வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அணுசக்தி தொழில்நுட்ப புரிந்துணர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதை வியட்நாம் அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ன்கோ டாங் ந்ஹான் ஆமோதித்துள்ளார். அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான அணுசக்தி தொடர்பான வரைவு ஒப்பந்தத்தில் உள்நாட்டிலேயே அணுவை செறிவாக்குவதற்கு தடை விதிக்கவில்லை என கூறப்படுகிறது. அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து இருப்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது, இருந்த போதிலும், அணு செறிவு தடை குறித்து எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
வியட்நாமுக்கு அணுசக்தி ஒத்துழைப்பை தர சீனா உள்ளிட்ட பல நாடுகள் போட்டியிட்டுகின்றன. இந்த நிலையில் வியட்நாமும் அமெரிக்காவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பது ஆமோதிக்கப்பட்டுள்ளது. சிவிலியன் பயன்பாட்டிற்கான அணுசக்தி விஷயங்களை பகிர்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் வியட்நாம் உள்நாட்டிலேயே அணுவை செறிவாக்குவதற்கு வரைவு ஒப்பந்தத்தில் தடை விதிக்கப்படவில்லை என்று கூறப்படுவது சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சமீபத்தில் அமெரிக்காவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டிற்கும் இடையில் இடம்பெற்ற ஏற்பட்ட இதே போன்ற அணுசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அணுவை உள்நாட்டிலேயே செறிவாக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இது நல்ல ஒப்பந்தம் என்று அணுஆயுத பரவல் தடுப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அணுவை செறிவாக்கும் செயற்திறன் பரவினால் நாடுகள் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற அச்சம் நிலவுகிறது. ஐக்கிய அரபு எமிரேட் உடனான ஒப்பந்தத்தில் செறிவாக்கலுக்கு தடை விதிக்கப்பட்டு, வியட்நாம் உடனான ஒப்பந்தத்தில் தடை விதிக்கப்படவில்லை என்றால், அது அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது என்ற குற்றச்சாட்டை கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.
ஆனால் மத்திய கிழக்கு பகுதியில் இரானின் அணுசக்தி தொடர்பான சர்ச்சை இருப்பதால் அங்கு அணுஆயுத பரவல் தடுப்பு முக்கியமாக படுகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்த்த்தில் கையொப்பமிட்டுள்ளது, அதை பின்பற்றுவது என வியட்நாமுக்கு நல்ல பெயர் இருக்கிறது, அத்தோடு யூரேனியத்தை செறிவூட்டும் எண்ணமும் அதற்கு இருப்பது போல தோன்றவில்லை. ஆனால் அதே சமயம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுமே வியட்நாமை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று நினைப்பதால், அதை மதில் உள்ள பூனை நாடாகவும் பார்க்கப்படுகிறது.
courtesy:bbc
0 Comments