மெயில், மேப் சேவையையும் நிறுத்துகிறது கூகுள்


சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவின் சென்சார் நடவடிக்கையை எதிர்த்து, கடந்த 2009-ம் ஆண்டு முதல் கூகுள் தேடியந்திர சேவையை சீனாவில் நிறுத்திய கூகுள் நிறுவனம், இனி வரும் நாட்களில் சீனாவுக்கான ஜிமெயில், கூகுள் மேப்பிங் உள்ளிட்ட தனது அனைத்து சேவைகளையும் நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.

கூகுள் மேப்பிங் சேவைக்கான லைசென்ஸை புதுப்பிக்க நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சீன அரசு அறிவித்திருந்தது. ஆனால் கூகுள் இன்றுவரை விண்ணப்பிக்கவில்லை. நாளைக்குள் விண்ணப்பம் தரப்படுமா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜெஸிகா பாவல்.

கூகுளின் நிலை குறித்து கருத்து தெரிவித்த சீனப் பேராசிரியர் கிறிஸ்டோபர் டேங்க், "சீனாவின் விதிமுறைகளுக்கு ஏற்ப கூகுள் நடந்து கொள்ள வேண்டும். இதுவரை நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். சென்சார் விதிமுறைகளை முழுமையாக ஏற்க வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் இனி கூகுள் இருக்காது", என்றார்.

கூகுள் மேப்பிங் சேவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத மீறல்கள் இருப்பதாகவும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் எப்படி சீனாவில் ஓபியம் விற்று மக்களைக் கெடுத்ததோ, அதற்கு நிகரான வேலையை கூகுள் செய்வதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதனாலேயே புதிய லைசென்ஸ் கொள்கையை சீனா அறிவித்துள்ளது.

No comments: