பூமியின் மையப்பகுதி குறித்த ஆய்வு துவக்கம்


பூமியின் மேல் அடுக்கில் உள்ளவற்றை ஆய்வு செய்து, பல்வேறு தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், பூமியின் பல ஆயிரம் கி.மீ., ஆழத்தில் உள்ள மையப்பகுதி குறித்த ஆய்வுகள் மிகக்குறைந்த அளவே நடந்துள்ளன. இதுகுறித்து கண்டுபிடித்தால், பூமி தோன்றிய விதம் பற்றி புதிய தகவல்களை அறிய முடியும். எனவே, பூமியின் மையப்பகுதியை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் வெகுவாக முயற்சித்து வருகின்றனர்.

பூமியின் மேற்பரப்பில் சில அடி ஆழம் வரை மணல் பரவியுள்ளது. அதற்கு கீழே பாறை அடுக்குகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு இடையே பூமியில் இறங்கும் மழை நீர் சேகரமாகிறது. அதையடுத்து, கடினமான பாறை அடுக்குகள் பல ஆயிரம் கி.மீ., ஆழத்திற்கு உள்ளன. அதற்கும் கீழே சூடான நிலையில் பாறைகளும், உலோகங்களும் கொண்ட எடை அதிகமுள்ள மையப்பகுதி அமைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தில், பூமியின் மையப் பகுதியை அறிந்து கொள்ள ஆய்வு நடந்து வருகிறது. நிலநடுக்கத்தை தெரிந்து கொள்ள "ஸ்பீட் கன்' உதவுகிறது. அதே தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, பூமியின் உட்பகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அதில், பல ஆயிரம் கி.மீ., மிக ஆழத்தில் உள்ள பூமி மையத்தின் வெளிப்பகுதி மெதுவாக சுற்றி வருகிறது என்று தெரிய வந்துள்ளது.

பூமியின் மேல் அடுக்கில் அமைந்துள்ள கண்டங்கள், கடல்கள், கண்டத்தட்டுக்கள் ஆகியவை, மையப்பகுதியின் மேல் அடுக்குகளாக அமைந்துள்ளன. மெதுவாக சுற்றி வரும் மையத்தின் வெளிப்பகுதியில் மாற்றம் ஏற்படும் போது, கண்டத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2,900 கி.மீ., ஆழத்தில் பாறைகள் திட நிலையில் மிக சூடாக காணப்படுகின்றன. அடுப்பு மீது பாத்திரத்தில் வைக்கப்படும் நீர் சூடாகும் போது எவ்வாறு மெதுவாக சுற்றுமோ, அதேபோல் இப்பாறைகளும் மெதுவாக சுற்றி வருகின்றன. பூமியின் மேல் அடுக்கில் நிகழும் மாற்றங்களை அறிந்து கொண்ட அளவில், அதன் மையப் பகுதியில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது புவியியலாளர்களால் அறிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது.

"பூமியின் பல ஆயிரம் கி.மீ., ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை மனிதர்கள் சென்று அறிந்து கொள்ள முடியாது. பூமியின் உள்ளே செல்லச் செல்ல வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். எனவே, பூமியின் மையப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களை, நிலநடுக்க அலைகள் மூலமே தெரிந்து கொள்ள முடியும்' என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்."பூமியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் போது, அதன் அலைகள் பூமியை ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த அலைகளை ஆய்வு செய்வதன் மூலம், ஆயிரக்கணக்கான கி.மீ., ஆழத்தில் ஏற்படும் விளைவுகளை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்கின்றனர். பூமியின் 7,000 கி.மீ., ஆழத்தில் அதன் மையப்பகுதி இரும்பு கோளகமாக அமைந்துள்ளது. புதிர் நிறைந்த இப்பகுதியை நிலநடுக்க அலைகள் மூலம் அளவீடு செய்கிறோம்' என்கிறார் பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆண்டி நேவக்கி.

"பூமியின் மையப்பகுதி புதிராக உள்ளது. ஒரு பாத்திரத்தில் தயிரை வைத்து கடையும் போது, பாத்திரத்தின் வெளிப்பகுதியில் வெண்ணை திரளுகிறது. அதேபோல், மிக பிரமாண்டமான பூமியின் மையப்பகுதி சுற்றி வருகிறது. பூமி மையத்தின் உட்பகுதி வேகமாக சுழலும் போது, மின்காந்த புலம் ஏற்பட்டு, சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது.மையத்தின் வெளிப்பகுதி மெதுவாக சுழன்று வருகிறது. இந்த இயக்கம் காரணமாக, பூமியின் மேல் அடுக்கில் உள்ள கண்டத் தட்டுகளை நகர்வது, நிலநடுக்கம் ஏற்படுவது, மலைகள் தோன்றுவது, எரிமலைகள் வெடிப்பது போன்றவை நிகழ்கின்றன. மெதுவாக சுற்றி வரும் மையத்தின் வெளிப்பகுதியை மதிப்பீடுவதன் மூலம், பூமி தோன்றிய பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது' என்கிறார் பேராசிரியர் மைக் கெண்டல்.

No comments: