டைரக்டர் பாலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

டைரக்டர் பாலா தனக்கு பேசிய சம்பளத்தை கொடுக்கவில்லை என்று நான் கடவுள் படத்தில் நடித்த மாற்றுத்திறனாளி பரபரப்பு புகார் கூறியுள்ளார். பாலாவுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த படம் நான் கடவுள். மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய இந்த படத்தில் மவுன சாமியாராக நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. கோவையை சேர்ந்த இவர் பிறக்கும்போதே இரண்டு கைகளும், இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகளும் இல்லாமல் பிறந்திருக்கிறார். இருந்தாலும் தன்னம்பி‌க்கையுடன் வளர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு பாட்டு மேல் இருந்த ஈர்ப்பு காரணமாக, பாட்டு கற்று, கச்சேரிகளை நடத்தி பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

இதுவரை 2500 மேடை கச்சேரிகளை நடத்தியிருக்கும் இந்த தன்னம்பிக்கை நட்சத்திரத்திற்கு இற்போது 65 வயதாகிறது. டைரக்டர் பாலா தன்னை ஏமாற்றியது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

இரண்டு கைகளும், இடுப்பு கீழ் உடல் உறுப்புகளும் இல்லாமல் பிறந்திருந்தாலும் எனக்கு தன்னம்பிக்கை அதிகம். அத‌னால் வீட்டில் இருந்தபடியே 12ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் பாட்டு கற்றுக் கொண்டு கச்சேரிகள் நடத்தி என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை நான் தேர்தலில் ஓட்டு போட சென்றபோது பத்திரிகையாளர்கள் என்னை படம் பிடித்து பேப்பரில் வெளியிட்டனர். அதைப் பார்த்துவிட்டு இயக்குனர் பாலாவின் அலுவலகத்தில் இருந்து என்னைத் தேடி வந்தார்கள். பாலா எடுக்க இருக்கும் புதிய சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கணும். அதற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாகத் தருகிறோம், என்று கூறினர். பினனர் இயக்குநர் பாலாவும் என்னை தொடர்புகொண்டு கதாபாத்திரத்தை விளக்கினார்.

அவருடைய படங்கள் சிறந்தவை என்று என்னுடைய அண்ணன் குழந்தைகள் கூறினார்கள். நானும், நடித்துதான் பார்க்கலாமே, அதன்மூலம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்படுமே என்ற நோக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க சம்மதித்தேன். முதலில் அட்வான்சாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். மூன்று வருடங்களுக்கு அக்ரிமெண்ட் போட்டவர்கள், படம் முடியும் வரை படத்தை பற்றி யாரிடமும் கூறக்கூடாது, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது, என்னுடைய புகைப்படங்கள் எதுவும் வெளிவரக்கூடாது என்று பல கண்டிஷன்கள் போட்டார்கள். அனைத்தையும் ஒப்புக்கொண்டு நடிக்கத் தயாரானேன்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மலைப் பகுதியில் ஷ¨ட்டிங் நடந்தது. கரடு முரடான மலைப்பகுதியில் என்னுடைய உதவியாளர் என்னைத் தூக்கிக்கொண்டு செல்வார். மூன்று வருடங்களில் ஒரு சில நாட்கள் மட்டுமே என்னை வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். படத்தில் என்னைப் போன்றவர்களும், மன வளர்ச்சி குன்றியவர்களும், குழந்தைகளும் நூற்றுக்கணக்கானவர்கள் நடித்தனர். மூன்று வருடங்கள் முடிந்து, படமும் வெளிவந்தது. ஆனால், எனக்குத் தர வேண்டிய மீதம் 85 ஆயிரம் ரூபாய் மட்டும் கிடைக்கவில்லை.

பலமுறை இயக்குநர் பாலாவை தொடர்புகொண்டேன். ஆனால், அவருடைய உதவியாளர்கள் மட்டும்தான் என்னிடம் பேசினார்கள். கேட்கும் போதெல்லாம், இன்று தந்துவிடுவோம், நாளை தந்துவிடுவோம் என்ற பதில்தான். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. படத்தின் கருவே, என்னை போன்றவர்களும் மனநலம் குன்றியவர்களும் தீய சக்திகளிடம் சிக்கி, படும் அவஸ்தை என்ன என்பதுதான். இதுபோன்ற படம் எடுத்த பாலாவே இப்படி செய்தால், என்ன சொல்வது? ஏற்கெனவே உடலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்களின், உள்ளமும் பாதிக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அந்த பேட்டியில் கிருஷ்ண மூர்த்தி கூறியுள்ளார்.

No comments: