ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியா படுதோல்வி


3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் 10-வது லீக் ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு தொடங்கியது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
 
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தடை காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் டோனி இன்றைய ஆட்டத்தில் இடம்பெற்றார். இதேபோல பிரவீன்குமாரும் அணிக்கு திரு��்பினார். வினய்குமார், பார்த்தீவ் பட்டேல் நீக்கப்பட்டனர்.
 
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வாட்சன் கேப்டனாக பணியாற்றினார்.ஹாரிஸ் நீக்கப்பட்டு மெக்காய் சேர்க்கப்பட்டார்.
 
ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி இதுவரை முதலில் பேட்டிங் செய்யவில்லை.
 
பிரவீன்குமாரின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 6.2 ஓவரில் 20 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. வாட்சன் 1 ரன்னிலும், பீட்டர் பாரஸ்ட் 7 ரன்னிலும் பிரவீன்குமார் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
 
 3-வது விக்கெட்டுக்கு வார்னர்-மைக்ஹஸ்சி ஜோடி சேர்ந்தது. மைக்ஹஸ்சி 10 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே டேவிட் ஹஸ்சி களம் இறங்கினர்.
 
எதிர்முனையில் நிதானமாக விளையாடி அரைசதத்தை கடந்த வார்னர் 68 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்தில் ரைனாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
 
அதன்பிறகு வதேயும் டேவிட் ஹஸ்சியும்  ஜோடி சேர்ந்தனர். இருவரும் அரை சதத்தை கடந்தனர். 56 ரன்களுடன் வதேவும், 54 ரன்களுடன் டேவிட் ஹஸ்சியும் யாதவ் பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர்.
 
அதன்பிறகு வந்த கிறிஸ்டியன் 24 ரன்னிலும்,மெக்காய் 1 ரன்னிலும்,பிரெட்லீ 13 ரன்னிலும், டோகர்டி 14 ரன்னிலும் அவுட் ஆயினர்.
 
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
 
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடத்தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், தெண்டுல்கரும் களம் இறங்கினார்கள. சேவாக் 5 ரன்னிலும், தெண்டுல்கர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
 
அடுத்து காம்பீருடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினார்கள். இருந்தாலும் அதிக நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. கோலி 21 ரன்னிலும், காம்பீர் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ரெய்னா 8 ரன்னில் வெளியேற இந்தியா தடுமாற்றம் அடைந்தது.
 
 6வது விக்கெட்டுக்கு தோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. ஜடேஜா 8 ரன்னில் அவுட்ஆனார். இந்தியா 26.3 ஓவரில் 104 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தது பரிதவித்தது.
 
7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - தோனியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தோனி 14 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து பதான் களமிறங்கினார். 

அஸ்வினும், பதானும் சேர்ந்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். பதான் 2 சிக்சர்களை விளாசி ஆட்டத்திற்கு ஒரு உத்வேகம் கொடுத்தார். ஆனால் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சுக்கு முன்னால் இந்த ஜோடியாலும் தாக்குபிடிக்க முடியாமல் போனது. 26 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் வெளியேற, அவரைத் தொடர்ந்து பதான் 22 ரன்களுக்கும், பிரவீண்குமார் 1 ரன்களுக்கும் வெளியேற இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலியா பந்துவீச்சு தரப்பில் வாட்சன், டோகர்டி, ஹெல்பனாஸ் தலா 2 விக்கெட்டுகளும், மெக்காய், ப்ரெட்லீ, கிறிஸ்டியன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் முத்தரப்பு தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது. 

Post a Comment

0 Comments