உலகத்தில் உள்ள தாவர வகைகளை பாதுகாக்க தாவர விதைகள் காப்பகம்


உலகின் மிக முக்கியமான விதை காப்பகங்களில் ஒன்றான ஸ்வால்பார்ட் காப்பகம், தனது மூன்றாவது ஆண்டு பூர்த்தியை எட்டியிருக்கின்றது.
94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.விதைகளின் வடிவத்தில் இந்த அரியவகைத்தாவரங்களின் டீ.என்,ஏ மரபணுக்களை களஞ்சியப்படுத்தி வைப்பது, அவற்றின் எதிர்கால இருப்புக்கும் புதியவகை இனவிருத்திகளை கண்டறிவதற்கும் மிக அத்தியாவசியமானது என்கிறார் அமெரிக்க தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த விஞ்ஞானி கிரிஸ்டின் ஃப்லனாகன்.

நோர்வேயின் உறைந்த பனிவெளியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் உலக விதைகள் காப்பகம், எந்தவொரு அவசரநிலையின் போதும் உலக உணவு விநியோகத்துக்கு பாதி்ப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வதேச முயற்சி.

காப்பகத்துக்குச் செல்லும் பெரு நாட்டு உருளைக் கிழங்கு பெருவைச் சேர்ந்த லிமா வகை பாலைவன அவரையினங்கள், எதியோப்பாவைச் சேர்ந்த தாவரயினங்கள், பாலைவன பருப்புவகைகள் மற்றும் சீனாவின் சோயா அவரையினங்கள் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்க விவசாயத்துறை அதிகாரிகளால் 1920களில் சேகரிக்கப்பட்ட விதையினங்களும் இப்போது இந்த வடதுருவத்து ஸ்வால்பார்ட் காப்பகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தாவரயினங்களில் அடங்குகின்றன.

பல பாகங்களிலும் உள்ள விதை வங்கிகள் பல இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இப்போது இந்த உலக விதைகள் காப்பகம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எகிப்தில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, பாலைவன தாவரயினங்களில் ஈடுசெய்ய முடியாத அரியவகை மரபணுக்கள் சேமிக்கப்பட்டிருந்த இரண்டு விதைவங்கிகள் நாசகாரர்களினால் சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஆறுலட்சம் வகையான விதைகள் ஏற்கனவே சேமித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, ஸவால்பார்ட் உலக விதைகள் காப்பகத்தில் காட்டு தாவர இன வகைகளை தேடிப்பெற்று சேமித்துவைக்கும் தேவைக்காக நோர்வே அரசாங்கம் 50 மில்லியன் டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது.

No comments: