இட்லியால் துபாய்க்கு சென்றவர்

பொள்ளாச்சி அருகே ராமச்சேரியிலிருந்து தயாரிக்கப்படும் இட்லிக்கு, துபாய், அபுதாபியில் கிராக்கி அதிகரித்துள்ளது.

நாகரீகம் வளர்த்த காலத்தில், "பிசா'வுக்கு மத்தியிலும் ஈடு கொடுத்து வருகிறது இட்லி. பெரும்பாலானோரின் காலை உணவு இட்லி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. காரணம், ஆவியில் வேக வைக்கப்படுவதும், உடலுக்கு கேடு விளைவிக்காததும் என்பது தான். இட்லிக்கு பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டு, நாவில் கொண்டாடி, மறைந்து போன நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள ராமச்சேரி இட்லிக்கு, பல்லாண்டுகளாக மவுசு அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ., தொலைவில், தமிழக- கேரள எல்லையில் உள்ள குக்கிராமம் ராமச்சேரி. மொத்தமாகவே, 25 குடும்பங்கள் வசிக்கும் ஊரின் முக்கிய தொழிலே, இட்லி தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், துபாய் உட்பட பல்வேறு இடங்களில் பணிபுரிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பலர், ராமச்சேரிக்கு சுற்றுலா வந்த போது, இட்லியை சுவைத்து, பிடித்துப் போன நிலையில், அதை வாங்கிக் கொண்டு துபாய்க்கும் பறந்த நிலையிலும், ஒரு வாரம் வரை கெடாமல் இருந்தது கண்டு வியப்படைந்துள்ளனர். அப்போது தான் ஏற்றுமதி எண்ணம், இவர்களுக்குள் தோன்றி, நாளடைவில், இவர்கள் மூலம் பல இடங்களுக்கு செல்ல ஏதுவானது. தற்போது, டில்லி, மும்பை, துபாய், அபுதாபி உட்பட பல இடங்களில், ராமச்சேரி இட்லி மற்றும் பொடிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இட்லி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது:மண் அடுப்பில், புளிய மரக்கட்டைகளை எரித்து, மண் பானை மற்றும் அதன் மேல் வலை போன்ற மூடியும் தான், இட்லி தயாரிக்க பயன்படும் உபகரணங்கள். தினமும் 6,000த்துக்கும் மேற்பட்ட இட்லிகள் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. வழக்கமான இட்லியை விட அகலமாகவும், தோசை போன்று இருக்கும்; ஒன்றின் விலை நான்கு ரூபாய். இரவு 12.00 மணியிலிருந்து காலை 8.00 மணி வரை, இப்பணி மும்முரமாக நடக்கும். இட்லியை தயாரிக்க பயன்படுத்தும் "சூட்சமம்' தான், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்க வைக்கிறது. உடலுக்கு பாதிப்பு தரக்கூடிய எந்தப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை.ஒரு பெட்டியில் 150 இட்லிகளை அடுக்கி, பொடியுடன் ஏற்றுமதி செய்கிறோம். ஒரு மணி நேரத்தில் 75 இட்லிகளை தயாரிக்கலாம்.இவ்வாறு, இட்லி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments