ட்யூப்லெஸ் டயர்கள் சிறந்ததா?

ட்யூப்லெஸ் டயர்களை பயன்படுத்துவது சிறந்தது என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர். ட்யூப்லெஸ் டயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏன்? அதில், அப்படி என்னதான் கூடுதல் சிறப்புகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
ட்யூப்லெஸ் டயர்களின் உட்புறம் ஹாலோ பியூட்டைல், குளோரோ பியூட்டைல் உள்ளிட்ட பிரத்யேக வேதிப்பொருட்களின் பூச்சுடன் உறுதியாக வடிவக்கப்பட்டுள்ளன. இதனால், வெப்பமாகாது என்பதுடன் உட்புறத்திலிருந்து காற்று வெளியேற வாய்ப்பு மிக மிக குறைவு.

மேலும், வாகனத்தின் எடைக்கு தக்கவாறு டயருக்குள் காற்று சமநிலையுடன் இருப்பதால் டயரின் சுழலும் வேகம் மற்றும் தன்மையும் சீராக இருக்கும். இதனால், அதிக பாதுகாப்பையும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் பெறலாம்.

விபத்துக்களுக்கு டயர் பஞ்சராவதும், ட்யூப் வெடிப்பதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சாதாரண டயர்கள் எளிதில் பஞ்சராவதற்கும், ட்யூபில் உராய்வு அதிகமாகி வெடிப்பதற்கான ஆபத்துக்களும் அதிகம். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களின் வெளிப்புறம் அதிக தடிமனுடன் கூடிய உறுதியான ரப்பரை கொண்டிருப்பதால் காற்று திடீரென வெடித்து வெளியேறாது. 

மேலும், பஞ்சராகும் வாய்ப்பும் குறைவு என்பதுடன் பஞ்சரானாலும் காற்று உடனடியாக வெளியேறி டயர் பஸ்க் ஆகாது. இதனால், பெரிய அளவிலான விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று ஆட்டோ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனங்களில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும்போது டயர், ட்யூப் இடையில் ஏற்படும் அதிக உராய்வு காரணமாக ட்யூபில் உள்ள காற்று சூடாகி வெடிக்கும் ஆபத்து உள்ளது. ஆனால், ட்யூப்லெஸ் டயர் அதிவேகத்தில் செல்லும்போதும் அதிக சூடாகாது என்பதால் டயர் வெடிக்கும் வாய்ப்பு குறைவு.

சில சமயங்களில் வாகனத்தின் எடை அதிகமாகும்போது ட்யூபில் காற்று சமநிலை இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் பேலன்ஸ் இல்லாமல்(வாப்லிங்) செல்லும். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களில் இந்த பிரச்னை இருக்காது. ரோடு கிரிப்பும் அதிகமாக இருக்கும். இதனால்தான், ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் ட்யூப்லெஸ் டயர்களை பொருத்துகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ட்யூப்லெஸ் டயர்கள் பல்வேறு நாடுகளில் பரவலாக வரவேற்க்கப்பட்டுள்ள நிலையிலும், இந்திய மார்க்கெட்டில் ட்யூப்லெஸ் டயர்கள் இதுவரை பெரிய வரவேற்பை பெறவில்லை என்றும் ஆட்டோ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments