புதிய விசா அறிவித்ததுஆஸ்திரேலிய அரசு


ஆஸ்திரேலிய அரசு புதிய விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்திய மாணவர்கள், ஆஸ்திரேலியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். இந்திய மாணவர்கள் மீது நடந்த இனவெறித் தாக்குதலாலும், ஆஸ்திரேலிய அரசின் விசா கெடுபிடிகளாலும், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

மாணவர் விசாவில், ஆஸ்திரேலியா வருவோர், அங்கேயே தங்கி ஓட்டல், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில், பகுதி நேர வேலையில் சேர்ந்து விடுகின்றனர். நள்ளிரவில் வேலை முடித்து வரும் இவர்களிடம், கொள்ளையர்கள் பணத்தை பறித்துச் செல்வது, கடந்த ஆண்டுகளில் அதிகமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா வரும் இளைஞர்கள், கணிசமான பணத்தை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள், கைச்செலவுக்காக பல்வேறு இடங்களில் வேலை செய்வதைத் தவிர்க்கும் நோக்குடன், புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் படிக்க வரும் மாணவர்களின் வங்கி சேமிப்பில், 18 லட்ச ரூபாய் இருப்பதாக நிரூபித்தால் தான், அவர்களுக்கு விசா வழங்கப்படும், என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த நடைமுறையால், வசதி குறைந்த மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்வது தடுக்கப்பட்டு விட்டது. எனவே, விசா கெடுபிடிகளைத் தளர்த்தும் படி, பல்கலைக்கழகங்கள் அந்நாட்டு அரசைக் கேட்டுக் கொண்டன. இதையடுத்து, அரசு விசா நடைமுறையில், சில மாற்றங்களைச் செய்துள்ளது.

இது குறித்து, நியூ சவுத் வேல்ஸ் முன்னாள் அமைச்சர் மைக்கேல் நைட் குறிப்பிடுகையில், "ஆஸ்திரேலியாவுக்குப் படிக்க வரும் மாணவர்கள், தங்கள் படிப்பு முடிந்த பின், மேற்படிப்புக்காக கூடுதலாகத் தங்கிக் கொள்ள, தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வங்கிக் கையிருப்பு, கணிசமான அளவில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா வரும் மாணவர்கள் படிப்பதற்காக மட்டுமே வருகிறோம். வேலை செய்வதற்கு அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்' என்றார்.

Post a Comment

0 Comments