தேர்தல் கமிஷன் அதிரடி-பண பரிமாற்றம் முடக்கம்

தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவால் தமிழ்நாட்டில் பண பரிமாற்றம் முடங்கியது. இதனால் அரசியல் கட்சியினர் கலங்கிப் போய் உள்ளனர். பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தபோது தேர்தல் கமிஷன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி தேர்தலுக்கு முன்பே அங்கு அதிரடி வாகன சோதனை நடத்தி பண பரிமாற்றத்தை கட்டுப்படுத்தியது.

தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்தது. பணம் மற்றும் அன்பளிப்பு கொடுத்து வாக்காளர்களை இழுத்து விடலாம் என்று நினைத்த லல்லு பிரசாத் யாதவ் போன்றோரின் எண்ணம் அங்கு நிறைவேற வில்லை. கடைசியில் லல்லு பிரசாத் யாதவ் படுதோல்வியை சந்தித்தார். இதே பாணியை தமிழக தேர்தலிலும் தேர்தல் கமிஷன் கடைப்பிடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்தார். அசாமில் தீவிரவாதிகள் பிரச்சினை இருப்பதாகவும், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்தனர். தமிழக அதிகாரிகள் கூறும்போது, தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பிரச்சினை இருப்பதாகவும், அரசியல் கட்சிகள் பணம் கொடுப் பதை தடுக்கவேண்டும் என்றும் கூறினார்கள்.

இதையடுத்து தமிழக தேர்தலில் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டது. வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை தனி கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும், பிரசாரத்துக்கு செல்லும் போது 5 கார்களுக்கு மேல் செல்லக்கூடாது, நிறைய பேரை உடன் அழைத்து செல்லக்கூடாது, இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது, பொதுச் சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது, ஆரத்தி எடுப்போருக்கு பணம் வழங்கக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது.

திருமண மண்டபங்களை தேர்தலுக்கு பயன்படுத்தவும், ஸ்பீக்கரை கட்டிக்கொண்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டு ஓட்டு கேட்கவும், நடைபாதைகளை அடைத்துக் கொண்டு கொடி, தோரணம், பந்தல்கள் போடுவது போன்ற அநாகரீக செயல்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் அரசியல்வாதிகள் பந்தாவாக சென்று ஓட்டு கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலை கண்காணிக்க வெளி மாநில பார்வையாளர்கள், போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது தமிழ்நாட்டுக்கு வந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் மேலாக தேர்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி வாகன சோதனைகள் நடத்தவும், அரசியல் வாதிகள் வேறு வழியில் பணம் எடுத்துச் செல்வதை தடுக்க அடகு கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை கண்காணிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

அரசியல் கட்சிகள் நூதன முறையில் டோக்கன், ரசீது கொடுத்து அதற்கு தேர்தல் முடிந்த பின்பு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் போன்ற ரகசிய நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உத்தர விட்டது. இதன் ஒரு கட்டமாக கடந்த 5 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் இரவு பகலாக சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு கொடுக்க யார்-யார் பணம் கொண்டு செல்கிறார்கள், வேட்டி-சேலை மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்கிறார் போன்றவற்றை கண்காணித்து வருகிறார்கள். 5 நாட்கள் நடந்த சோதனையில் மட்டும் ரூ.20 கோடி அளவுக்கு பணம் வேட்டி, சேலை மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஏராளமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பக்கத்து மாநிலங்களில் இருந்து பணம், மதுபாட்டில்கள், ஆயுதங்கள் கடத்தப்படு வதும் தடுக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் தேர்தல் தொடங்கும் முன்பே இதுபோன்றதொரு சோதனை நடந்ததில்லை. இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது முடங்கிப்போய் உள்ளது. பணத்தை அள்ளி வீசி ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்று நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். அரசியல் தலைவர்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களை டிஜிட்டல் காமிரா மூலமும், வீடியோ காமிரா மூலமும் படம் எடுக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், ஊழியர்களும் களத்தில் இறங்க உள்ளனர்.

இதனால் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பது தடுக்கப்படும். அத்துமீறல்களும் கண்டுபிடிக்கப்படும். பணம் கொடுத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற அரசியல் கட்சிகளின் எண்ணத்துக்கு தேர்தல் கமிஷன் முற்றுப்புள்ளி வைத்து உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எப்படி சந்திப்பது என்று தெரியாமல் கலங்கிப்போய் உள்ளன. வாகன சோதனை தேர்தல் முடியும் வரை நீடிக்கும். இதன் மூலம் குற்றச்செயல்கள் நடைபெறுவதும் ஆயுதங்கள் கடத்தப்படுவது, பதுக்குவதும் கட்டுப்படுத்தப்படும். தேர்தல் அமைதியாக நடைபெற வாகன சோதனை நடவடிக்கை உதவும்.

தேர்தல் கமிஷனின் இந்த கெடுபிடிகளுக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் இந்த நேரத்தில் தேர்தல் கமிஷனின் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிப்பாக தேவை, இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதையும் தேர்தல் கமிஷன் கண்காணிக்கவேண்டும் என்று வாக்காளர்கள் தெரிவித்தனர்.

No comments: