""மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.
பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம்.
*************************
வில்லியனூர் அருகே நண்பரிடம் பந்தயம் வைத்து, வேகமாக சாப்பிட்டவர், முழு இட்லி தொண்டையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். புதுச்சேரி, வில்லியனூர் பெருமாள்புரம் குறவர் காலனியை சேர்ந்தவர் அய்யனார், கருவேப்பிலை-புதினா வியாபாரம் செய்து வந்தார். காலை வியாபாரம் முடிந்து, நண்பர் குமாருடன் கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள சாராயக்கடையில் குடித்துவிட்டு, அருகிலுள்ள இட்லி கடைக்கு சாப்பிடச் சென்றனர்.
இருவரும் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, "யார் முதலில் சாப்பிடுகிறார்கள், பார்ப்போமா?' என குமாரிடம், அய்யனார் பந்தயம் வைத்தார். அப்போது அய்யனார், முழு இட்லியை விழுங்கியபோது அது தொண்டையில் அடைத்துக் கொண்டது. அவரை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறினர். வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 Comments