வெளிநாட்டு மோகம் முடிவுக்கு வருகிறது ?

இந்திய அமெரிக்கர், அமெரிக்க இந்தியர்? இரண்டு வகை இந்தியர்கள் உள்ளனர் அங்கே. ஒன்று, அமெரிக்காவில் பல தலைமுறையாகவே வாழ்ந்து வருவோரின் வாரிசுகள்; அவர்கள் முகத்தில், தோற்றத்தில் வேண்டுமானால் இந்திய களை கட்டும்; ஆனால், அவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்கர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே செட்டில் ஆனவர்கள். சில ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் இந்திய அமெரிக்கர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டாமவரே இப்போது 25 லட்சம் பேர் வரை உள்ளனர்.

இதுபோல பிரிட்டனிலும் பல தலைமுறைகளுக்கு முன் சென்று செட்டில் ஆனவர்கள் பிரிட்டிஷ் இண்டியன்; சமீப ஆண்டுகளில் போய் செட்டில் ஆனவர்கள் இண்டியன் பிரிட்டிஷ். இவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என்று தகவல் சொல்கிறது.

இந்தியாவுக்கு போயிடலாம்!

சமீபகாலமாக வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். வரலாற்று, கலாசார, பாரம்பரிய இடங்கள், கோவா போன்ற பீச்
பகுதிகள், மகாபலிபுரம் போன்ற மகத்தான இடங்களைப் பார்க்கிறவர்கள், நமது வாழ்க்கை முறையையும் பார்த்து வியந்து போகின்றனர். காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பது முதல் இரவு படுப்பது வரை இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், விழாக்கள், சடங்குகள், சமுதாய அமைப்புகள் எல்லாம் வெளிநாட்டவரை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர். இப்போது பல தலைமுறைகளுக்கு முன் போய் செட்டில் ஆன அமெரிக்க இந்தியர், பிரிட்டிஷ் இந்தியர்களுக்கும் அதே நினைப்பு வந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வீடு வாங்கிக் குடியேறியவர்களில் இவர்களின் எண்ணிக்கையும் அடங்கும் என்றால் வியப்பில்லை.

வேலைக்கு இங்கே வர்றாங்க!

மாநகராட்சி பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பட்டம் முடித்து, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று பலரும் அலையும் நிலையில், அமெரிக்க இந்தியர்கள் பலரும் இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் போதும்; இங்கே அளவு அதிக சம்பளம் அங்கும் கிடைக்கிறதே என்று நினைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்கள் கணிசமாக உள்ளனர். மும்பை, டெல்லி, பெங்களூரு தெருக்களில் இவர்களை பார்க்கலாம். இந்தியோ, தமிழோ சரிவர வராவிட்டாலும், பல தலைமுறைக்கு முன் இவர்கள் மூதாதையர் இந்த மொழி பேசியவர்கள்தான். தடுக்கியாவது பேசி பழகி வருகின்றனர்.

அமெரிக்காவில், அமெரிக்கனாக பிறந்த அமெரிக்க இந்தியர் நிலை மட்டுமல்ல... பத்து, இருபது ஆண்டுக்கு முன் போய் செட்டில் ஆன இந்திய குடும்பத்தினருக்கும்கூட இதே நினைப்புதான்! சம்பாதித்தது போதும் என்று அவர்களில் பலரும் சென்னை, பெங்களூரு என்று நகரங்களிலும், மதுரையை தாண்டிய கிராமங்களிலும் வீடு, நிலங்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். இவர்கள் திரும்பி வர காரணம் வேறு; இனியும் தங்கள் பிள்ளைகள் அமெரிக்காவில், பிரிட்டனில் வளர்ந்தால், அவர்களின் பழக்கவழக்கம்தான் வரும்; அப்புறம் சந்ததியே மாறி விடும் என்ற பயம்தான் காரணம்.

ஐயோடா, இங்கேயுமா பர்கர்

கிழக்கு கடற்கரை சாலையில் போய்ப் பார்த்தால் சில அமெரிக்க, பிரிட்டிஷ் முகங்களை பார்க்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இந்தியர்கள். இங்கே வீடு வாங்கி குடியேறி இருப்பர். இவர்கள் தேடித் தேடி கீரை, காய்கறி என்று வாங்கி சாப்பிடுகின்றனர். பீட்ஸா, பர்கர் பக்கமே போக மாட்டார்கள். ‘‘அங்கேதான் பர்கர், பீட்ஸா என்று பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் சமாசாரங்களை சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது. இங்கே பார்த்தால் இவற்றை நம்மாட்கள் கொண்டாடுகின்றனர்; ஒரு தமாஷ் தெரியுமா? அமெரிக்கர்கள் கூட, காலையில் கேரட் போன்ற காய்கறிகளைத்தான் பச்சையாக சாப்பிடுகின்றனர்’’ என்கிறார் அவர்களில் ஒருவர்.

ஃபாரின் கனவு தேவைதான்; ஆனால் நாம் பலவற்றை இழப்போம் என்பது மட்டும் உறுதி என்று இவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது.

Post a Comment

0 Comments