லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை


லிபியாவில் அதிபர் கேர்ணல் மம்மூர் கடாஃபிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டிரு்பபதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளியறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மீ்ட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதை அறிவித்தார்.

"லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு கப்பல்கள் அங்கு சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கப்பல் ஏற்கெனவே எகிப்தை அடைந்துவிட்டது. அங்கிருந்து பென்காசி நகருக்குச் செல்லும். பென்சாகி விமான நிலையம் குண்டு வீசித் தாக்கப்பட்டிருப்பதால், அதிக அளவில் கப்பல்களை ஏற்பாடு செய்து இந்தியர்களை மீட்பதுதான் சரியாக இருக்கும் என இந்தியத் தூதரும் தெரிவித்திருக்கிறார். அதனால், அதிக கப்பல்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றார் அமைச்சர் கிருஷ்ணா.முன்னதாக, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த அமைச்சர் கிருஷ்ணா, லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.லிபியா மட்டுமன்றி, ஏமன், பஹ்ரைன் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியத் தூதரகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.மேலும், மிகுந்த அத்தியாவசியமாக இருந்தால் தவிர, லிபியா, ஏமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், மீனவர் பிரச்சினை குறித்தும் அமைச்சர் கிருஷ்ணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்றதாகவும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நேரடியாக கொழும்பு சென்று இந்திய அரசின் கவலையை வெளிப்படுத்தியதுடன், அதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.சமீபத்தில், 136 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டு, இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்தும் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்ட அமைச்சர் கிருஷ்ணா, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதுதான், அவர்கள் கைது செய்யப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் முக்கியக் காரணம் என்று இந்த அவைக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.ஆனால், எல்லை தாண்டிச் செல்கின்ற காரணத்தால் அவர்கள் மீது பலப்பிரோயகத்தை உபயோகிப்பது முறையல்ல என்று கிருஷ்ணா குறிப்பிட்டார்.அதே நேரத்தில், இலங்கை மீனவர்கள் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் அந்தப் பகுதியில் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை நிலவரத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

மீன் வளம் தொடர்பான இரு நாட்டு கூட்டு செயல்பாட்டுக் குழுக்களும் மார்ச் மாதம் கூடிப் பேச உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், இரு நாட்டு மீனவர் அமைப்புக்களும் தொடர்ந்து ஒருங்கிணைப்புக்களை வலுப்படு்த்திக் கொள்ள வேண்டும் என்றும், அது நிலைமை சீரமைக்க உதவிகரமாக இருக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

Post a Comment

0 Comments