சாய் பாபா சகாப்தம் முடிந்ததா ?

by 9:57 AM 0 comments

புட்டபர்த்தி பகவான் சத்ய சாய்பாபா (85), நேற்று காலை ஸித்தியடைந்தார். அவரது உடலை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்துள்ளனர். வரும் 27ம் தேதி அவரது உடல், சமாதியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஆந்திர அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆன்மிக தலைவராக இருந்து கொண்டு, எண்ணற்ற சமூக சேவைகளை ஆற்றியவர் சாய்பாபா. உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களை கொண்ட சாய்பாபாவின் உடல் நிலை, கடந்த மாதம் 28ம் தேதி மோச மடைந்தது. அவரது இருதயம், சிறுநீரகம், கல்லீரலின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து, நேற்று செயலிழந்தன. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தியசாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 7.40 மணிக்கு அவர் ஸித்தியடைந்தார்.

சத்தியசாய் மருத்துவமனையின் இயக்குனர் ஏ.என்.சபையா, சாய்பாபாவின் இதயம் மற்றும் நுரையீரல் முற்றிலும் தன் செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாக, நேற்று காலை அறிவித்தார். அவர், "பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் பூத உடலை நீக்கி, விண்ணுலகம் சென்றார். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து விட்டது' என்றும் தெரிவித்தார்.

சாய்பாபாவின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அனந்தப்பூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த் ஹாலில், சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டது. முன்னதாக, அவர் வழக்கமாக வலம்வரும் பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று, சாய்பாபாவை தரிசிக்க காத்திருந்தனர்.

மாநில தொழில்துறை அமைச்சர் கீதா ரெட்டி குறிப்பிடுகையில், "சத்திய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் தான் பாபாவின் உடலை சமாதியில் அடக்கம் செய்வது குறித்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அடுத்த இருநாட்களுக்கு (திங்கள், செவ்வாய்க்கிழமை) சாய்பாபாவின் உடல் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருக்கும். மாநில அரசு நான்கு நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கிறது' என்றார்.

கடந்த 1926ம் ஆண்டு சத்திய நாராயண ராஜு என்ற இயற்பெயருடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் தான் நான் என கூறி வந்த சாய்பாபா, ஆன்மிக பணியுடன் ஏராளமான கல்வி, சுகாதார பணிகளை ஆற்றி வந்தார். கையை அசைத்து லிங்கம், மோதிரம், விபூதி போன்ற பொருட்களை வரவழைத்து பக்தர்களை ஆசீர்வதிப்பது உண்டு. புட்டபர்த்தி பகுதி எல்லா வளத்துடன் இருக்க அவர் ஆற்றிய சமுதாயப் பணிகள் ஏராளம்.அவர் ஆற்றிய பணிகளை, தொடர்ந்து அறக்கட்டளை ஆற்றும் என, மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில், சமாதியாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நான்கு நாட்கள் துக்கம் : நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, அறிவித்துள்ளார் கிரண்குமார் ரெட்டி. புதன் கிழமையன்று அனந்தப்பூர் மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பாபாவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சாய்பாபா மருத்துவமனையில் இருந்த போதே அவரை பார்க்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், புட்டபர்த்தியில் குவிந்தனர். ஆனால், பாபாவை பார்க்க அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். எனவே, புட்டபர்த்தியில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, பாபாவின் உடலை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளதால் கூடுதல் பாதுகாப்புக்கு, மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. பாபாவின் மறைவையொட்டி, புட்டபர்த்தியில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.ஆன்மிக பணியுடன் மக்கள் சேவையை ஆற்றி, உலக வரைபடத்தில் புட்டபர்த்தியை இடம்பெற செய்த மகானின் சகாப்தம் நிறைவடைந்ததைக் கண்டு, மக்கள் பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.தனது தூய்மையான சமூக பணியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பாபா. தனி விருப்பின்றி சமுதாய சேவை ஆற்றிய அவர், அன்பின் திருவுருவாக வழிகாட்டிய சகாப்தம் முடிந்தது என்று பக்தர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், அவர் காட்டிய வழியில் தொண்டு தொடரும் என்றும் கூறினர்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்கு அவர் ஆசி வழங்கி, வாழ்வில் வசந்தம் ஏற்பட்டதைக் கூறி புகழாரம் சூட்டி, அங்கே பக்தர்கள் குவிந்துள்ளனர்.வெளிநாட்டு பக்தர்கள் பலர் விமானம் மூலம் பாபாவை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதற்காக, கூடுதல் விமான சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரமுகர்கள் அஞ்சலி செய்தி அனுப்பியவண்ணம் உள்ளனர்.

சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.

இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்


மறைந்த ஆன்மீகத் தலைவர் சத்ய சாய்பாபாவின் உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசன் முதல் ஆண்டி வரை அத்தனை தரப்பினராலும் வணங்கப்பட்ட ஒரு ஆன்மீகத் தலைவர் சாய்பாபா. அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சாய்பாபா நேற்று காலை 7. 40 மணிக்கு மரணமடைந்தார். அவரது மறைவு சாய்பாபாவின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. உலகெங்கிலும் உள்ள சாய் பாபா மையங்களில் பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புட்டபர்த்தியிலும் சோக அலை வீசுகிறது.

85 வயதான சாய்பாபாவின் மரணச் செய்தி நேற்று காலை பத்தேகால் மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டது.

பாபாவின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரஷாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் ஹால் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை வரை உடல் வைக்கப்பட்டிருக்கும்.

அவரது உடலை செவ்வாய்க்கிழமை வரை அனைவரும் கண்டு இறுதி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சாய்பாபாவின் இல்லம் உள்ள யஜூர் மந்திர் அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்து ஆன்மீகத் தலைவர்கள் உடல் அடக்க நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ள ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சவீதா ரெட்டி, அடக்கம் நடைபெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அதற்கான விரிவான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பக்தர்கள் புட்டபர்த்தி வருகின்றனர்.

பாபாவின் உடல் ஆரஞ்சு நிற உடையால் மூடப்பட்டிருந்தது. அவரது கண்கள் வரையிலும் துணியைப் போர்த்தியிருந்ததாக உடலை நேரில் பார்த்த சாய் குமார் என்ற உள்ளூர் வர்த்தகர் தெரிவித்தார். பாபாவின் உடலுக்கு அருகே இருந்த யாருமே பேசவில்லை. மாறாக அவர்களது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது என்றார் அவர்.

நேற்று மாலை 3 மணியளவில் சாய் குல்வந்த் ஹாலுக்கு சாய்பாபாவின் உடல் மாற்றப்பட்டது. அங்குதான் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார் சாய்பாபா. பக்தர்களையும் இங்குதான் அவர் சந்தித்து தரிசனம் தருவார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: