கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகி வந்த லோக்கல் கேபிள் டிவிக்கள் தங்களது ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டன. போலீசுக்குப் பயந்து இவற்றின் உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
கரூர் நகரத்தில் மட்டும் தளபதி டிவி, கரூர் டிவி , அம்பாள் டிவி, அன்னம் டிவி, கிங் டிவி, வேல் டிவி, ஏ.எம்.என். டிவி, ராயல் டிவி, வைகை டிவி , ஜெயம் டிவி என மொத்தம் 10 உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. இதில் ஒவ்வோரு லோக்கல் டிவி-யும் ஒளிபரப்பு செய்ய மாதம் ஒன்றுக்கு ரூ 75 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். ஆனால் இதற்கு முறையான ரசீது யாருக்கும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
மேலும், அட்வான்ஸாக ஒன்னறை லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூர் தொலைக் காட்சி நிலையங்களிலும் போலீசார் திடீர் ரெய்டு நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகி வந்த லோக்கல் கேபிள் டிவிக்கள் தங்களது ஒளிபரப்பை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
இதனால், கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
0 Comments