835 டாக்டர்கள் நியமனம்

 தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 835 டாக்டர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பில் சிறப்பு மருத்துவப் படிப்பை கடந்த ஆண்டு 416 பேர் படித்து முடித்தனர். அவர்கள் கடந்த ஜூனில் நடைபெற்ற பணி நியமன கலந்தாய்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.


 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 437 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பப்பட்டன. ஏழை மக்களுக்கு தரமான மருத்துவச் சேவை தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
 ஒரு டாக்டருடன் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் டாக்டர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டதாலும், பணி ஓய்வு, பதவி உயர்வு மற்றும் பணி துறப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள், இளஞ்சிசு தீவிர சிகிச்சையகம் ஆகியவற்றில் இப்போது 835 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பட்டியல் பெறப்பட்டு டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.


 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில், ஒவ்வொரு நிலையத்திலும் தனியாக மூன்று செவிலியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
 இப்போது அந்த நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.4 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.4,500-ம், மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.5,500-ம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.


 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அவர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு சிறப்புப்படியாக மாதந்தோறும் ரூ.500 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments