கரூர் பைபாஸ் மேம்பாலம் ஆரவாரமின்றி போக்குவரத்துக்கு பாலம் திறப்பு

திண்டுக்கல் - கரூர் பைபாஸ் விரிவாக்கப்பணி திட்டத்தில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் மேம்பாலம் மற்றும் சுக்காலியூர் குகைவழிப்பாதை ஆகியவை ஆரவாரமில்லாமல் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.கரூர் வழியாக செல்லும் திண்டுக்கல் - சேலம், கரூர் - திருச்சி மற்றும் கரூர் -கோவை நெடுஞ்சாலையின் பெரும்பகுதி நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தும் பணி பல ஆண்டுகளாக நடக்கிறது.கரூர் அருகே மண்மங்கலம் முதல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை (என்.ஹெச்.7) தரம் உயர்த்தும் பணி நடக்கிறது. மொத்தம் 78 கி.மீ., தூரம் உடைய இந்த சாலையில், கரூர் திருக்காம்புலியூரில் மேம்பாலம், சிறிய பாலங்கள் 18, வாகனங்களுக்கான குகைவழி பாதை ஐந்து, பாதசாரிகளுக்கான குகைவழி பாதை ஏழு அமைகிறது. திட்ட மதிப்பீடு 327 கோடி ரூபாய். சராசரியாக மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் பயணம் செய்யும் வகையில் சாலை தரமேம்பாடு செய்யப்பட்டுள்ளது.2006 ஜூலையில் ஹைதராபாத்தை சேர்ந்த மதுக்கான் நிறுவனம் சாலைப்பணி துவக்கியது.

சாலைப்பணி பெரும்பகுதி முடிந்த நிலையில், கரூர் அருகே அமைந்த மேம்பாலம் மட்டும் வாகனங்களுக்கான குகை வழி பாதை பணி மட்டும் பல மாதங்கள் தாமதமானது.கரூர் - கோவை மற்றும் திண்டுக்கல் - நாமக்கல் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு காரணமாக, இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. 800 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் ஆறு வழி சாலையாக மேம்பாலம் கட்டப்பட்டது. திண்டுக்கல் - கரூர் வழியில் சுக்காலியூரில் வாகனங்களுக்கான குகைவழி பாதை அமைக்கப்பட்டது.இலக்கு காலத்தை கடந்து பலமாதம் தாமதமான நிலையில், எந்த விழாவும், அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக மேம்பாலம் மற்றும் குகைவழிப்பாதை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் தங்கமணி கூறுகையி ல், ""திருக்காம்புலியூர் மேம்பாலம் ஆறு வழி பாதையாக உள்ளதால், சாலை விரிவாக்கப்பணியில் ஆர்ஜிதம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பணி முடிக்கப்பட்டு, எந்த விழாவும் இல்லாமல் வாகன போக்குவரத்துக்கு அமைதியாக திறந்துவிடப்பட்டது,'' என்றார்.

courtesy.dinamalar

Post a Comment

0 Comments