அடிப்படை வசதியில்லாத 71 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நோட்டீஸ்


தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் 71 தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் காளான்கள் போல் சுயநிதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பெருகி வருகின்றது. இவ்வாறு பெருகி வரும் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரிலும், நன்கொடை என்ற பெயரிலும் வசூல் செய்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், உரிய ஆசிரியர்கள் மற்றும் கல்வி உபகரண வசதிகள் கூட இல்லை.
இந்த நிலையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் மத்திய அரசின் ஏ.ஐ.சி.டி.இ. தமிழ்நாட்டில் உள்ள 71 பிரபல பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என கடந்த மாதம் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்தது.
மேலும், நாடு முழுவதும் மொத்தம் 324 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கல்வி அளிப்பதற்கு லாயக்கற்றவையாக உள்ளன என்பதைக் கண்டறிந்தது.
தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 70 கல்வி நிறுவனங்களும், ஆந்திராவில 64 கல்லூரிகளும், உத்தரப்பிரதேசத்தில் 30 கல்லூரிகளும், ஹரியானாவில் 21 கல்லூரிகளும், கர்நாடகம் மற்றும் கேரளாவில் தலா 14 கல்லூரிகளும் உரிய வசதிகள் அற்றவை என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஜூன் 13ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அக்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.