 336
விருதுநகர் 269
ராமநாதபுரம் 209
தூத்துக்குடி 879
திருநெல்வேலி 1,109
கன்னியாகுமரி 170

திருவாரூர் தொகுதியில் 59 பேரும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 31 பேரும், கொளத்தூர் தொகுதியில் 209 பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 260 பேரும், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். மொத்த ஓட்டுப்பதிவை பொறுத்தவரை, துறைமுகம் தொகுதியில் தான் மிகக் குறைவாக 63.65 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கீழ்வேளூர் (தனி) தொகுதியில் 91.89 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இதில், 88.23 சதவீதம் ஆண்கள்; 95.57 சதவீதம் பெண்கள். அதிகபட்சமாக, 86 சதவீதம் ஓட்டுக்கள் பதிவான கரூர் மாவட்டத்தில், குளித்தலை தொகுதியில் தான் அதிகமாக 88.66 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 2.88 லட்சம் அரசு ஊழியர்கள், 66 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கியோர், தபால் ஓட்டு போட்டு உள்ளனர். இந்த தபால் ஓட்டுக்கள், இன்னும் வந்து சேரவில்லை. எட்டு ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெரிந்த பின் தான், முழுமையான ஓட்டுப்பதிவு சதவீதம் வெளிவரும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

மேலும் ஒரு ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு: இதுபற்றி பிரவீன்குமார் கூறியதாவது: சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி, ஊராட்சி தொடக்கப் பள்ளி, எண் 2ஏவி என்ற ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு ஓட்டுச்சாவடிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடப்பது போல, இந்த ஓட்டுச்சாவடிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கும். தொகுதியில் பதிவான மொத்த ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 15 சதவீதம் அதிகமாகவோ, குறைவாகவோ பதிவான ஓட்டுச்சாவடிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், புளியம்பட்டியில், ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும், பார்வையாளர் செய்த ஆய்வில், வாக்காளர்களை ஏஜன்ட்கள் ஓட்டு இயந்திரத்துக்கு அருகே அழைத்துச் சென்றதும், ஓட்டுப் போட உதவியதும், வீடியோவில் பதிவாகி இருந்தது. இதை ஓட்டுச்சாவடியின் தேர்தல் அதிகாரி தடுக்கவில்லை. மேலும், தனது டைரியில் இதுபற்றி குறிப்பிடவும் இல்லை. எனவே, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்காளர்களுக்கு உதவிய ஏஜன்ட்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த ஓட்டுச்சாவடியில் மொத்தமுள்ள 855 ஓட்டுக்களில், 782 பதிவாகி இருந்தன. எனினும், மறு ஓட்டுப்பதிவின் போது, ஓட்டுப் போடாதவர்களும் ஓட்டுப் போடலாம். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

No comments: