இந்தியா-பாக். கிரிக்கெட்

by 3:45 PM 1 comments
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளிடையே நாளை நடக்கும் போட்டியை காண பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா. பாகிஸ்தான் பிரதமர் கிலானி உள்பட ஏராளமான வி.ஐ.பி.க்கள் வருகிறார்கள். இதனால் மொகாலி மைதானத்தில் வரலாறு காணாத வகையில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி, அமைச்சர்கள் புடைசூழ வர உள்ளார்.

இந்தியா அழைப்பை ஏற்று அவர் வருவதால் மொகாலியில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. கிலானி வந்த சிறிது நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வர உள்ளார். மொகாலி மைதானத்தில் மன்மோகன்சிங், கிலானி, சோனியா ஆகிய மூவரும் அருகருகே அமர்ந்து போட்டியை பார்ப்பார்கள். ராகுல்காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோரும் நாளை மொகாலி வருவார்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு தேசிய கமாண்டோ படையின் 100 கருப்புப்பூனை படை வீரர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவார்கள். மொகாலி மைதானத்தின் உள்பகுதி பாதுகாப்பை துணை நிலை ராணுவம் ஏற்றுள்ளது. மைதானத்துக்கு வெளியில் பஞ்சாப் மாநில போலீசார் 1800 பேர் நிறுத்தப்படுவார்கள். ஒவ்வொரு பார்வையாளரையும் அவர்கள் 3 இடங்களில் சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். இருநாட்டு பிரதமர்கள் வருவதால் மைதானத்தை சுற்றி உள்ள உயரமான கட்டிடங்களில் நவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள.

தீவிரவாதிகள் வான்வழித் தாக்குதல் நடத்தி விடக்கூடாது என்பதற்காக மைதானத்தை சுற்றி விமான எதிர்ப்பு பீரங்கிகளும், ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த குண்டுகளை செயல் இழக்க செய்ய ரோபோ கருவியுடன் ஒரு வாகனம் மைதானம் முன் நிறுத்தப்பட்டுள்ளது. மைதானம் அருகில் வி.ஐ.பி.க்கள் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆள் இல்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள் நாளை 3 மணி நேரத்துக்கு முன்பே வந்து இருக்கையில் அமர வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகின் பல நாடுகளில் சர்வதேச போட்டிகளுக்கு செய்யப்பட்டது போன்று மிக பிரமாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நாளை மொகாலி போட்டிக்காக செய்யப்பட்டுள்ளது.


**************

இந்தியாவும், பாகிஸ்தானும் கையில் ஆயுதங்களை வைத்து 'விளையாடியதை' நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் பேட்டும், பந்துமாக இரு தரப்பும் விளையாடியதை கிட்டத்தட்ட அத்தனை இந்தியர்களும் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். இந்த இரு நாடுகளின் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் அப்படி ஒரு 'வைப்ரேஷன்'.

இந்தியா என்றால் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் என்றால் இந்தியாவிலும், ஒரு மாதிரியான எண்ணத்தை இரு நாடுகளுமே சேர்ந்து விதைத்து விட்டன. விதை இன்று வளர்ந்து, விருட்சமாகி விட்டதால் அவ்வளவு சீக்கிரம் அந்த எண்ணத்தை மாற்றி விட முடியாது. மாற்ற முடியாத அளவுக்கு சூழல்களும் மோசமாகவே உள்ளன.

இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது அரை இறுதிப் போட்டியில் நாளை மோதப் போவதை வேடிக்கை பார்க்க பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டு பிரதமர் கிலானி பஞ்சாப் வருகிறார். அதேபோல நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் மொஹாலி விரைகிறார். இருவரும் சேர்ந்து இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் மோதிக் கொள்வதைப் பார்த்து ரசிக்கப் போகிறார்கள். விளையாட்டு முடிந்ததும் பரஸ்பரம் கை குலுக்கி விடை பெறப் போகிறார்கள்.

இது இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் இறுக்கத்தைக் குறைக்க உதவும் என்ற எதிர்பார்ப்பு இரு நாடுகளிடையேயும் நிலவி வருகிறது. நிச்சயம் அது நடக்கும்தான். அதேசமயம், விளையாட்டோடு நின்று விடாமல் அதையும் தாண்டி புனிதமான உறவாக இது மலர வேண்டும் என்ற ஆர்வம் இரு நாடுகளிலும் உள்ளதையும் மறக்கக் கூடாது.

இந்த சமயத்தில் இதற்கு முந்தைய இந்த இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவலைகள் வந்து போவதை மறக்க முடியாது.

முதல் பார்வை:

அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1987ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியைக் காண வருமாறு ராஜீவ் காந்தி அழைப்பு விடுக்க அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஜியா. ஆச்சரியம் பிளஸ் சங்கடத்துடன் அதை எதிர்கொண்ட அவர், வருகிறேன் என்று கூறி விட்டு வந்தும் விட்டார்.

முக மலர்ச்சியுடன் ஜியாவை வரவேற்ற ராஜீவ், அவருடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டு உறவுகளில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது உண்மை.

2வது பார்வை:

ஆண்டு 2005. பாகிஸ்தான் முஷாரப் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியாவில் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஒரு நாள் போட்டியைக் காண முஷாரப் வந்தார். அவரும், மன்மோகன் சிங்கும் இணைந்து இப்போட்டியைக் கண்டு களித்தனர்.

ஆனால் இப்போட்டிக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உறவில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

3வது பார்வை:

இப்போது மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண இருநாட்டு ரசிகர்களைப் போலவே இருநாட்டுத் தலைவர்களும் தயாராகி விட்டனர்.

கிரிக்கெட்டில் இந்த இரு நாடுகளும், கடுமையான மோதலைக் கொடுக்க ஒருபோதும் தவறியதில்லை. 1992ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய விக்கெட் கீப்பர் கிரன் மோரேவை மியான்தத் கிண்டலடித்த விதம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலவில்லை.

அதேபோல வெங்கடேஷ் பிரசாத்தும், அஜார் மெஹமூதும் 2000மாவது ஆண்டு மோதிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல 2007ம் ஆண்டு ஷாஹித் அப்ரிதியும், கெளதம் கம்பீரும் உரசிக் கொண்டதும் நினைவிருக்கலாம்.

அதேசமயம், 1965ம் ஆண்டு இரு நாடுகளும் போரில் குதித்தபோது வேண்டாம் சண்டை, அமைதித் தீர்வு காண முயற்சியுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஹனீப் முகம்மதும், இந்திய ஜாம்பவான் மன்சூர் அலி கான் பட்டோடியும் கூட்டாக அழைப்பு விடுத்தது நிறைய பேருக்கு மறந்து போயிருக்கலாம்.

கிரிக்கெட்டில் இரு நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருந்தாலும் கூட இந்திய ரசிகர்கள் தங்களது தோழமையை வெளிப்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக சென்னை ரசிகர்கள்.

1999ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி இரு நாடுகளும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடின. அப்போது சயீத் அன்வர் உலக சாதனை படைத்தார் ரன் குவிப்பில். அதை அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று பாராட்டி கை தட்டி உற்சாகமாக வரவேற்றதை பாகிஸ்தானியர்களே எதிர்பார்க்கவில்லை. அந்த அன்பில் அவர்கள் நெகிழ்ந்து போய் விட்டனர். அப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபோது, ஏதோ இந்தியா வெற்றி பெற்றால் எப்படி வரவேற்பார்களோ அதேபோல ரசிகர்கள் எழுந்து நின்று பாகிஸ்தான் அணியைப் பாராட்டியது கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் ஆட்டம்தான் என்பதை நிரூபிப்பதாக அமைந்தது.

அதேபோல இந்திய அணி நீண்ட காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய பந்து வீச்சாளர் எல்.பாலாஜி அபாரமாக பந்து வீசி பாகிஸ்தானை நிலை குலையச் செய்த விதத்தை அந்த நாட்டு அதிபர் முஷாரப் வெகுவாகப் பாராட்டினார்.

இப்படி இரு நாடுகளும் சண்டைக் கோழிகளாகவே இருந்தாலும் கூட கிரிக்கெட் ஆட்டத்தில் அவ்வப்போது தோழமையையும் காட்டத் தவறியதில்லை இரு நாடுகளும்.
***********************************
******************

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

nice post.,


http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html