உலக கோப்பை கிரிக்கெட்டில் சூதாட்டம்


இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹளா ஜெயவர்த்தனே மற்றும் திலன் சமரவீரா ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான ஐடிஎன் டிவி செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்தது. அப்போட்டியில் ஜெயவர்த்தனேவும், சமரவீராவும் சீக்கிரமே அவுட்டாகி விட்டனர். இதுதான் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த டிவி ஒளிபரப்பிய விமசுமா என்ற நிகழ்ச்சியில் கூறுகையில், உள்ளூரைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் இந்தப் போட்டி மீது ரூ. 20 லட்சத்திற்குப் பந்தயம் கட்டியிருந்தார். ஜெயவர்த்தனேவும், சமரவீராவும் வேண்டும் என்றே இந்தப் போட்டியின் முடிவை மாற்றும் வகையில் ஆடினர். ஜெயவர்த்தனே 2 ரன்களும், சமரவீரா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

இந்த டிவி செய்தி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் புகாரை இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இதுகுறித்து வாரியம் கூறுகையில், அந்த டிவி செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இது வருத்தம் தருவதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா ஸ்பாட் பிக்சிங் செய்ததா?

இதற்கிடையே ஆஸ்திரேலியாவும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மோதிய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஹாதினும், வாட்சனும் மகா நிதானமாக ஆடினர். வழக்கத்திற்கு விரோதமான அவர்களது கட்டையாட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. எந்த பெரிய அணியிடமும் கூட இவ்வளவு கட்டை போட்டதில்லை ஆஸ்திரேலியா என்று சொல்லும் வகையில் அவர்களது ஆட்டம் இருந்தது.

எனவே இவர்கள் இருவரும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சந்தேகமடைந்துள்ளது. இதையடுத்து இருவரது ஆட்டத்தையும் ஆய்வு செய்ய ஐசிசி தீர்மானித்துள்ளதாம்.

'டை'யைக் கணித்த வார்ணே:

இதேபோல, பெங்களூரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி டை ஆகும் என்று முன்பே ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் ஷான் வார்னே கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் தற்போது ஐசிசி கவனத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அடுத்தடுத்து மூன்று போட்டிகள் சர்ச்சையில் சிக்கியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Post a Comment

2 Comments