கைதானதாலேயே ராசா குற்றவாளியல்ல!????????????


முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கைதான பின்னணியில், வியாழனன்று கூடிய திமுக பொதுக்குழு, கைது செய்யப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளியாக மாட்டார் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதேசமயம், அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினையில் ராஜா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தயவுதாட்சண்யமின்றி அவர்மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று திமுக தலைவர் மு கருணாநிதி கூறியதை நினைவுகூர்ந்த அந்த தீர்மானம், கைது செய்யப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்பதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும், இந்த பிரச்சினையைப் பயன்படுத்தி திமுக மீது களங்கம் சுமத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்ச்சாட்டும் அந்த தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனமும் தெரிவித்திருக்கிறது.

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்கள், ராசாவின் கைதால் மத்தியில் ஆளும் காங்கிரசிற்கும் திமுகவிற்கும் இடையேயான கூட்டணி பாதிக்கப்படுமா என்ற கேள்வி, முதல்வர் கருணாநிதியின் மகன் மத்திய அமைச்சர் மு க அழகிரி கட்சிக்குள் அதிக அதிகாரம் கோருவதாக வெளியாகும் ஊடக செய்திகள் என்று பரபரப்பான சூழலில் கூடிய திமுக பொதுக்குழுவின் முடிவில் கருணாநிதி செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார். பொதுவாக பொதுக்குழு முடிந்தவுடன் அவர் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இன்று அவ்வாறு சந்திக்கவில்லை.

“கலங்க வைத்த சோதனை”

ஆனால் முதல்வரின் பொதுக்குழு உரையின் நகல் பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அவர் பொதுக்குழு கூட்டப்படுகின்ற நேரத்தில் வழக்கம் போல் வந்துள்ள ஒரு சோதனை இன்றைய தினம் நம்மையெல்லாம் ஓரளவு கலங்க வைத்திருக்கிறது, அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது, நம்முடைய மகிழ்ச்சியை, ஆர்வத்தை குறைக்கின்ற நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது, ஆனால் உண்மையினுடைய ஒளி விரைவில் தெரியத்தான் போகிறது என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிரவும் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து தேர்தல் வெற்றிக்காக இணைந்து செயலபட வேண்டுமெனவும் அவர் வேண்டிக்கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளுடன் சில பெயர் குறிப்பிடப்படாத பத்திரிகைகளையும் இணைத்து அவை இன உணர்வில் செயல்படுவதாகவும் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி அஇஅதிமுக தலைவி ஜெ ஜெயலலிதாவை முதல்வராக்க துடிப்பதாகக் குற்றஞ்சாட்டி, பொதுக்குழு, கட்சியினரை அத்தகைய பத்திரிகைகளை வாங்கிப்படிக்கவேண்டாம் என அறிவுறுத்துகிறது.
தமிழக மீனவர் நலன் காக்கப்படும் வகையில் கச்சத்தீவு குறித்து புதிய ஒப்பந்தம் வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, மாநில சுயாட்சி இப்படி வேறு பல தீர்மான்ங்களும் இயற்றப்பட்டன.

சிபிஐ காவலில் ராசா

இதற்கிடையே, புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ள, ராசா மற்றும் இரு அதிகாரிகளை ஐந்து நாட்கள் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ராசா, அவரது தனிச் செயலர் சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் பேரஹுரா ஆகிய மூவரும் புதன்கிழமை சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்கள்.

சட்ட நடைமுறைகளின்படி, வியாழனன்று பிற்பகல், அவர்கள் மூவரும் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகிலேஷ், ராசாவிடம் இதற்கு முன்பு நான்கு முறை விசாரணை நடத்திய போது, அவர் நேரடியாகப் பதிலளிக்காமல் மழுப்பலாகவே பதிலளித்ததால், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள ஏதுவாக, ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசின் விதிமுறைகளுக்கு எதிராக ராசா செயல்பட்டதால், அலைக்கற்றை ஒதுக்கீட்டி்ல் முறைகேடு நடந்ததாகவும், தொலைத் தொடர்புத்துறையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிறுவனங்களுக்கும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில், அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

ராசா மற்றும் சந்தோலியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, சிபிஐ வாதத்தை எதிர்த்தார். ராசா ஏற்கெனவே நடந்த விசாரணையில் சிபிஐக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோருவது, பத்திரிகையாளர்களை சந்தோஷப்படுத்தவா அல்லது யாரைத் திருப்திப்படுத்துவதற்கு? என்று ரமேஷ் குப்தா கேள்வி எழுப்பினார்.

ராசா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன்தான் அதைச் செயல்படுத்தியிருக்கிறார் என்றும், அவர் மீது சிபிஐ கூறும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விதிமுறைகளுக்கு மாறாக உரிமங்களை ஒதுக்கியதில் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படை இருப்பதாகவே தெரிகிறது. எனவே, குற்றச்சாட்டின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, சிபிஐ-யின் கோரிக்கை நியாயமானது என்று கூறி, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

source.bbc

Post a Comment

0 Comments