வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவதை தடுக்க தேர்தல் கமிஷனின் அதிரடி

"வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதையும், பண வினியோகத்தையும் தடுக்க பல்வேறு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன' என்று, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது தொடர்பாக, அ.தி.மு.க., வக்கீல் முத்துராஜ், தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பியிருந்தார். இத்துடன் இவர், சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கும் தொடுத்து இருந்தார். அந்த வழக்கில், இவரது மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு, தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவருக்கு இந்திய தேர்தல் கமிஷனின் தபாஸ் குமார் அனுப்பியுள்ள விளக்கம் வருமாறு: ஓட்டுப்பதிவு உட்பட தேர்தல் நடைமுறைகளை அனைத்து மட்டங்களிலும் கடுமையாக கண்காணிக்க, தேர்தல் கமிஷன் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளது. இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், ஒருங்கிணைக்கப்பட்டு, அனைவரது பார்வைக்காக, தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பதட்டமான ஓட்டுச்சாவடிகளை வீடியோ மூலம் பதிவு செய்யவும், மைக்ரோ பார்வையாளர்களை நியமிக்கவும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் ஏற்கனவே தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கள்ள ஓட்டுக்களை தடுக்க, புகைப்பட வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்தல் உட்பட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தேர்தல் சட்டப்படி, ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஏஜன்ட் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம். அனைத்து தேர்தல் நடைமுறைகளும், பூத் ஏஜன்ட்கள் முன்னிலையில் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகின்றன. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, இந்திய குற்றவியல் சட்டப்படி குற்றம். லஞ்சமாக பொருட்கள் கொடுப்பது, பணம் கொடுப்பது போன்ற புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீஸ் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளையும், பண வினியோகத்தையும் பல்வேறு கண்காணிப்புக் குழுக்கள் மூலம் மிக உன்னிப்பாகவும், கடுமையாகவும் கண்காணிக்க, கடுமையான விதிகளை தேர்தல் கமிஷன் அமல்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரத்தையும் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1 Comments

என்ன சொன்னாலும் இதை நிறுத்தமுடியாது...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html