15 ஊராட்சிகளுக்கு தமிழகத்தில் உத்தமர் காந்தி விருது

தமிழகத்தைச் சேர்ந்த 16 ஊராட்சி அமைப்புகளுக்கு உத்தமர் காந்தி விருதினை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த விருதினை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் தலைவர்களிடம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரக வளர்ச்சித் திட்டங்களில் சிறந்த மற்றும் புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட கிராம ஊராட்சிகள் தேர்வுச் செய்யப்பட்டு, அவற்றின் செயல்பாட்டினைப் பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படும்.

இவ்விருதிற்காக ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் 15 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும் என்றும், 11.08.2006 அன்று சட்டப் பேரவையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அவ்விருதுக்கு, உத்தமர் காந்தி ஊராட்சி விருது என முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.

2006-07ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் முன்மாதிரியாக அரசின் திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்திச் சாதனைகள் நிகழ்த்திய 15 கிராம ஊராட்சிகளுக்கு, உத்தமர் காந்தி ஊராட்சி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2008-09 ஆம் ஆண்டு வரை கடந்த 3 ஆண்டுகளில், 45 ஊராட்சிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 2009-10ஆம் ஆண்டில் இதே போன்று சிறப்பான முறையில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனைகள் நிகழ்த்தியுள்ள 86 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அது தொடர்பான பரிந்துரைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்பட்டன.

அவற்றில் கள ஆய்வுக்குத் தகுதியான 46 ஊராட்சிகளை மாநில அளவில் முதல் கட்டமாகத் தேர்வு செய்து,கூடுதல் இயக்குநர் நிலையிலான உயர் அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த 46 கிராம ஊராட்சிகளிலிருந்து 15 சிறந்த கிராம ஊராட்சிகளை 2009-10ஆம் ஆண்டிற்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருது பெறுவதற்குத் தகுதியுடைய ஊராட்சிகளாகத் தேர்வு செய்து அரசு அறிவித்தது.

அதன்படி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டமங்கலம், விலாரிபாளையம் ஆகிய 2 ஊராட்சிகளும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகரிகாத்தான், மேதலோடை ஆகிய 2 ஊராட்சிகளும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மேலப்புதுக்குடி, ஒட்டநத்தம் ஆகிய 2 ஊராட்சிகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லஞ்சி, விருதுநகர் மாவட்டத்தில் நத்தத்துப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் லிங்கவாடி, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளித்தம்மம், திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிக்குறிச்சி, திருப்பூர் மாவட்டத்தில் கணக்கம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நரசீபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் கடப்பேரிக்குப்பம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அரக்கன்கோட்டை ஆகிய 15 ஊராட்சிகளும், 2009-10ஆம் ஆண்டிற்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருதினைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 15 கிராம ஊராட்சிகளின் தலைவர்களுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் , “உத்தமர் காந்தி ஊராட்சி விருது” வழங்கி, தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தினை கிராம ஊராட்சிக்கும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.