நூற்றாண்டின் பெரும் சோகம் - ஜப்பானில் பூகம்பம் - சுனாமி

ஜப்பானில் பதிவுகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் வட கிழக்கு கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரமுடைய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
கரையோர நகரான செண்டாயில் முந்நூறு வரையிலான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

கரிய நிறத்தில் கடலில் பெருந்திரளாக புகுந்து கார்கள், வீடுகள் படகுகள் போன்றவற்றை நிலத்துக்குள் நெடுந்தூரம் இழுத்து வந்து, பின்னர் அலை பின்வாங்கிபோது எல்லாமும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.

ரிக்டர் அளவையில் எட்டு புள்ளி ஒன்பது புள்ளிகளை இந்த நிலநடுக்கம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுக் கழகம் கூறுகிறது.

ஜப்பானில் சுனாமியின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் அளவானது அங்கு ஒட்டு மொத்த அழிவவு குறித்த மதிப்பீட்டைச் செய்வதை சிரமாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

பெரிய கடற்கரை நகரான செண்டாயும், அதனைச் சுற்றவரவுள்ள பண்ணை நிலங்களும், சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. அதேவேளை, அருகில் உள்ள பகுதிகளில் தீ பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பகுஷிமா டேய்சி அணு உலையில் குளிரூட்டும் முறைமை பழுதடைந்ததை அடுத்து அது மூடப்பட்டது. அந்தப்பகுதியில் இருந்த 2000 பேர் வரையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்க்கப்பட்டனர்.

மியாகி மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு அணு உலையில் ஒரு தீச் சுவாலையும் ஏற்பட்டது.

தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரியுள்ளது.

ஜப்பான் அருகே கடலில் நடந்த நிலநடுக்கம் பசிபிக் வட்டகை நாடுகளில் சுனாமி அபாயம் எழுந்துள்ளது.

ஆனாலும் ஹவாயி தீவுகளைச் சென்றடைந்த முதல் சுனாமி அலை ஒரு மீட்டருக்கும் குறைவான உயரமே இருந்ததாகவும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

லத்தீன அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலி ஆகியவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உருவாகின்ற சில சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளின் மொத்த தரை மட்டத்தை விட உயரமாக இருக்கக்கூடும் என்று செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, பிலிப்பைன்ஸ், குரில் தீவுகள், தாய்வான் போன்ற நாடுகளை ஒப்பீட்டளவில் உயரமும் சக்தியும் குறைவான சுனாமி அலைகள் சென்றடைந்துள்ளன.

Post a Comment

0 Comments