முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது! காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்!
ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால் பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.
கவனிக்க வேண்டியவை..!
வழக்கத்திற்கு மாறாக ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பக்கத்திலிருந்து ஏதாவது வயர்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.
பின் நம்பரை டைப் செய்யும்போது, அதை யாரும் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளுங்கள்.
பரிமாற்ற ரசீதுகளை ஏ.டி.எம். இயந்திர அறையிலோ அல்லது அருகிலோ தூக்கி எறியாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வங்கியைத் தவிர, அறிமுகம் இல்லாத வெளிநபரிடம் எந்த உதவியையும் கோர வேண்டாம்.
ஏ.டி.எம். சென்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் இருந்து ஏதாவது ஒன்று வேலை செய்யாமல் இருந்தால், மற்றதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், மற்ற மெஷின்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, 'ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப் பட்ட மெஷினை பயன்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் நமக்கு வலை விரித்திருக்கலாம்.
ஏ.டி.எம். இயந்திரத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியான விஷயங்கள் அல்லது நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது உங்களது கணக்கில் நீங்கள் செய்யாத பரிமாற்றங்கள் இருந்தாலோ உங்களது வங்கிக்கும், காவல் துறைக்கும் முதலில் தெரியப்படுத்துங்கள்.
ஓட்டல்கள், கடைகள் போன்ற இடங்களில் பில்லை டெபிட் கார்டு மூலம் செலுத்தும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் கார்டை கொடுத்து விட்டு உட்கார்ந்துவிட்டால், அதை ஸ்கிம்மர் பொருத்திய மெஷினில் ஸ்வைப் செய்தாலும் தெரியாமல் போய்விடும். அதன் மூலம் நம் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விஷயங்கள் நமக்கே தெரியாமல் திருடு போக வாய்ப்பிருக்கிறது.
உங்களது செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் உங்களது வங்கி பரிமாற்றங்களை அறிவிக்கும் எஸ்.எம்.எஸ். அல்லது மெயில்களைப் பெறும் வகையில் வங்கியுடன் தொடர்புபடுத்தி வையுங்கள்.
தொலைபேசி மூலம் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு வரும் அழைப்புகளை ஏற்று, விவரங்களைத் தராதீர்கள்.
ஏ.டி.எம். பயன்பாடுகளில் ஏற்படும் இழப்புக்கு உச்சவரம்பு உண்டு. அதுபற்றி வங்கியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுவரை நாம் பார்த்தது, நம் ஏ.டி.எம். கார்டை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி. இனி பார்க்கப் போவது, ஏ.டி.எம். கார்டால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி.
நமது கார்டின் மூலம் பணம் திருடு போகாமல் இருக்க, ரகசிய எண்ணை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஏ.டி.எம். மெஷின் மூலமாகவே நம்பரை மிக எளிதாக எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். உங்களது பிறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் வாகன எண்களை பின் நம்பராக கட்டாயம் வைக்காதீர்கள்.
ஏ.டி.எம்-ல் இருந்து நீங்கள் பணம் எடுப்பதை வேறு யாரேனும் உற்றுக் கவனிப்பதாக உங்களுக்குத் தோன்றினால், ஏ.டி.எம். சென்டரில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு உங்களது பின் நம்பரை மாற்றி விட்டு வெளிவருவது நல்லது.
பணம் வராமல் போனால்..!
ஏ.டி.எம். சென்டருக்குச் சென்று ரகசிய எண்ணை சரியாகப் பதிவு செய்தவுடன், பணம் வந்துவிடும். அப்படி வராமல் கணக்கில் எடுக்கப் பட்டதாக காண்பித்தால், பதற்றப்படாமல் உங்களது வங்கிச் சேவைப் பிரிவிற்கு உடனே போன் செய்து, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். நம்பர், ஏ.டி.எம். சென்டர் இருக்கும் இடம், பணப் பரிவர்த்தனை நடந்த நேரம், தேதி மற்றும் நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். எந்த வங்கியினுடயது என்ற முழுத் தகவலையும் தெரிவியுங்கள். முடிந்தால் பணம் எடுக்கப் பட்டதாக காட்டும் ரசீதை வங்கியில் கொடுத்தால் உங்களது பிரச்னை இன்னும் வேகமாக தீர வாய்ப்பிருக்கிறது.
ஏ.டி.எம். இயந்திரங்களில் தவறாக கழிக்கப்பட்ட தொகையை, ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏழு நாட்களைத் தாண்டிச் செல்லும் பட்சத்தில் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என கூறியுள்ளது.
கார்டு மாட்டிக் கொண்டால்..?
உங்கள் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை மூன்று முறைக்கு மேல் தவறாக டைப் செய்தால், கார்டு மெஷினுக்குள்ளேயே மாட்டிக் கொள்ளும். இப்படி நடந்தால் பதற்றப்படாமல், உங்களது வங்கிச் சேவைப் பிரிவுக்கு உடனே போன் செய்து நடந்ததைச் சொல்லுங்கள். உங்கள் புகாரின் அடிப்படை யில், அந்த கார்டை வேறு யாரும் தவறாகப் பயன் படுத்தாதபடி 'பிளாக்’ செய்து விடுவார்கள். அதன் பின்னர், நீங்கள் வங்கிக்குச் சென்று நடந்த விஷயத்தை விவரமாக எழுதித் தரலாம்.
நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-ல் உங்கள் கார்டு மாட்டியிருந்தால் ஓரிரு நாட்களி லேயே புதிய கார்டு திரும்பவும் கிடைக்க வாய்ப்புண்டு. மற்ற வங்கியின் ஏ.டி.எம். எனில் குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும். கார்டு தொலைந்தாலும் ஏறக்குறைய இதே நடைமுறைதான். புதிய கார்டு தரும்போது அதற்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.
ஆன்லைன் பிரச்னையின்போது..!
பொதுவாக ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யும்போது, கார்டு நம்பர், பெயர், கார்டின் முடிவுக் காலம், சி.வி.வி. நம்பர் போன்ற தகவல்களும், பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயரும் ஆன்லைனில் உள்ள படிவத்தில் கேட்கப்படும். அதைச் சரியாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் ஒழுங்காக நடைபெறும். தவறான தகவல்களைத் தந்திருந்தாலோ, மாற்றித் தந்திருந்தாலோ பணப் பரிமாற்றம் நடக்காமல் போவதுடன், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இழப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
- செ.கார்த்திகேயன்
ஏ.டி.எம். வரலாறு! ஏ.டி.எம். இயந்திரத்தை உருவாக்கியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பேரோன் (John Shepherd Barron). ஒருமுறை வங்கியிலிருந்து தனது பணத்தை எடுக்க முடியாமல் திணறினார் ஜான் ஷெப்பர்டு. வங்கியின் அலுவலக நேரம் முடிந்ததே இதற்கு காரணம். வங்கியிலிருக்கும் நம் பணத்தை, நாம் விரும்பும்போது எடுக்கும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஜான் ஷெப்பர்டு நினைத்தார். காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார். அவர் உருவாக்கிய ஏ.டி.எம். இயந்திரம் 1967-ல் வடக்கு லண்டனில் வைக்கப்பட்டது. அதன் பெயர், டிலாரூ (De La Ru) ஆட்டோமேட்டிக் கேஷ் சிஸ்டம்!அன்றைய ஏ.டி.எம். மெஷினில் பணத்திற்கு விஷேச காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக 14 இலக்கம் கொண்ட ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டும். 14 இலக்க எண்ணை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருப்பதாக ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவிக்க, எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும்படி நான்கு இலக்க ரகசிய எண்ணை உருவாக்கினார். இன்றுவரை அந்த முறையே தொடர்கிறது. |
சமீபத்தில் சென்னையில் நடந்த ஏ.டி.எம். பண அபகரிப்பு குறித்து வங்கி மோசடித் தடுப்பு பிரிவின் உதவி கமிஷனர் ஜான்ரோஸிடம் கேட்டோம். ''சென்னையில் மட்டும் இதுவரை தங்களது ஏ.டி.எம். கார்டிலிருந்து பணம் திருடு போயிருப்பதாக 212 பேர் புகார் செய்துள்ளனர். போலி ஏ.டி.எம். கார்டுகளின் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மூலம் கொள்ளையடிப்பவர்கள் பெரும்பாலும் பெட்ரோல் பங்க், ஓட்டல் மற்றும் பொருள் வாங்கக்கூடிய இடங்களையே குறி வைத்து மோசடி செய்கிறார்கள். அங்கிருக்கும் பணியாளர்களிடம் இவர்கள் தயாரித்த 'ஸ்கிம்மர்’ இயந்திரத்தைக் கொடுத்து, அந்த மெஷினிலும் கார்டை தேய்க்கச் சொல்கிறார்கள். இதற்கு இவர்கள் கொடுக்கும் கூலி கார்டு ஒன்றுக்கு 1,000 ரூபாய். இப்படி தேய்க்கும்போது பின் நம்பர் உள்பட கார்டு குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த மெஷினில் பதிவாகிவிடுகிறது. இதை வைத்து போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்து பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை அடிக்கடி மாற்றினால், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்'' என்றார். |
இப்படியும் ஒரு வழியா! முறைகேடு செய்ய நினைப்பவர்கள் முன்னதாகவே, ஏ.டி.எம். மெஷினில் கார்டு வெளிவரும் துவாரத்தில், மடித்த துண்டுக் காகிதம் அல்லது பிளாஸ்டிக் அட்டையைக் கொண்டு செயற்கையாக அடைப்பை ஏற்படுத்தி விடுவார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் உள்ளே செலுத்தும்போது சுலபமாகச் சென்ற ஏ.டி.எம். கார்டு வெளியே வராமல் உள்ளேயே தங்கிவிடும். செயற்கை தடையை கவனிக்க இயலாத வாடிக்கையாளர்கள், கார்டு உள்ளே சிக்கிக் கொண்டதாக நினைத்து விடுவார்கள்.அப்போது வெளியிலிருக்கும் ஒருவர் உதவிக்கு வருவதுபோல வந்து நமது பின் நம்பரை மீண்டும் டைப் செய்யச் சொல்வார்கள். அதன்பிறகு சிறிது நேரம் ஏதேதோ முயற்சிப்பதுபோல நடித்து கார்டு வரவில்லை என்று கைவிரித்து நம்மை அனுப்பிவிடுவார். பின்னர் அவர் நமது கார்டை வெளியே எடுத்து பணத்தை உருவி விடுவார்! |
- source.vikadan
4 Comments