தமிழத்தில் புதிதாக 13,036 ஆசிரியப் பணியிடங்கள்


பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழும் அரசுப் பள்ளிகளில் 9,471 பட்டதாரி ஆசிரியர்கள், 3,565 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 13,036 ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழத்தில் உள்ள 710 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெள்ளத்தினால் அடித்துச் செல்ல முடியாத, வெந்தணலால் வேகாத, கள்வரால் கவர முடியாத, வேந்தரால் கொள்ள முடியாத, அழியாச் செல்வமாம் கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், மாணவ - மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக, அதிலும் குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, மதிய உணவு வழங்குவது; கல்வியினை இடையே விட்டு செல்லாமல் இருப்பதற்காக உதவித் தொகை வழங்குவது; மிதிவண்டி வழங்குவது; மடிக்கணினி வழங்குவது; போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், மாணவர்களின் நலனுக்காகவும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக அமையும் வண்ணம் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

710 பள்ளிகள் தரம் உயர்வு...

இந்த வகையில், 710 ஊராட்சி ஒன்றிய/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை நடுநிலைப்
பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை
உயர்நிலைப் பள்ளிகளாக 2011-12-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தவும், அப்பள்ளிகள்
6 முதல் 10 வகுப்புகளைக் கொண்டு 2011-12 ஆம் ஆண்டிலேயே முழுமையாக செயல்படவும்,

உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 710 அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.  இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 ரூபாய் செலவு ஏற்படும்.

இவ்வாறு தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதியதாக வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்த செலவினங்களுக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ 58.12 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு 412 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஊரகப் பகுதிகளுக்கு முன்னுரிமை...

இதுமட்டுமல்லாமல், 5 கீ.மீ. சுற்றளவில் உயர்நிலைப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் / நடுநிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள், 8 ஆம் வகுப்பில் ஊட்டுப் பள்ளி மாணவர் எண்ணிக்கையுடன் 70 மாணவர்களுக்கு குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலைப் பள்ளிகள், போக்குவரத்து வசதியற்ற, இயற்கை / செயற்கை தடை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இதேபோன்று 2009-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

புதிதாக 6,428 ஆசிரியப் பணியிடங்கள்...

அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 1,581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 75 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

இதேபோன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 58 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவாகும்.

மேற்கூறிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை தோற்றுவிப்பதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தமாக 134 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவாகும்.

மேலும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் நலன் கருதி, 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக 2011-12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பணியிடங்கள் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை தோற்றுவிக்க அவர் ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 71 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

பள்ளிக்கல்வித் துறையில் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் எந்தவிதச் சிரமுமின்றி கல்வி பயில வழி வகுக்கும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.