அந்நிய முதலீடு: இந்தியாவுக்கு உலகில் 9 வது இடம்


உலகில் முதலீடு செய்ய மிகவும் கவர்ச்சிகரமான நாடுகளில் இந்தியா 9வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியா மொத்தம் 61,000 மில்லியன் டாலர் முதலீட்டைக் கவர்ந்தது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.உலகளாவிய நிதி நெருக்கடி நிலவியபோதிலும் இந்தியா அந்த அளவுக்கு முதலீட்டைக் கவர்ந்தது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்பதை ஐநா தன் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறது.

அந்த அறிக்கையை, ஐநா வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தயாரித்தது. உலக முதலீட்டு அறிக்கை 2010 என்று அதற்குப் பெயர்.“இதே நிலை நீடித்தால், 2010-2012ல் இந்தியா முதலீடு செய்ய மிகவும் விரும்பப்படும் நாடாகத் திகழும் என்றும் 2010-2012ல் அதிக வெளி நாட்டு நேரடி முதலீடுகளுக்கு விரும்பப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கும்,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.

இந்தியா சென்ற 2008ல் 40,420 மில்லியன் டாலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டைக் கவர்ந்தது என்றாலும் அது 13வது இடத்தில்தான் இருந்தது.“கடந்த 2008ல் மூன்றாவது இடத்தில் இருந்த சீனா சென்ற ஆண்டில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது,” என்று ஐநா வர்த்தக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த மூத்த பொருளியல் வல்லுநர் ராஷ்மி பங்கா சொன்னார்.
அமெரிக்காதான் சென்ற ஆண்டில் முதலீட்டுப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. சீனா, பிரான்ஸ், ஹாங்காங், பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, சவூதி அரேபியா, இந்தியா, பெல்ஜியம் நாடுகள் அடுத்தடுத்த நிலையில் இருந்தன.

இவை ஒருபுறம் இருக்க, இந்திய நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் சென்ற ஆண்டில் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் அதற்கு முந்திய ஆண்டைவிட 890 மில்லியன் டாலர் குறைவாக இருந்தன. வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளின் அடிப்படையில் உலகின் மிகப்
பெரிய 100 நிறுவனங்களில் ஐந்து இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

thanks.tamilmurasu

No comments: