கனிமொழிக்கு ஜாமின் மறுப்பு ;கனிமொழி கைதாகிறார்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனியமாழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ; ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .

கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.

“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”; கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.

பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டும் பயனில்லாமல் போனது.

Post a Comment

0 Comments