ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்

by 11:12 AM 0 comments


ஸ்டீஃபன் ஹாக்கிங், கலீலியோ மறைந்து சரியாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ஸ்ஃபோர்டில் 1942ல் அவதரித்தார்.

அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இயற்பியல் பட்டம் பயின்றார். இளவயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ் என்ற நரம்பியக்க நோயால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கேம்பிரிட்ஜில் நியூட்டன் வகித்த பதவியான லூக்காசியன் கணிதவியல் பேராசிரியர் பதவியினை வகிக்கிறார்.நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஹாக்கிங் வைக்கப்பட்டு போற்றப்படுகிறார். ஹாக்கிங் உடைய மிகப்பிரபலமான நூல் "காலம்-ஓர் வரலாற்றுச் சுருக்கம்" (A brief history of Time)ஆகும். விற்பனை பட்டியல் வரிசையில் முன்னிலை வகித்த நூல்.பெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம் இயற்பியல் உலகில் புகழின் உச்சிக்கு வந்தார், ஸ்டீஃபன் ஹாக்கிங். இம்முழு பேரண்டமும் ஒரு சிறு புள்ளியிலிருந்து வெடித்து வெளிப்பட்டது என இக்கொள்கை கூறுகிறது. அப்புள்ளியானது முடிவற்ற சிறிய புள்ளியாகவும், முடிவற்ற அடர்த்தியுடனும், முடிவற்ற நிறையீர்ப்பு கொண்டதாகவும் இருந்தது. ரோஜர் பென்ரோஸ்(Roger Penrose) என்பவருடைய கணித நுணுக்கங்களை பயன்படுத்தி தன்னுடைய நிரூபணங்களை ஹாக்கிங் நிறுவினார். இந்நுணுக்கங்கள் அண்டப்பிறப்பினை பற்றி ஆராய்வதற்காக மேம்படுத்தப்பட்டவை அல்ல, மாறாக கருந்துளைகளை (Black holes) பற்றி ஆராய்வதற்காக வளர்த்தெடுக்கப்பட்டவை.

போதியஅளவு பெரிய விண்மீன்கள் தன்னுடைய இறுதி காலத்தின்போது வலுவிழந்து அதனுள் இருந்த அனைத்து விஷயங்களும் நசுக்கப்பட்டு முடிவற்ற சிறுபுள்ளியாக முடிவற்ற நிரையீர்ப்பு, அடர்த்தி கொண்ட ஒற்றையாக சுருக்கப்படுகின்றன என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. ஆனால் பேரண்டத்தின்பிறப்பு என்பது கருந்துளையின் மறுதலை என ஹாக்கிங் உரைத்தார்.பொருட்கள் நசுக்கப்பட்டு ஒற்றைப்புள்ளியாக ஆவதற்கு மாறாக, இப்பேரண்டத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்தும் ஓர் ஒற்றை புள்ளியிலிருந்து பிரவாகமெடுத்தவை தான். இப்பேரண்டத்தை (Universe) முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டுமானால் கருந்துளைகள் பற்றிய ரகசியம் முடிச்சவிழ்க்கப்பட வேண்டும் என்றார் ஹாக்கிங்.

கருந்துளைகள்:

கருந்துளைகளோடு நட்பாடுவதற்காக ஹாக்கிங் மற்றும் சக இயற்பியலாளர்கள் அறிவுப்பூர்வ இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்கினார். 1970 களிலிருந்து 80 வரையான காலம் கருந்துளைகளைப் பற்றிய ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தது.

தெளிவற்றிருந்து மீண்டும் தெளியவந்திருந்த இந்த பிம்பத்தில் ஏதோவொன்று தவறிப்போயுள்ளதை ஹாக்கிங் உணர்ந்தார். பேரளவிலான அண்டப்பொருள் இயற்பியலை மட்டுமே கருந்துளை ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது. நிறையீர்ப்பின் இயற்பியல் நியூட்டனால் முதலில் வளர்க்கப்பட்டு ஐன்ஸ்டீனுடைய பொது மற்றும் சிறப்பு சார்பியல் மூலம் பின்னர் வார்த்தெடுக்கப்பட்டது.

கருந்துளைகளை பற்றி முழுவதும் அறிந்துகொள்ள சிறிய அளவிளான அண்டப்பொருள் இயற்பியலையும் பயன்படுத்தவேண்டும் என்றார் ஹாக்கிங். சிறிய அளவிலான அண்டப்பொருள் இயற்பியல் என்பது அணு, அணுக்குள் நிகழும் இயக்கங்களைப் பற்றி விளக்ககூடிய குவாண்டம் இயங்கியல் ஆகும்.

இதற்கு முன் யாரும் இவ்விரு இயற்பியல் களங்களை இணைத்துப் பார்த்ததில்லை. கருந்துளையின் அடர்நிறையீர்ப்புக்குள் குவாண்டம் இயங்கியலையும் ஐன்ஸ்டீனுடைய சார்பியலையும் ஒரே சமயத்தில் நிலைநிறுத்தக்கூடிய புதிய வழியைப் பற்றி ஹாக்கிங் சிந்தித்தார்.

ஹாக்கிங் கதிரியக்கம்:


சில மாதங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த முடிவுடன் ஹாக்கிங் வந்தார். கருந்துளையிலிருந்து ஏதோ சில வெளிவருகின்றன என அவருடைய சமன்பாடுகள் காட்டின. இது நடக்கவியலாத ஒன்று என யூகிக்கப்பட்டது.

கருந்துளைகளைப் பற்றி அறிந்திருந்த அனைவரும் அனைத்து விஷயங்களும் கருந்துளைக்குள் விழுந்துவிடும், ஒளி கூட தப்புவதில்லை என்றே கருதினார்கள்.

ஆதலால் ஹாக்கிங் மேலும் பரிசோதித்தார், மேலும் அதிகமாக அவருடைய கருத்து சரி என அறிந்துகொண்டார். கருந்துளையிலிருந்து கதிரியக்கம் வெளிப்படுவதை கண்டார். கருந்துளைகள் ஆவியாகி மறைந்துபோவதற்கு இக்கதிரியக்கம் தான் காரணம் என ஹாக்கிங் மெய்ப்பித்தார். இது "ஹாக்கிங் கதிரியக்கம்" என அழைக்கப்படுகிறது.

கருந்துளைகளின் ஆவியாதல் குறித்த ஹாக்கிங் கொள்கை புரட்சிகரமானதாகவும், வினோதமானதாகவும் இருந்த போதிலும் பெருமளவில் எற்றுக்கொள்ளப்பட்டது. அடிப்படை முக்கியத்துவத்திலிருந்து இவை வெகுதொலைவில் இருப்பதை ஹாக்கிங் அறிந்திருந்தார். 1976ல் "The breakdown of predictability in garaviational collapase" என்ற ஆய்வுத்தாளை அவர் வெளியிட்டார். அவ்வாய்வுத் தாளில் "அங்கு கருந்துளை மட்டும் மறைந்துபோவதில்லை, அதனுள் உறிஞ்சப்பட்ட அனைத்து விஷயங்களும் மறைந்து போய்விடுகின்றன" என அவர் வாதிட்டார்.

சான் பிரான்ஸிஸ்கோ வில் நடைப்பெற்ற இயற்பியல் சந்திப்பு நிகழும் வரை ஹாக்கிங்கின் யூகங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. உலகின் முன்னனி இயற்பியலாளர்கள் முன்னிலையில் ஹாக்கிங் தன்னுடைய ஆய்வுகளை வெளியிட்டார். ஜெராட் ஹூஃப்ட் (Gerad t' Hooft)மற்றும் லியோனர்ட் சஸ்கின்ட் (Leonard Susskind) ஆகிய இருபெரும் இயற்பியலாளர்களும் அங்கிருந்தனர்.

ஹாக்கிங்கின் கருத்துக்கள் கருந்துளைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல, மாறாக இயற்பியலின் அனைத்து செயல்களுக்கும் பொருந்தக்கூடியது என இருவரும் உணர்ந்தனர். "ஹாக்கிங் கருத்து மெய்யாக இருக்குமானால் அது இயற்பியல் முழுவதையும் பாதிக்கும்; காரணத்திற்கும் காரியத்திற்கும் நேரடி தொடர்பற்று போகும்; இயற்பியல் வலுவிழந்து போகும்" என சஸ்கின்ட் கூறினார்.


சான்பிரான்ஸிஸ்கோ சந்திப்பிலிருந்து "தகவல் முரண்மெய்மை" யானது இயற்பியலின் மிகவும் அடிப்படையான மிகவும் கடினமான பிரச்சினையாக உருவெடுத்தது. விவாதங்கள் சூடுபிடித்தன, சஸ்கின்ட்ன் மற்றும் ஹாக்கிங்கின் கருத்தினை தவறென்போர் ஒர் அணியாகவும் ஹாக்கிங் மற்றும் அவரது சகாக்கள் மற்றோர் அணியாகவும் வாதிட தொடங்கினர்.

தொடர்ந்து 20 ஆண்டுகள் அனல் பறக்கும் விவாதத்திற்கு பிறகும் கூட இரு அணியினரும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

ஜூவன் மால்டசீனா (Juan Maldacena), அர்ஜென்டினாவின் இளம் கணித மேதையுடைய ஆய்வுத்தாள் வெளியானது. கருந்துளையினுள் இருந்த விஷயங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய மிகக்கண்டிப்பான கணிதப்பூர்வ விளக்கத்தை அளித்தது அவ்வாய்வுத்தாள். ஆம், மால்டசீனாவின் வெளியீடு கருந்துளையினுள் உள்ள விஷயங்களுக்கு ஒன்றும் நேர்வதில்லை என உரைத்தது. ஆனாலும் ஹாக்கிங் சமாதானமடையவில்லை.

கிறிஸ்டோப் கால்ஃபர்ட் என்ற இளம் ஆராய்ச்சி மாணவருடன் இணைந்து மால்டசீனாவின் நிரூபணங்களை உடைக்க ஹாக்கிங் முனைந்தார். 2 ஆண்டுகளாகியும் அதனை முறியடிக்க இயலவில்லை.

அச்சமயம் ஒர் பேரிடர் நேர்ந்தது. ஹாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாக்கிங் மரணமடைந்துவிடுவார் என அனைவரும் கவலையடைந்தனர். ஆனால் அதன் பின் 30 ஆண்டுகளாகியும் ஜீவித்துக்கொண்டுள்ளார்.

இன்றுவரை முழுவதும் நிரூபிக்கப்பட்ட நிருபணங்களை ஹாக்கிங்கினால் கொடுக்கமுடியவில்லை. அவர் சக்கரநாற்காலியில் அமர்ந்துக்கொண்டு, கண்களின் அசைவால் கண்ணியோடு உறவாடி தன்னுடைய கருத்தினை நிரூபிக்க முனைந்துக்கொண்டிருக்கிறார் அவர் வெற்றிபெற்றுவிட்டால், அது அவருடைய நாயகன் ஐன்ஸ்டீனுடைய சாதனையைவிட மிகப்பெரிய சாதனையாக திகழும்.

courtesy..thinnai.com

____________________________________________________________________
அது 2005-ம் ஆண்டு. வீல்சியாரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல்சியாரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கொம்ப்யூட்டரும், வொய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஷ் டே
டைம் டோக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன
இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில்
சொல்லி அனைவரையும்
அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி
இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ்யமாகவும், சவால்
நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த
உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று
தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம்
இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார்.
ஒக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வோர்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச்சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின்
மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச்சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன்கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன்இருப்பைத உணர்ந்தார். வீல்சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினைமுடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல்வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம்நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எப்ரீஃப் ஹிஸ்ரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சொஃப்ட்வெயார் கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.


‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும்ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நேர்ஸ்ஸை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.

‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்!

இந்த பதிவை எழுதியவர்களுக்கே எல்லா புகழும் போய் சேரும் ,எங்கோ படித்து எடுத்து வைத்தேன் இன்று எல்லோருக்கும் பொய் சேர வேண்டும் என்பதற்காக என்னுடைய வலைப்பூவில் ! நன்றி. karurkirukkan.blogspot.com

மேலும் விவரங்களுக்கு
http://en.wikipedia.org/wiki/Stephen_Hawking

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: