உலகிலேயே மிக அதிகம் செலவாகக் கூடிய நகரமாக ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலைநகர் லுவாண்டா வந்துள்ளது. மிகக் குறைவாக செலவாகக் கூடிய நகரமாக பாகிஸ்தானின் கராச்சி வந்துள்ளது.நாடு விட்டு நாடு போய் வாழ்பவர்களுக்கு மிக அதிகமாக செலவாகக் கூடிய நகரங்களின் தர வரிசைப் பட்டியல் ஒன்றை நிதித்துறை ஆய்வு நிறுவனமான மெர்சர் நிறுவனம் தயாரித்துள்ளது.
வாழ்க்கைச் செலவினங்கள் உலகிலேயே மிக அதிகம் கொண்ட நகரங்களின் பட்டியலில் லுவாண்டாவைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ, மூன்றாவதாக சாட் நாட்டின் தலைநகரம் ன்ஜமினா, அடுத்ததாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ ஆகியவை வந்துள்ளன.ஏழாவது இடத்தில் கெபோன் என்ற ஆப்பிரிக்க தேசத்தைச் சேர்ந்த லீப்ரிவீல் வந்துள்ளது.
வாழ அதிகப் பணம் தேவைப்படும் நகரங்களாக உலகின் முதல் பத்து நகரங்களின் பட்டியலில் மூன்று ஆப்பிரிக்க நகரங்கள் இடம்பிடித்திருப்பது என்பது இதுவே முதல் முறை.ஐந்து கண்டங்களில் இருந்து 240 பெருநகரங்களை ஒப்பிட்டுப் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்குமிடத்துக்கான செலவு, போக்குவரத்து செலவு, உணவு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு ஆகக்கூடிய செலவுகள் என்று பல்வேறு செலவினங்களை அளந்து ஒப்பிட்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது.
"லுவாண்டாவில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டியில் தங்க வேண்டுமானால் மாதவாடகை கிட்டத்தட்ட ஏழாயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகிறது. லண்டனில் இதேபோல ஒரு வீட்டுக்கு வாடகை சாதாரணமாக நான்காயிரம் டாலர்களுக்கு குறைவாகத்தான் இருக்கும்." என்கிறார் மெர்சர் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த மிலன் டெய்லர்.
இந்தியாவின் தில்லி இந்தப் பட்டியலில் 85ஆவது இடத்திலும் மும்பை 89ஆவது இடத்திலும் வந்துள்ளன.
(படித்ததில் பிடித்தது source.bbc)
0 Comments