கரூரின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் இருக்கும் தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என, தே.மு.தி.க., விருப்ப மனுதாரர் ரோஸ் கூறினார்.
தே.மு.தி.க., சார்பில், கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள திருநங்கை ரோஸ் வெங்கடேசன், நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும் இருக்கும் திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் முக்கிய தலைவராக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளார். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே எங்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அதன் ஈர்ப்பாலேயே தே.மு.தி.க.,வில் இணைந்துள்ளேன். நான் முதலில் இந்திய பிரஜை, அடுத்து தமிழகத்தின் பிரஜை, மூன்றாவதாக ஒரு பெண், கடைசியாக தான் திருநங்கையாக உணர்கிறேன். இதனால், அரசியலில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். கரூர் மாவட்டம், பாளையம் என்ற ஊரில் பிறந்த எனக்கு, கரூர் தொகுதியில் 15 ஆயிரம் பேரின் நிரந்தர ஆதரவு உள்ளது. கரூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் கிடையாது. மேலும், அங்குள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் மங்கிக் கொண்டே போகிறது.
அமெரிக்கா சென்று எம்.எஸ்., படித்துள்ள நான், கரூரின் முதுகெலும்பாக இருக்கும் தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். மேலும், திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடுவதும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதையும் லட்சியமாக கொண்டுள்ளேன். தொடர்ந்து தே.மு.தி.க.,வில் இடம்பெற்று முழு நேர அரசியல்வாதியாக வலம் வருவேன். பிரசாரம் செய்யவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு ரோஸ் கூறினார்.
0 Comments