வெள்ளாடு வளர்ப்பது எப்படி ?

வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.


ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக்கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும். பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.

தண்ணீர் கவனம்: காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்: வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேயவிடும்போது சோர்ந்துவிடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்துவிட்டு வேலிமசால், முயல்மசால், கோ-4 மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப்போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக்கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு ஐந்தரை மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். மூன்று மாதங்க ளுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போடவேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுவர வேண்டும்.


இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்துவிட வேண்டும். ஆட்டுக்கு சினைப்பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்கு தயாராகிவிடும். எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டு குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்கவிட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.

source.dinamalar

2 comments:

! ஸ்பார்க் கார்த்தி @ said...

வெள்ளாடு வளர்ப்பிலும் கலக்கும் கரூர் கிருக்கனாரே, கலக்குங்க கலாய்க்கிறோம்,

karurkirukkan said...

thanks karthik