அடுத்தவரை புரிந்து கொள்வது எப்படி ?

அடுத்தவரைப் புரிந்து கொள்ளாமலேயே விமரிசிப்பது பொதுவாக எல்லோருக்கும் கை வந்த கலை. ’அப்படி செய்திருக்க வேண்டும், இப்படி இருந்திருக்க வேண்டும், இப்படி சொல்லியிருக்கக் கூடாது, அப்படி செய்திருக்கக் கூடாது’ என்று வாயிற்கு வந்த படி கருத்துகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அடுத்தவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையாக ஒருவரைப் புரிந்து கொள்ள அவருடைய நிலைமையில் தன்னை இருத்திப் பார்க்க வேண்டும். நேர்மையாக அப்படி இருத்திப் பார்த்தால் மட்டுமே அந்தந்த நிலைமையின் சங்கடங்கள், சிக்கல்கள், சந்திக்க வேண்டியிருக்கும் பிரச்னைகளின் தன்மை எல்லாம் விளங்கும்.

பிரபல டைரக்டர் மிருணாள் சென்னின் பழைய திரைப்படமான “ஏக் தின் பிரதி தின்” (ஒரு நாள்-தினம் தினம்) ஒரு சாதாரண நிகழ்வை மிக அழகாக சித்தரிக்கும் திரைப்படம்.

கல்கத்தா நகரத்தில் வேலைக்குச் சென்ற ஒரு பெண் இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் தான் அந்த வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவள் திரும்பி வராமல் கடிகாரம் நகர நகர குடும்பத்தினர் அனைவரும் கலவரம் அடைய ஆரம்பிக்கிறார்கள். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பயப்படுகிறார்கள். இவர்களோடு அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கொள்கிறார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பயமும், குழப்பமும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. அண்ணன் சவக்கிடங்கு வரை கூட போய் பார்த்து விட்டு வருகிறான். பதட்டம் அதிகமாகி வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

கடைசியில் அந்தப் பெண் நள்ளிரவில் வீடு திரும்புகிறாள். அவளைப் பார்த்ததும் நிம்மதி அடைந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணிடம் யாரும் ”என்ன ஆயிற்று, ஏன் தாமதமாக வந்தாய்?” என்று கேட்கவில்லை. அவளே கேட்கிறாள். “ஏன் நான் தாமதமாய் வந்தேன் என்று அறிந்து கொள்வதில் உங்களில் யாருக்குமே அக்கறையில்லையா?”

அந்த கேள்விக்கு அந்தத் திரைப்படத்தில் கடைசி வரை பதில் சொல்லப் படுவதேயில்லை. அந்தத் திரைப்படத்தில் அவள் வராவிட்டால் தங்கள் நிலை என்ன என்ற சுயநலம் கலந்த பயமும், ஆதங்கமும் குடும்பத்தினரிடம் காட்டப்படுகிறது. அவள் வந்து விட்டாள் என்றான பின் அனைவரும் பாதுகாப்பை உணர்கிறார்கள். அத்தோடு அந்த நிகழ்வு மறக்கப்பட்டு விடுகிறது. மறு நாள் காலை எழுந்து அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஏக் தின் பிரதி தின் - ஒரு நாள் தினம் தினம்..........

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் மனநிலையும், பாசாங்குகளும் மிக அழகாக இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுகின்றன.

இந்த திரைப்படத்தைக் காண்பவர்களை மிகவும் யோசிக்க வைத்த விஷயம் ஏன் அவள் தாமதமாக வந்தாள் என்பதை அறிந்து கொள்வதில் அந்தக் குடும்பத்தினர் யாருக்குமே உண்மையான அக்கறை இல்லாதது தான். அந்த திரைப்படத்தில் அந்தக் குடும்பத்தினர் சுயநலமிகள் என்பது போல சித்தரிக்கப்பட்டிருந்ததால் அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதாகத் தோன்றினாலும் இந்த பண்பு சுயநலமிகளாக அல்லாத குடும்பங்களில் கூட அதிகமாய் பார்க்க முடிகிறது.

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, ஒரு மனிதர் திடீர் என்று வித்தியாசமாக நடந்து கொண்டால் விமரிசனம் எழுகிற அளவுக்கு, ஏன் அப்படி நடந்து கொண்டார் என்ற காரணம் அறிய முற்படுகிற எண்ணம் பெரும்பாலும் எழுவதில்லை. யாருமே காரணம் இல்லாமல் வித்தியாசமாக நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படை புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏனோ அப்படி நடந்து கொள்கிறார் என்ற அலட்சியமோ, வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்கிறார் என்கிற அபிப்பிராயமோ பிரதானமாக மற்றவர் மனதில் எழுகிறதைத் தான் எல்லா இடங்களிலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

தங்களுடைய எதிர்பார்ப்பின் படியெல்லாம் ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனிதர்கள் அவர் அப்படி நடந்து கொள்ளா விட்டால் அதற்கு உண்மையில் சரியான காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்கிற ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டுக் கொள்ள பெரும்பாலும் தவறி விடுகிறார்கள். முதலில் சொன்னது போல அவருடைய நிலையில் தன்னை இருத்திப் பார்க்கும் சிரமத்தையும் யாரும் எடுத்துக் கொள்வது அபூர்வமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அந்த அலட்சியத்தாலேயே நியாயமற்ற விமரிசனங்கள் மடை திறந்த வெள்ளம் போல் கிளம்புகின்றன.

அதிகமாக விமரிசிப்பவர்கள் உருப்படியாக எதையும் செய்தவர்களாக இருப்பதில்லை. காலில்லாதவன் ஓட்டப்பந்தயத்தை விமரிசிப்பது போலத் தான் இவர்களுடைய விமரிசனங்கள் இருக்கின்றன. இவர்கள் இது வரை செய்யாத, இனியும் என்றுமே செய்யப் போகாத ஒரு செயலை, தெரிந்த விதத்தில் யாராவது கஷ்டப்பட்டு செய்து வந்தால் அதில் ஆயிரம் குறைகள் சொல்வார்கள்.

இது போன்ற ஆசாமிகளை ஒவ்வொரு குடும்பத்திலும், அலுவலகத்திலும், சமூகத்திலும் நாம் தாராளமாகப் பார்க்கலாம். இவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க முன் வர மாட்டார்கள். பொறுப்பில் இருப்பவர்களுக்கு உதவவும் முன் வர மாட்டார்கள் ஆனால் அது ஏன் ஆகவில்லை? இதை ஏன் செய்யவில்லை? என்ன தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்? போன்ற கேள்விகள் சரமாரியாக இவர்கள் வாயிலிருந்து வரும்.

இது போன்ற பொறுப்பற்ற நபர்களை அலட்சியம் செய்வது தான் யாரும் இவர்களுக்கு அளிக்கக் கூடிய சரியான பதில்.

ஆனால் இந்த அளவு மோசமாக இல்லாமல் இருந்தாலும் கூட நம்மில் பலரும் அறியாமையால் இந்த தவறைச் செய்கிறோம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் எத்தனையோ வீடுகளில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்யும் குடும்பத் தலைவிகளின் வேலைப் பளுவை வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலும் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். அலுவலகத்திற்குப் போய் செய்வது தான் உண்மையான வேலை, வீட்டு வேலை எல்லாம் பெரிய விஷயம் அல்ல என்று பொதுவான அபிப்பிராயம் பலரிடமும் நிலவுகிறது.

எனக்கு அப்படி ஒரு குடும்பத்தைத் தெரியும். வீட்டில் அனைவரும் வேலை, படிப்பு என்று வெளியே போய் விடுபவர்கள். அவர்கள் காலை வெளியே செல்லும் முன் சமையல் செய்து அவர்களுக்கு மதியத்திற்கு டிபன் பாக்சிலும் போட்டு அனுப்ப வேண்டும். சமையல் மட்டுமல்லாமல் துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வேலைகளும் அந்தக் குடும்பத் தலைவி தான் செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் ஒரு துரும்பை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு எடுத்து வைப்பவர்கள் அல்ல. வேலை செய்தும், படித்தும் களைத்துப் போனவர்களாக தங்களை நினைத்துக் கொண்டவர்கள் எப்போதுமே அந்தத் தாயிற்கு ஓய்வே கிடையாது என்பதை என்றும் எண்ணிப் பார்த்ததில்லை.

வயதான காலத்தில் அந்தக் குடும்பத் தலைவி வேலைப் பளு அதிகமாகி ஏதாவது கத்தினால் அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு ஒத்தாசை செய்வதற்குப் பதிலாக “ஏன் சும்மா கத்திக் கொண்டே இருக்கிறாய். வீட்டுக்குள்ளே வருவதற்கே எனக்கு பிடிக்கவில்லை” என்று பிள்ளைகள் சொன்னதை பல முறை கேட்டிருக்கிறேன்.
ஒரு நாள் அந்தத் தாய் திடீரென்று இறந்து போனார். அதன் பிறகு அந்தக் குடும்பத்தினர் அந்த வேலைகளுக்கு வேலையாள் ஏற்பாடு செய்தனர். கை நிறைய சம்பளம் தந்தும் அந்தத் தாயின் வேலையில் பாதி வேலை கூட அந்த வேலைக்காரியிடம் அவர்களால் வாங்க முடியவில்லை. ஏதாவது திட்டினால் அவளும் வராமல் போய் விடப் போகிறாள் என்று பயந்து பாதி வேலைகளை இப்போது அவர்கள் தாங்களே செய்து வருகிறார்கள். இப்போது அனைவருக்குமே அந்தத் தாயின் அருமை புரிகிறது. அந்த தாய் இறக்கக் காரணமான உடல் உபாதை அவருக்கு ஏற்பட்ட பின் தான் அடிக்கடி கோபப்பட்டு கத்தியிருக்கிறார் என்பது பிறகு தான் அவர்களுக்குப் புரிந்தது. இதுவே அவர் இருக்கும் போது புரிந்திருந்தால், அந்தத் தாயிற்கு சில விதங்களிலாவது ஒத்தாசையாக இருந்திருந்தால், அந்தத் தாயிடம் வாயிற்கு வந்த படி பேசி காயப்படுத்தாமல் இருந்ததிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

ஒருவர் இருக்கும் போது அவர்களைப் புரிந்து கொள்ளும் சிரமத்தை நாம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அது போல யாரை விமரிசனம் செய்கிறோமோ அவர்கள் நிலை நமக்கும் வந்தால் ஒழிய அவர்களையும் நாம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். இப்படிக் காலம் தாழ்ந்து புரிந்து கொள்வதை விட முன்பே புரிந்து கொள்ள முடிவதில் தான் உண்மையான பக்குவம் இருக்கிறது.

அந்தப் பக்குவம் வராத வரை மிருணாள் சென்னின் ‘ஒரு நாள்-தினம் தினம்’ திரைப்படத்தில் காட்டப்பட்டது போல சொந்த சௌகரியங்களை மட்டுமே எண்ணிப்பார்க்கும் சுயநலமிகளாகவே இருந்து விடும் தவறை நாம் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்திருப்போமாக!

thanks.என்.கணேசன்

Post a Comment

1 Comments

சிந்திக்க வைக்கும் பதிவு...!