போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துப்பாக்கி பரிசு
லட்சக்கணக்கான மக்கள் பஞ்சம், பட்டினியால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் சோமாலியா நாட்டில், மனப்பாடப் போட்டியில் வென்ற சிறுவர்களுக்கு, இயந்திரத் துப்பாக்கிகளை பரிசாக அளித்து மகிழ்ந்திருக்கிறது அந்நாட்டின் ஷபாப் பயங்கரவாத அமைப்பு. உலகில், பள்ளிக்கூடங்கள் மிக மிகக் குறைவாக உள்ள நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. 
 இந்நாடு கடந்த 20 ஆண்டுகளாக, வலுவான மத்திய அரசு இல்லாமல் சிதறுண்டு கிடக்கிறது. நாட்டின் தென்பகுதி, ஷபாப் பயங்கரவாத அமைப்பிடமும், பிற பகுதிகள் பல்வேறு பயங்கரவாத, பழங்குடியினக் குழுக்களிடமும் அகப்பட்டுள்ளன. 

தென்பகுதியில், பள்ளிக்கூடங்கள், வானொலி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகள் அனைத்தும், ஷபாப் வசம் உள்ளன. கடந்த ரம்ஜான் மாதத்தில், ஷபாப் கட்டுப்பாட்டில் உள்ள தென்பகுதி பள்ளிகளில், அந்த அமைப்பு பற்றிய விவரங்கள் மற்றும் குரான் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. 10 முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள், கடந்த 18ம் தேதி நிகழ்ந்தது. அதில், முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கொஞ்சம் பணம் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகள் தொடர்பான புத்தகங்கள், பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாவது இடம் பெற்ற மாணவருக்கு இரு கையெறி குண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. சூழல் காரணமாக சோமாலியாவில் உள்ள சிறுவர்களில் பெரும்பான்மையோருக்கு துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் பரிச்சயம் உண்டு.
;பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஷபாப் தலைவர் ஷேக் முக்தார் அபு மன்சூர், "இஸ்லாம் மதத்தைக் காப்பதற்காக, சிறுவர்கள் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில் துப்பாக்கியையும் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்' என்றார். 


No comments: