ஆண்மைத் தன்மை நிச்சயமாகப் பாதிக்கப்படும்.

எப்போது மதுப்பழக்கத்துக்குப் பெரும்பாலோர் அடிமையாகிவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் தாங்களாகவே கருத்தடை செய்யாமல் வீட்டில் பெண்களையே கருத்தடை செய்யச் சொல்வார்கள்.

இப்போது அதற்குப் பதிலாக தமிழக அரசே (கடந்தகால அரசும், தற்போதைய அரசும்) இலவசமாக ஆண்களுக்கான கருத்தடை (வாசக்டமி) செய்து தருகிறது. எப்படி என ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்.மதுப்பழக்கம், முன்பு எப்போதாவது அதுவும் ஆண்களில் மிகச் சிலரே அந்தப் பழக்கத்தை வைத்திருந்தனர். அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டுமே. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் குடித்துவிட்டு வந்ததாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நிலைமையின் தீவிரம் புரிகிறதா? பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பழக்கம் தொற்றும் அபாயம் உண்டாகிவிட்டது.

இதற்குப் பல காரணங்கள் சொன்னாலும், முன்புபோல் மறைமுகமாக ஊரின் ஒதுக்குப்புறங்களில் விற்கப்பட்ட மது, இப்போது வார்டுகள்தோறும் அரசே கடைவிரித்து விற்பனை செய்கிறது. ஏதோ பெயரளவுக்குச் சில குறிப்பிட்ட பள்ளி, கோயில்கள் அருகில் கடை கூடாது என்று சட்டம் வேறு.

2003-ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ.3,469 கோடியாக இருந்த வருமானம், 2010-ல் ரூ.14,750 கோடியாக வளர்ந்துள்ளது என்பதில் இருந்தே குடிப்பழக்கத்தின் வளர்ச்சியை நம்மால் யூகிக்க இயலும்.கருத்தடை என்று சொன்னதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், தொடர்ந்து குடிப்பழக்கம் இருக்கும் ஒருவருக்கு ஆண்மைத் தன்மை நிச்சயமாகப் பாதிக்கப்படும். அதுபோக தனது உழைப்பின் முக்கியமான பங்களிப்பை இந்தக் குடிப்பழக்கத்துக்குச் செலவிடும் நிலைக்கு அந்த நபர் உள்ளாகிறார்.அதையும் மீறி கருவுறும் பெண்களுக்கு எம்மாதிரியான குழந்தைகள் பிறக்கும் என்பதை நாமே சற்று யூகித்துக்கொள்ள இயலும். நோஞ்சான்களாகவும், பலவீனமானவர்களாகவும், நோயுள்ளவர்களாகவும், எதையும் சாதிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி ஒரு தலைமுறை தேவைதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதற்குத் திருமணம் செய்யாமலே அல்லது குழந்தை பெறாமலே இருந்துவிடலாம். இதைத் தவிர, எத்தனையோ பிரச்னைகள் குடிப்பழக்கத்தால் ஏற்படுகின்றன.
குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க இயலாவிட்டால் ஏற்படும் மனஇறுக்கம் பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன. பலவிதமான தவறுகளுக்குக் காரணமாகிறது.
குடும்பத்தில் பல பிரச்னைகளுக்கும் இந்தக் குடிப்பழக்கம் காரணமாகிறது. பொய், திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூது என பல தீய வழிகளுக்கும் இது வழி வகுக்கிறது.
முன்பு ஏதாவது விசேஷம் அல்லது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றால், அனைவரும் "பார்ட்டி' வைக்கச் சொல்வார்கள். உடனே அருகில் உள்ள டீக்கடையில் ஸ்வீட், காரம், காபி என்று "பார்ட்டி' தந்தாலே பெரிய விருந்தைப் போன்று இருந்தது. அதற்கும் மேல் விருந்து என்றால், ஒரு நல்ல ஹோட்டலுக்குச் சென்று உண்பது என்பதுதான் உயர்ந்தபட்ச விருந்தாக இருந்தது.

இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் "பார்ட்டி, பார்ட்டி' என்று உடனே மதுவகைகளைத்தான் நோக்கமாகக் கொண்டு விருந்துகள் நடைபெறுகின்றன. அந்த அளவுக்கு இந்தத் தீயபழக்கம் புழக்கத்துக்கு வந்துவிட்டது.
இன்னும் பல விஷயங்களில் இந்தத் தீயபழக்கம் சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ளது. பொருளாதார நஷ்டம் ஒருபுறம், சமூக அந்தஸ்து இழப்பு மறுபுறம். அடிமை மனப்பான்மை ஒருபுறம் என பலவிதங்களில் பாதிப்பு.

இதில் ஒரு முக்கியச் செய்தி என்னவென்றால், எதற்கெடுத்தாலும் வெளிநாட்டினரை மேற்கோள் காட்டுவதுபோல, இந்த விஷயத்திலும் வெளிநாட்டினரைச் சுட்டிக்காட்டி, அவர்களெல்லாம் தினமும் குடிக்கிறார்கள் என்று அவர்களையெல்லாம் குடிகாரர்களாக நினைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்?அந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலைக்கேற்ப அங்கே அந்தப் பழக்கத்தை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அதுவும் அளவோடு என்று சொன்னால் இங்குள்ளவர்கள் நம்ப மறுக்கிறார்கள். காரணம், இவர்களுக்கு எதையும் அளவோடு செய்வது என்பது இயலாது என்பதால்.

எது எப்படியோ, நாம் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவதால் நமக்குத்தான் பாதிப்பு என்பதை உணர்ந்து சிறிதுசிறிதாக இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுதலே ஒரு சரியான தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


thanks.dinamani

Post a Comment

0 Comments