ஆசிய விளையாட்டு-இந்தியா தங்க மழை


ஆசிய விளையாட்டு, தடகளத்தில் இந்தியா அசத்தியது. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன் தங்கம் வென்றார். இப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத் கைப்பற்றினார். பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபிள்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று தடகளப் போட்டிகள் ஆரம்பமாகின. பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், கவிதா ராத் பங்கேற்றனர். பந்தய தூரத்தை 31 நிமிடம், 50.47 வினாடிகளில் கடந்த இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவரை அடுத்து 31 நிமிடம், 51.44 வினாடிகளில் வந்த மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராத், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பக்ரைன் வீராங்கனை வெண்கலம் வென்றார்.
சுதா அபாரம்:
பெண்களுக்கான 3000 மீ., "ஸ்டீபில்சேஸ்' ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங், ஜெய்ஷா ஆர்சத்ரி புதியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பந்தய தூரத்தை 9 நிமிடம், 55.67 வினாடிகளில் கடந்த இந்தியாவின் சுதா சிங், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இவர் தனது சொந்த சாதனையை முறியடித்தார். டில்லி காமன்வெல்த் போட்டியில் இவர், பந்தயதூரத்தை 9 நிமிடம், 57.63 வினாடிகளில் கடந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை புதியா, 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே சீனா, ஜப்பான் வீராங்கனைகள் வென்றனர்.
வில்வித்தையில் முதல் பதக்கம்:
பெண்களுக்கான வில்வித்தை குழு போட்டியில் இந்தியா சார்பில் டோலா பானர்ஜி, தீபிகா குமாரி, ரிமிலி புருலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி 225-152 என்ற கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தியது. காலிறுதியில் இந்திய அணி 214-202 என்ற கணக்கில் வட கொரியாவை வீழ்த்தியது. பின்னர் தென் கொரியா, இந்தியா அணிகள் மோதிய அரையிறுதி போட்டி 221-221 என சமநிலை அடைந்தது. "டை-பிரேக்கர்' சுற்றில் 26-29 என இந்திய வீராங்கனைகள் ஏமாற்றினர். இதனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 218-217 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது. இது வில்வித்தையில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை முறையே தென் கொரியா, சீனா அணிகள் கைப்பற்றின.
ரவிந்தர் வெண்கலம்:
ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில், 60 கி.கி., "கிரிகோ-ரோமன்' எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் இந்தியாவின் ரவிந்தர் சிங், கஜகஸ்தானின் டென்ஜிக்பயேவை 3-1 என வீழ்த்தினார். பின்னர் நடந்த அரையிறுதியில் ரவிந்தர் சிங் 0-3 என தென் கொரியாவின் ஜங்கிடம் வீழ்ந்தார். இதனால் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ரவிந்தர், இந்தோனேஷியாவின் அலியன்சியாக்கை எதிர்கொண்டார். இதில் ரவிந்தர் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் வென்றார்.
இதேபோல 66 கி.கி., "கிரிகோ-ரோமன்' எடைப்பிரிவு அரையிறுதியில் ஈரானின் அப்ட்வாலியிடம் தோல்வியடைந்த இந்தியாவின் சுனில்குமார் ராணா, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தாய்லாந்தின் ஓம்சோம்போவை சந்தித்தார். இதில் அபாரமாக செயல்பட்ட சுனில்குமார் ராணா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
டில்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற, இந்தியாவின் ராஜேந்தர் குமார் ("கிரிகோ-ரோமன்' 55 கி.கி.,), முதல் சுற்றில் சீனாவின் லி சுஜினிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
சானியா வெண்கலம்:
பெண்களுக்கான டென்னிஸ், ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, உஸ்பெகிஸ்தானின் அகுல் அமன்முராடோவாவை சந்தித்தார். "டை-பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை சானியா 7-6 என போராடி கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட அமன்முராடோவா, 2வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய சானியா 4-6 என கோட்டைவிட்டார். இறுதியில் சானியா 7-6, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, விஷ்ணு வர்தன் ஜோடி, தாய்லாந்தின் டனசுகர்ன், ரடிவடனா ஜோடியை சந்தித்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-3, 6-7, 1-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், சீனாவின் ஜி ஜாங்கை சந்தித்தார். இதில் சோம்தேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர் கரண் ராஸ்டோகி, உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினிடம் 2-6, 6-4, 5-7 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சோம்தேவ், சனம் சிங் ஜோடி, தென் கொரியாவின் சோ சூன், கிம் ஜோடியை சந்தித்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

courtesy.dinamalar

Post a Comment

0 Comments