வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகை


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரு வகையான அடையாள அட்டைகளை ஒன்றாக இணைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

OVERSEAS CITIZENS OF INDIA – OCI மற்றும் PERSONS OF INDIAN ORIGIN – PIO ஆகிய இரு வகையான அட்டைகள் தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழையவும், இந்தியாவில் வர்த்தக மற்றும் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் எளிதில் ஈடுபடவும் வசதியாக அந்த இரு அட்டைகளையும் ஒன்றாக மாற்ற முடிவெடுத்திருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்று வரும் 9-வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் இன்று சனிக்கிழமை பேசும்போது மன்மோகன் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.பிஐஓ அட்டை என்பது, நிரந்தரமாக வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களுக்கானது. அவர்கள் இந்தியா வருவதற்கும், முதலீடு செய்வதற்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அட்டை 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தியா வர விசா தேவையில்லை. அத்துடன், பல்வேறு பொருளாதார மற்றும் கல்வி தொடர்பான சலுகைகள் கிடைக்கும்.

அதேபோல், ஓசிஐ அட்டை என்பது, வாழ்நாள் விசாவைப் போன்றது. இந்தியர்கள் தாங்கள் குடியிருக்கும் வெளிநாடு, இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதித்தால், இந்த அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.

வேலை தேடி வெளிநாடுகளில் குடியேறுவோரின் நலன் குறித்து இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாக மன்மோகன் சிங் தெரிவித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனை மேம்படுத்துவதற்காக தற்போது 42 நாடுகளுக்கு மட்டும் அமல்படுத்தப்படும் நல நிதித் திட்டம், இனி அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல், அமெரிக்கா, கனடா, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய கலாசார மையங்களை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

No comments: