விஏஓ தேர்வு: 9.59 லட்சம் பேர் எழுதினர்


வருவாய்த் துறையில் காலியாக உள்ள 3484 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 9.59 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தமிழக அரசின் வருவாய்துறையில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவியில் 3484 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத் தப்படுகிறது.

10-ம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்டு நடைபெறும் இந்த தேர்வு எழுத கடும் போட்டி நிலவியது. 10 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

9 லட்சத்து 59 ஆயிரம் பேர் இன்று தேர்வு எழுதினார்கள். தமிழ்நாடு முழுவதும் 104 நகரங்களில் 3,465 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு ஏராளமானோர் வந்தனர். தேர்வு மைய வாசலிலேயே தேர்வு எழுத வருபவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பரிசோதித்து வழி காட்ட 2 அரசு ஊழியர்கள் நின்றனர்.

இளைஞர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும் ஏராளமானோர் தேர்வு எழுதினார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இதற்காக 298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணித்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தெந்த மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.

வி.ஏ.ஓ. பதவிக்கு நேர்முக தேர்வு கிடையாது. எழுத்து தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து தான் பணி நியமனம் செய்யப்படும். எனவே வேலையில்லா பட்டதாரிகள் 6 மாதத்துக்கும் மேலாக இந்த தேர்வுக்காக பயிற்சி பெற்றனர்.

Post a Comment

0 Comments