விரும்பிய நெட்வொர்க்குக்கு வாடிக்கையாளர் மாறுவதை தாமதப்படுத்துவது ஏன்?


வாடிக்கையாளர்களை முடிந்த வரை சுரண்டுவது… உண்மை அம்பலமான பிறகும் கூட திருட்டுத்தனத்தைத் தொடர்வதென்பது அநேகமாக இந்தியாவில் மட்டுமே தொடர்ந்து நடக்கும் சமாச்சாரம். இதில் தனியார் துறை, அரசுத் துறை என்ற பேதமே இல்லை…
குறிப்பாக, எண்களை மாற்றாமல் நெட்வொர்க்கை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியை அமல்படுத்தும் விஷயத்தில் இந்திய தொலைத் தொடர்புத் துறையும், செல்போன் நிறுவனங்களும் செய்துவரும் தாமதம், பகிரங்கமாகவே மக்களை ஏமாற்றும் சமாச்சாரம்.
எப்படி என்கிறீர்களா… இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!
எண்களை மாற்றாமல், வேறு மொபைல் நெட்வொர்க்குக்கு மாறிக் கொள்வது’ என்பது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்தியாவில் பேசப்பட்டு வரும் சமாச்சாரம். இந்த வசதி வெளிநாடுகளில் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஆனால் அந்த வசதியை இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தருவதில் அநியாயத்துக்கு அடம் பிடிக்கின்றன தனியார் செல்போன் நிறுவனங்கள்.
என்ன காரணம்?
‘வெரி சிம்பிள்… பயம்தான், இருக்கிற வாடிக்கையாளர்களையும் இழந்துவிடுவோமா என்ற பயம்தான் இந்த தள்ளிப் போடலுக்கு முழு காரணம்’ என்கிறார்கள் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பயத்தின் விளைவு இதோ, 6வது முறையாக மீண்டும் ஒத்திப் போட்டுள்ளது தொலைத்தொடர்புத் துறை.
செல்போன் எண்களை மாற்றாமல், நெட்வொர்க்கை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி 2003-ம் ஆண்டே பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஆனால் அந்த நாடுகளை விட அதிக வாடிக்கையர் எண்ணிக்கை கொண்ட இந்தியாவில் இந்த வசதியை செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அளிப்பது குறித்து முதல் முதலில் 2006-ம் ஆண்டுதான் பேசப்பட்டது. உடனடியாக இதனை இந்தியாவில் அமல்படுத்த போதுமான தொலைத் தொடர்பு கட்டமைப்பு வசதி பிஎஸ்என்எல் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் – ஏர்டெல் உள்பட- அப்போது இல்லை.
இந்தியாவில் இன்று 650 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 12க்கும் மேற்பட்ட மொபைல் நெட்வொர்க்குகள் அவர்களுக்கு செல்போன் சேவை அளித்து வருகின்றன.
வாடிக்கையாளர் எண்ணிக்கை இந்த அளவு உயர்ந்தும் கூட, தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை தனியார் செல்போன் நிறுவனங்கள் என்பதே உண்மை.
இன்றைய நிலையில், பல்வேறு நெட்வொர்க் மூலமும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 15 பில்லியன் அழைப்புகளுக்கும் மேல் செய்கிறார்கள். எனவே ஒரு மொபைல் நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்குக்கு மாறும்போது, கூடுதல் வாடிக்கையாளர்களைத் தாங்கும் சக்தி அந்த நெட்வொர்க்குக்கு உள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த உறுதியை ஓரிரு மொபைல் ஆபரேட்டர்கள் தவிர வேறு யாரும் வழங்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஏசி – நீல்சன் சர்வேயின்படி, 5ல் ஒரு மொபைல் வாடிக்கையாளர், இருக்கும் நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்குக்கு மாற விரும்பியது தெரியவந்தது. இதே சர்வே மீண்டும் சில தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட போது 5-ல் இரண்டு வாடிக்கையாளர் தற்போதுள்ள நெட்வொர்க்கில் அதிருப்தியுடன் உள்ளது தெரிய வந்துள்ளது.
ஆக இன்றைய சூழலில் இந்த வசதியை அறிமுகப்படுத்தினால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் வேறு நெட்வார்க்குக்குப் போகும் அபாயம் உள்ளது.
இதனைச் சமாளிக்க, பெரும் சலுகைகள், கட்டணக் குறைப்புத் திட்டங்கள், புதிய வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டி வரும். ‘ஒரு செகண்ட் பில்லிங்’ என்று சொல்லிக் கொண்டு, வரும் அழைப்புக்கும் (இன்கமிங்) பணம் பறிக்கும் தகிடுதத்தங்களைத் தொடர முடியாமல் போகும் என்ற பயமே தனியார் நிறுவனங்களை வாட்டுகிறது.
இதன் காரணமாகவே, விரும்பிய நெட்வொர்க்குக்கு மாறும் வசதியை இவை தள்ளிப் போட்டு வருகின்றன என்கிறார்கள்.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிலை என்ன?
நிறைய வசதிகள் இருந்தாலும், தனது மோசமான வாடிக்கையாளர் சேவை காரணமாக வாடிக்கையரிடம் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்து வைத்துள்ளது பிஎஸ்என்எல். இன்றைய சூழலில் நெட்வொர்க் மாறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் முதல் அடி பிஎஸ்என்எல்லுக்குத்தான் என்கிறார்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அந்நிறுவன சென்னை வட்ட அதிகாரிகள் சிலர்.
அதே நேரம் கட்டண தில்லுமுல்லுகளில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கப்பதாக ஏர்டெல், டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த உண்மை புரிந்திருப்பதால், இந்த நிறுவனங்களும் நெட்வொர்க் மாற்றத்தை அடியோடு வெறுக்கிறார்களாம்.
எப்போதுதான் நெட்வொர்க் மாற்றம் சாத்தியமாகும்?
ஆரம்பத்தில் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக துறையின் அமைச்சர் ஆ ராசா கூறினார். அடுத்த சில வாரங்களில் இது டிசம்பர் 2009-ஆக தள்ளிப் போடப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2010 என கெடு வைத்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஏப்ரல் 2010 ஆனது. பின்னர் ஜூலை 2010-க்கு தள்ளி வைத்தார்கள். இதுவே கடைசி டெட்லைன் என்று வேறு உறுதி கூறினார்கள்.
ஆனால் ஜூலையும் போனது. ஒருவழியாக நவம்பர் ஒன்றாம் தேதி, அதாவது இன்று, விரும்பிய நெட்வொர்க்கு மாறும் வசதியை ஹரியாணாவில் சோதனை முறையில் அமலாக்கப் போவதாக தெலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா கூறினார்.
ஆனால் இந்த முறையில் எதுவும் நடக்கவில்லை. தேதி மாற்றம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25-ம் தேதி நிச்சயம் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு தருவோம் என்று அறிவித்துள்ளது தொலைத் தொடர்புத் துறை. அப்படியெனில் அமைச்சர் ராசா சொன்னது..?
அதை நினைத்துப் பார்க்கும் நிலையிலா அவர் இருக்கிறார்!!
‘உறுதியான ஒரு டெட்லைனை அறிவித்து, அதற்குள் அனைத்து நிறுவனங்களும் ‘விரும்பிய நெட்வநொர்க்குக்கு மாறும் வசதியை’ அறிமுகப் படுத்த வேண்டும். இல்லையேல் அபராதம் உள்ளிட்ட பல்வேறு விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என அரசு அறிவிக்க வேண்டும். பயன்பாட்டாளர் மீது அக்கறை இருந்தால் அரசு இதைச் செய்யும்’ என்கிறார் ஒரு பிஎஸ்என்எல் அலுவலர்.
இந்த அரசிடம் இனியாவது அதை எதிர்ப்பார்க்கலாமா?

நன்றி: தட்ஸ்தமிழ்

Post a Comment

1 Comments

TamilTechToday said…
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com