ஆதார்-தேசிய அடையாள அட்டை -ஏன்? எதற்கு ?

நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.  இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகதான்  தேசிய அடையாள அட்டை இருக்கும்.

காரணம் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். 

நீண்ட நாள் விவாதத்தில் இருந்த இந்த விவகாரம், சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்கியது. இப்பணி இப்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து இப்பணி நடைபெறுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவோ, அடையாள அட்டை பெறவோ கட்டணம் ஏதும் கிடையாது. குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக யுடாய் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். 

அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது  விண்ணப்பத்துடன், இருப்பிடம், அடையாள சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரில் செல்ல வேண்டும். அவரது இடது கையில் நான்கு விரல்களின் ரேகையும், இரண்டு கைகளின் பெருவிரல் ரேகையும் நகலெடுக்கப்படும். மேலும் கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்படும். இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. புகைப்படம் எடுக்கப்படும். 

விண்ணப்பங்கள், அடையாள அட்டை வழங்கும் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அவற்றை சரிப்பார்த்த பின்னர் அஞ்சலகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு 14 இலக்க வரிசை எண் கொண்ட ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணை கொண்டு விண்ணப்ப பரிசீலனை நிலவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1800-180-1947 என்ற இலவச தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்.... அஞ்சல் துறை மூலம் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி அக்டோபர் 25ம் தேதி சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல்  ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர், பூங்காநகர், தி.நகர் தலைமை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டது. மேலும் 21ம் தேதி முதல் மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகங்களில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இப்பணிகள் விரிவுபடுத்தப்படும். விண்ணப்பித்த 45 முதல் 60 நாட்களுக்குள் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பதாரருக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்க முடியும். 

ஆனால், அதற்கு முன்பே சென்னையில் இந்திய வங்கி கிளைகள் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.  அதையடுத்துதான் அஞ்சல் துறை மூலம் தொடங்கியுள்ளனர். அங்கும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விரல் ரேகை பதிவு, கருவிழிப்பதிவு, புகைப்படம் எடுத்தல் ஆவணங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளாலும், அஞ்சலக ஊழியர்களே கூடுதலாக இப்பணியை கவனிக்க வேண்டி உள்ளதால் இந்த நிலைமை.  

இப்படி குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெற வேண்டிய நிலை, ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் முழுமையாக அடையாள அட்டையை வழங்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதிலும் பல இடங்களில் அஞ்சலகங்களை மூடிவிட்டனர். இந்நிலையில், மார்ச் 2012க்கும் தமிழகத்தில் 2 லட்சம் விண்ணப்பங்களை பெற  அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.இதை சரி செய்ய தனியார் நிறுவனங்களையும், 
வேலையில்லா பட்டதாரிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக  சென்னையின் பல்வேறு இடங்களில் இப்பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு  பயிற்சி அளிக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் முதல் கட்டமாக 250 பேர் பயிற்சி பெற்று வருகினறனர். அப்பணிகள் முடிந்ததும் முழு அளவில் அடையாள அட்டை வழங்கும் பணி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மை அட்டை
நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். 

அதுமட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும்போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.  ரயில்வே டிக்கெட்டுக்கும் தேவைப்படும்! ஆன்லைனில், தட்கலில் ரயில்வே முன்பதிவு செய்ய ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு வழங்கும் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,  வருமானவரி நிரந்தர கணக்கு எண்,  தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம் என ஏதாவது ஒரு ஆவணத்தை ரயில்வே கேட்கிறது. தேசிய அடையாள அட்டை வந்தபிறகு ஓரே ஒரு ஆவணமாக பயன்படுத்தப்போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்திய பிறகு இந்த முடிவு அமலுக்கு வரும்.

அடையாள அட்டையில் என்ன இருக்கும்

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.  

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை, 

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது,  கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி , இருப்பிடச் சான்றிதழ். சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம்.http://tamilnadupost.nic.in/


http://uidai.gov.in/
+++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த தவகல் அனைவருக்கு செல்ல இந்த பதிவை அனைவருக்கு ஷேர் செய்யவும் , ஒட்டு போடவும் 
++++++++++++++++++++++++++++++++++++

No comments: