மலாய் மொழிவழிக் கல்விக்கு எதிர்ப்பு

விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பிப்பதை நிறுத்திவிட்டு அவற்றை மலாய் மொழி மூலம் அடுத்த வருடம் முதல் கற்பிப்பதற்கான மலேசிய அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக மலேசிய பெற்றோரின் குழு ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இப்படி இந்தப் பாடங்கள் மலாய் மொழி மூலம் கற்பிக்கப்பட்டால், வேலை வாய்ப்புக்கான போட்டியில் தமது பிள்ளைகளுக்கு அது பாதகமாக அமையும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பான்மை மலாய் சமூகத்தின் வாக்குகளை பெறுவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின், ஒரு அரசியல் நகர்வு இது என்று சில பெற்றோர் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

மலேசிய பட்டதாரிகளின் ஆங்கில அறிவு போதாது என்று கடந்த காலங்களில் பல வேலை வழங்குனர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆகவே 2003 இல் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் கணிதமும், விஞ்ஞானமும் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மஹதீர் முகமட் உத்தரவிட்டார்.

உலகமயமாதலுடன் தாக்குப் பிடிப்பதற்கு இது மாணவர்களுக்கு ஓரளவு உதவும் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆனால், இந்த நடவடிக்கை திடுதிப்பென்று மேற்கொள்ளப்பட்டதால், ஆங்கிலத்தில் இந்தப் பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அதுவும் குறிப்பாக மலாய் சமூகத்தவர்கள் பெரும்பாலும் வாழ்கின்ற கிராமப் புறங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

அன்று முதல் கணிதம், விஞ்ஞானம் ஆகியயவற்றில் மாணவர்கள் பெறும் புள்ளிகள் மிகவும் குறைவடைவதாகக் கூறிய அரசாங்கம், ஆகவே அடுத்த வருடத்தில் இருந்து அந்தப் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படாது என்றும், மலாய் மொழி மூலமே கற்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த அறிவிப்புக்கு எதிராக மலேசிய பெற்றோர்களின் கல்விக்கான செயலணிக்குழு குரல் கொடுத்துள்ளது.

இந்தத் திட்டம் மலாய் தேசியவாதிகளை திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் ரீதியான முடிவு என்று கூறுகிறார் அந்த அமைப்பின் தலைவரான நூர் அசிமா அப்துல் ரஹீம்.

அரசாங்கக் கூட்டணி, கல்வி முறைமையை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கின்றது என்றும், குறிப்பாக 2008 ஆம் ஆண்டு தேர்தலில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அவர்கள் இழந்த பின்னர் அதில் அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் நூர் அசீமா கூறுகிறார்.

விஞ்ஞான, தொழில் நுட்பத்துக்கான மொழி என்றால் அது ஆங்கிலந்தான் என்று கூறுகின்ற அவர், 2020 ஆம் ஆண்டில் ஒரு வளர்ச்சி பெற்ற நாடாகத் திகழ்வது என்ற தமது இலக்கில் இருந்து மலேசியாவை இந்தத் திட்டம் பின் தங்கச் செய்துவிடுமோ என்று கவலையும் தெரிவித்தார்.

மாணவர்கள் இந்தப் பாடங்களை ஆங்கிலத்திலும் கற்பதற்கான தெரிவை அவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோருகிறார்