இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு- நடந்தது என்ன

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில், இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத் தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ்(18).இவர் இந்தாண்டில், அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படிப்பதற்காக சேர்ந்தார். பள்ளி ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பியதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த பிப்., 8 ல் விசாரணைக்குப் பின், போலீசாரால் கைது செய்யப்பட்டு, 24 மணி நேரத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட அரசுத் தரப்பு வக்கீல், கிருத்திகா மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அதற்கான ஆவணங்களை நீக்கிய பின்பும் கூட, அவர் பள்ளியில் இருந்து ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.குற்றச்சாட்டுகள் பொய் என தெரிந்த பின், பள்ளியில் இருந்து ஒரு மின் அஞ்சல் அவருக்கு வந்தது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அவர் பள்ளிக்கு மீண்டும் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:எனக்கு தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால், போலீசார் அதைப் பொருட்படுத்தாமல் என்னை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்த ஒரே ஒரு கழிவறையைக் கூட என்னைப் பயன்படுத்த போலீசார் அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் என்னை காக்க வைத்தனர். அதன் பின், எல்லோர் முன்பும் அக்கழிவறையைப் பயன்படுத்த வேண்டியவளானேன்.என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பிய சீன மாணவனை, அவர்கள் ஏன் கைது செய்யவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், என்னை கைது செய்யும்படி, பிரின்சிபால் கடுமையாக நிர்பந்தம் செய்தார் என்று மட்டும் தெரியும்.இவ்வாறு கிருத்திகா தெரிவித்தார்.

கிருத்திகாவின் வக்கீல் ரவி பத்ரா இதுபற்றி கூறியதாவது:கிருத்திகாவை 24 மணி நேரத்துக்கும் மேலாக சிறையில் வைத்திருந்தது, சர்வதேச, அமெரிக்க மாகாண மற்றும் நியூயார்க் நகர சட்டங்களுக்கு விரோதமானது.அவரது தந்தை தேபாஷிஷ் பிஸ்வாசுக்கோ, தூதரக தலைமை அதிகாரி பிரபு தயாளுக்கோ கூட இந்த கைது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.அவருக்கு தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால், அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.இந்திய தூதரக அலுவலக தலைமை அதிகாரி பிரபு தயாள் கூறுகையில்,"தூதரக பாதுகாப்பு என்பது அதிகாரிக்கு மட்டும் தான் உண்டு. அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடையாது' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் நீதி கிடைத்த பின், இந்தியா திரும்பப் போவதாக கிருத்திகா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

No comments: