"மரண தண்டனை மனோபாவம் நீடிக்கிறது"

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 105 பேருக்கும் மேலானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆயினும் அதில் யாருக்கும் இந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும் அம்னெஸ்டி இண்டர்னேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக இயக்கங்கள் நடத்தப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் மரண தண்டனைகள் அளிக்கும் போது அதிகரித்து வருகிறது என்று கூறிய இந்தியாவில் மரண தண்டனைகளுக்கு எதிரான தேசிய இயக்கத்தின் முன்னாள் அமைப்பாளர் எஸ்.வி.ராஜதுரை, இந்தியாவில் நீதித்துறை மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் மரண தண்டனையை சட்டப்புத்தகத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவமே இருப்பதாகக் கூறினார்.

1980ல் மரணதண்டனை இந்திய அரசியல் சட்டத்தின் 21வது பிரிவை மீறுகிறதா என்ற வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை அபூர்வத்திலும் அபூர்வமான வழக்குகளில் மட்டும் வழங்கவேண்டும் என்று கூறியது. ஆனால் எது அபூர்வத்திலும் அபூர்வமான கொலை என்பது பற்றிய வரையறை இல்லை என்றார் அவர்.

மரண தண்டனை எப்போதும் கொலைகளையோ அல்லது பாலியல் ரீதியான கொடும் குற்றங்களையோ தடுக்கும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல, இன்று ஒருவருக்கு ஒரு குற்றச்செயலுக்காகத் தரப்படும் மரண தண்டனை , பல ஆண்டுகள் கழித்து, வேறொரு இடத்தில் அதே மாதிரியான குற்றத்தை செய்யவிடாமல் தடுக்கும் என்று கூற முடியாது என்றார் ராஜதுரை.

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படாவிட்டாலும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அரிதாகவே இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட ராஜதுரை, இது இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் நிர்ப்பந்தங்களால் ஏற்படுகிறது என்றார். மேலும், கடந்த பத்தாண்டுகளில் பதவி வகித்த இரு இந்தியக் குடியரசுத் தலைவர்கள், மரண தண்டனைகளை நிறைவேற்ற ஒப்புதல் வழங்காததும் ஒரு காரணம் என்றார் ராஜதுரை.

No comments: