பெண்ணின் கண்ணை குருடாக்கிய டாக்டர்


டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையால் அலர்ஜி ஏற்பட்டு கண்பார்வை பறிகொடுத்த வடசென்னையை சேர்ந்த மாணவி, கண் அறுவை சிசிச்சை மேற்கொள்ள எம்.எல்.ஏ., உதவி கேட்டு, சட்டசபை வளாகத்திற்கு நேற்று தனது பெற்றோருடன் வந்தார்.வடசென்னை சுங்கச்சாவடி அருகேயுள்ள டி.எச்., சாலையில் வசிப்பவர் தேவேந்திரன். இவரது மனைவி கலாவதி.

இவர்களுக்கு சுரேகா (13) என்ற மகளும், நவீன்குமார் (8) என்ற மகனும் உள்ளனர். தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பள்ளியில் சுரேகா, ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நவீன்குமார் நான்காம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுரேகாவிற்கு காய்ச்சல் வந்துள்ளது. வீட்டின் அருகில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சுரேகாவை, தேவேந்திரன் அழைத்து சென்றார். டாக்டரும், சுரேகாவுக்கு காய்ச்சல் குணமாகுவதற்குரிய மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்திற்குள் சுரேகாவின் உடலில் அலர்ஜி ஏற்பட்டது. கண்கள் வீங்கி மூடிக் கொண்டன. உடலிலும் வீக்கம் காணப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேகாவை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அலர்ஜியின் காரணமாக அவரது உடலில் ஏற்பட்ட கோளாறு குணமானது. ஆனால், கண்களை திறக்க முடியவில்லை. 'எழும்பூரிலுள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு சுரேகாவை அழைத்து செல்லுங்கள்' என, ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சுரேகாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின், சுரேகாவின் கண்கள் திறக்கப்பட்டன.

ஆனால், பார்வை சரியாக தெரியவில்லை. சுரேகாவுக்கு மீண்டும் பழைய நிலையில் பார்வை தெளிவாக தெரிய வேண்டும் எனில், ஐதரபாத்தில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறினர். மேல் சிகிச்சைக்கு செலவு செய்ய சுரேகாவின் பெற்றோரிடம் வசதி இல்லை.இதனால், எம்.எல்.ஏ., மூலம் அரசு உதவி கேட்பதற்காக சுரேகா தனது பெற்றோருடன் நேற்று சட்டசபை வளாகத்திற்கு வந்தார். ஏதாவது ஒரு எம்.எல்.ஏ.,வின் உதவி மூலம், தனக்கு பறிபோன கண் பார்வை மீண்டும் வராதா? என எதிர்பார்த்து சுரேகா காத்துக் கொண்டிருக்கிறார்.

thanks.dinamalar

No comments: