50 பைசாவுக்கு குறைவான காசுகள் செல்லாது

இந்தியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 30 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச நாணயம் என்பது ஐம்பது பைசாவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜுன் மாதம் 30 ஆம் தேதி முதல் 50 பைசா நாணயத்துக்கு குறைவான 25 பைசா போன்ற நாணயங்கள் செல்லாது என அறிவித்துள்ளது.

வர்த்தகம்,வியாபாரம், பொருட்களின் விலை போன்றவற்றிலும் கூட தொகையானது அருகில் உள்ள ஐம்பது பைசாவுக்கு நேர் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள 50 பைசாவுக்கு குறைவான நாணயங்களை திரும்ப பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் தனியே அறிக்கை வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.



இந்தியாவின் விவசாயத்துறை கடுமையான ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது

இந்தியாவின் விவசாயத்துறை கடுமையான ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று பிரபல வேளாண் விஞ்ஞானியும் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.சிறு விவசாயிகள் தங்களது தொழிலை மேற்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், நாட்டில் 50 சதவீதமானவர்கள் தங்களது தொழிலை கைவிடும் நிலையில் உள்ளனர் என்றும் இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

விவசாயக் குடும்பங்களிலிருந்து படித்து முன்னுக்கு வரும் இளைஞர்கள் மீண்டும் விவசாய செயற்பாடுகளுக்கு வருவதில்லை என்பதும் சிறு விவசாயிகளுக்கு தமது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும் இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன எனவும் டாக்டர் சுவாமிநாதன் கூறுகிறார்.

இந்தியாவிலிருக்கும் விவசாய நிலங்களில் 40 சதவீதமான நிலங்களுக்கே பயிர் செய்வதற்கு போதிய நீர் வசதிகள் கிடைக்கின்றன என்றும், பருவநிலை மாற்றம் காரணமாக மழை வீச்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றன எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமான ஊதியத்துக்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத வரையில் இப்பிரச்சினை தொடரவே செய்யும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இந்தியாவில் விவசாயத்துறை தற்போது நெருக்கடியான நிலையிலேயே உள்ளது எனவும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.

விவசாயம் செய்வதை விட தமது நிலங்களை விற்றுவிட்டால் அந்தப் பணத்துக்கு கிடைக்கும் வட்டி விவசாய வருமானத்தை விட கூடுதலாக இருக்கும் என்கிற எண்ணம் தற்போது சிறு விவசாயிகளிடம் மேலோங்கி வருகிறது எனவும் டாக்டர் சுவாமிநாதன் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக தமது ஆணையம் விவசாயிகளுக்கான தேசிய கொள்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தாலும் அது ஏட்டளவில் இருப்பதற்கும் நடைமுறைபடுத்துவற்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து எவ்வளவு விவசாயம் செய்ய முடியும் என்பதை விட அந்நிலத்திலிருந்து எவ்வளவு வருமானம் வரும் எனும் நோக்கில் மீண்டும் ஒரு விவசாயப் புரட்சி தேவை என்றும் அவர் கூறுகிறார்.

உயிரியல் தொழிற்நுட்பத்தை இந்திய விவசாயிகள் பெருமளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் கருத்து வெளியிடுகிறார்

Post a Comment

0 Comments