தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்


தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார்.

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார். சென்னை நோக்கி காரில் வந்த அவருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் பயணித்தார்.
இவர்களது கார் சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென முன்னாள் சென்ற பஸ் மீது கார் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அமைச்சர் சிவபதிக்கு விபத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மரியம் பிச்சை முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். முதல் முறையிலேயே அவர் அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தவர்.மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருக்கு பாத்திமாகனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

60 வயதான மரியம் பிச்சை ஆரம்பத்தில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். தியேட்டர் ஒன்றையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பாளராக செயல்பட்ட இவர் 27வது வார்டு கவுன்சிலராக இருந்தார். தேர்தலில் நிற்பதற்காக அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.விபத்தில் உயிரிழந்த மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: