122 ரன் வித்தியாசத்தில் தோல்வியில் வீ்ழ்ந்த இந்தியா


ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறிப் போன இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியை 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் பறி கொடுத்தது. சற்றே போராடியிருந்தால் நிச்சயம் இப்போட்டியில் இந்தியா வென்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேவாக், டிராவிட், லட்சுமன், டோணி, விராத் கோலி, கம்பீர் என முக்கிய வீரர்கள் யாருமே சரியாக ஆடாமல் போனதே, வென்றிருக்கலாம் என்ற வாய்ப்பில் இருந்த ஒரு போட்டியை இந்தியா நழுவ விட முக்கியக் காரணம். இந்தியத் தரப்பில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் யார் என்றால் சச்சினும், அஸ்வினும்தான். சச்சின் கூட இந்த முறை 32 ரன்களில் வீழ்ந்து விட்டார். அஸ்வின் கடைசி நேரத்தில் வந்து காட்டிய வான வேடிக்கையால் எந்தப் பலனும் இல்லாமல் போய் விட்டது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 333 ரன்களுக்குஆல்- அவுட்டானது. அதன்பிறகு இந்தியா தனது முதல் இன்னிங்க்சில் 282 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் ஹிப்பின்கஸ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா நேற்று 3வது நாள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்களை எடுத்திருந்தது. இன்று காலையில் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா, மீதம் இருந்த 2 விக்கெட்களையும் விரைவாக இழந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 298 ரன் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

300 ரன்கள் வரை கூட எங்களால் சேஸ் செய்ய முடியும் என்று வீரேந்திர ஷேவாக் நேற்று தெம்பாக கூறியிரு்நதார். இதனால்ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இந்தியா தனது விக்கெட்களை சடசடவென பறி கொடுத்து பரிதாபமாக காட்சியளித்தது.

இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்பாக விளையாடவில்லை. 300 ரன் வரை சேஸ் செய்வோம் என்று நேற்று கூறிய ஷேவாக்தான் முதல் ஆளாக அவுட்டாகி வெளியேறினார். அவரது பங்கு 7 ரன்கள். தொடர்ந்து கம்பீர் 13 ரன்களில் வெளியேற, டிராவிட் 10 ரன்களுடன் பெட்டியைக் கட்டினார்.

சச்சினாவது காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் கூட பொய்யானது. அவர் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த விவிஎஸ் லட்சுமன் 1 ரன்னிலும், விராத் கோஹ்லி முட்டையுடனும் வெளியேறி ரசிகர்களை கடுப்படித்தனர்.

இந்த நிலையில், கேப்டன் டோணியும் (23), அஸ்வினும் (30) சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடினார். இவர்களில் அஸ்வின் ஆட்டம், முதல் இன்னிங்ஸைப் போலவே சிறப்பாக இருந்தது. இருந்தாலும் புண்ணியம் இல்லை. இவர்கள் 2 பேரும் அவுட்டாக இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் கனவு பலிக்காது என்பது தெளிவானது.

அடுத்த வந்த ஜாகிர்கான் தன் பங்குக்கு 13 ரன்கள் எடுத்தார். கடைசியாக இஷாந்த் சர்மா(5), உமேஷ் யாதவ்(14) ஆடி தங்களால் முடிந்த வரை முயற்சி செய்தனர். இறுதியாக இந்தியா 122 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட்டன்சன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களையும், சிடில் 3 விக்கெட்களையும் எடுத்தனர்.

அருமையான தொடக்கத்தைக் கொடுக்க வேண்டியது சேஸிங்கில் மிக முக்கியமானது. அப்போதுதான் பின்னால் வரும் வீரர்கள் சிறப்பாக முடியும். அந்த வகையில் ஷேவாக்கும், கம்பீரும்தான் இன்றைய தோல்விக்கு முக்கியப் பொறுப்பாவார்கள். இருவரும் சற்றும் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. இத்தனைக்கும் இன்னும் ஒரு நாள் ஆட்டம் பாக்கி உள்ள நிலையில் ஏன் இப்படி படு வேகமாக ஆடி படு மோசமான தோல்விக்கு அவர்கள் வித்திட்டார்கள் என்பது புரியவில்லை. ஷேவாக் என்னதான் அதிரடி வீரராக இருந்தாலும் நிலைத்து ஆடவும் அவர் முயற்சித்தால்தான் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு நல்லது.

இளம் வீரர்கள் நிறைந்த அணி, இந்தியாவோ அனுபவ வீரர்களைக் கொண்ட அணி, எனவே இந்தியா முயற்சித்தால் ஆஸ்திரேலியாவை எளிதில் வெல்லலாம் என்று பலரும் கணித்திருந்த நிலையில் அதை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பொய்த்துப் போக வைத்து விட்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்லுமா என்ற கேள்விக்குறி இருந்து வந்த நிலையில், அதை ஆச்சரியக்குறியாக்கி விட்டது அந்த அணியின் இளம் பந்து வீச்சுப் படை.

போகட்டும் முதல் போட்டிதானே போயுள்ளது. இன்னும் 3 போட்டிகள் இருக்கிறதே. அதில் இந்தியா சாதிக்கும் என்று நம்புவோம்.

No comments: