'சூப்பர் காப்'...மீண்டும் நிரூபித்த தமிழ்நாடு போலீஸ்!

 யாருக்குமே வராத யோசனை, சிந்தனை போலீஸுக்கு மட்டும் வரும் என்பார்கள். அப்படி இருப்பவர்களால் மட்டுமே நல்ல போலீஸாக இருக்க முடியும். அதை தமிழ்நாடு போலீஸ், குறிப்பாக சென்னை போலீஸ் மீண்டும் நிரூபித்துள்ளது.

2 வங்கிகளில் கொள்ளை போய் விட்டது. இரண்டுமே ஒரே மாதிரியான திருட்டு. பட்டப் பகலில், படு சாவகாசமாக வந்து கொள்ளையடித்து விட்டு படு கேஷுவலாக நடந்தே போயுள்ளனர் கொள்ளையர்கள். இரு வங்கிகளிலும் அடிக்கப்பட்ட பணம், ஆயிரம், ரெண்டாயிரம் அல்ல, கிட்டத்தட்ட 39 லட்சம். சாதாரணர்களுக்கே எவ்வளவு கோபம் வரும், அப்படி இருக்கும்போது போலீஸாருக்கு எப்படி இருந்திருக்கும்.

அப்படித்தான் சென்னை போலீஸாரும் இருந்தனர். ஒரு துப்பும் கிடைக்கவில்லை, யார் என்ற அடையாளம் தெரியவில்லை, ஆனால் கைக்கு எட்டும் தூரத்தில்தான் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. கிட்டத்தட்ட மாயாவியிடம் சண்டை போடும் நிலையில் சென்னை போலீஸார் இருந்தனர்.

இந்த இரு வழக்குகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு தனிப்படைகளை வரலாறு காணாத அளவுக்கு அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார் கமிஷனர் திரிபாதி. இதுவரை எந்த ஒரு சம்பவத்திற்கும் இந்த அளவுக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு கிட்டத்தட்ட 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாலாபுறமும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

இரு வங்கிகளிலும் நடந்த கொள்ளைச் சம்பவங்களின் மோடஸ் ஆப்பரன்டி ஒன்றுதான். ஆள் நடமாட்டம் குறைந்திருந்த நேரத்தில், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வங்கிகளில், மதிய உணவு நேர வாக்கில்தான் கொள்ளையடித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா இல்லாமல் போய் விட்டதே என்று அத்தனை பேரும் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த வித்தியாசமான ஐடியா போலீஸாருக்கு உதித்துள்ளது. கண்காணிப்பு கேமரா இல்லாத வங்கியாக பார்த்துத்தான் கொள்ளையடித்துள்ளனர். அப்படியென்றால் எந்த வங்கிகளில் கேமரா உள்ளது, எங்கு இல்லை என்பதை அவர்கள் நிச்சயம் நோட்டம் பார்த்திருப்பார்கள். எனவே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பதிவுகளைப் பார்த்தால், கொள்ளையர்கள் குறித்த துப்பு கிடைக்கலாம் என்பதுதான் அந்த ஐடியா.

இந்த ஐடியாவைக் கொடுத்த அதிகாரி யார் என்பது தெரியவில்லை. ஆனால் அபாரமான யோசனை இது என்பதில் சந்தேகமில்லை. யாருக்கும் இந்த யோசனை வந்திருக்க வாய்ப்பில்லை. மிக மிக புத்திசாலித்தனமான யோசனை இது. நிச்சயம் இந்த யோசனையைக் கொடுத்துவருக்கே முதலில் பரிசைக் கொடுக்க வேண்டும்.

இந்த யோசனை கூறப்பட்டதும் சென்னை மாநகரில் உள்ள காமரா பொருத்தப்பட்ட அத்தனை வங்கிகளிலும் உள்ள வீடியோ பதிவுகளை வாங்கி பார்வையிட ஆரம்பித்தது போலீஸ் படை. மேலும், கொள்ளை போன பாங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்களையும் வரவழைத்து அவர்களுக்கும் போட்டுக் காட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த யாரேனும் இதில் உள்ளனரா என்று விசாரித்தனர்.

போலீஸாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கொள்ளைக் கூட்டக் கும்பலின் தலைவனாக போலீஸாரால் கூறப்பட்டுள்ள வினோத்குமார் ஒரு வீடியோ பதிவில் சிக்கினான்.

வங்கி ஒன்றில் இருந்த அவன், பராக்கு பார்த்தபடியே இருந்துள்ளான். பணம் எடுக்கவோ, போடவோ வந்தது போல அவனது செய்கைகள் தெரியவில்லை. மாறாக, வங்கியைக் கண்காணிப்பதே அவனது முக்கிய நோக்கமாக தெரிந்தது. மேலும் ஒரே நாளில் பல வங்கிகளுக்கு அவன் போயுள்ளான். ஒரே சட்டையுடன் போயுள்ளான்.

இதையடுத்து வினோத்குமார் யார் என்ற வேட்டையை சென்னை போலீஸார் தொடங்கினர். அப்போதுதான் அவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற தகவல் கிடைத்தது. அதன் பிறகு நடந்தது போலீஸ் பாணியில் சொல்வதானால் - வரலாறு.எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால், ஏன் வினோத்குமார் படத்தை மட்டும் காட்டி விட்டு அவனத்து பேக்கிரவுண்டுக்கு கிராபிகஸ் மூலம் வெள்ளையடித்தது போலீஸ் என்பதுதான் புரியவில்லை...

அதேபோல இன்னொரு சந்தேகம் என்ன என்றால், தங்களது வங்கிக்கு வந்த ஒருவன் எந்த வேலையிலும் ஈடுபடாமல் சும்மா சுத்திச் சுத்தி வந்து கொண்டிருந்திருக்கிறானே, ஏன் என்று கேமரா வைக்கப்பட்டிருந்த அந்த வங்கியின் அதிகாரிகள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பது. ஒரு வேளை காமரா வைத்ததுடன் தங்களது பொறுப்பு முடிந்து விட்டது, அதில் என்ன பதிவானு என்பது குறித்துக் கவலை இல்லை என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ...

எப்படியோ வங்கி அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலும் கூட போலீஸாரின் புத்திசாலித்தனத்தால் ஒரு கொள்ளைக் கும்பல் மாட்டிக் கொண்டு மாண்டும் போய் விட்டது.

ரேஷன் கார்டு புதுப்பிப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு; ஆன்லைனிலும் புதுப்பிக்கும் வசதி

தமிழகத்தில் குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம், மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்-லைனிலேயே குடும்ப அட்டைகளை புதுப்பிக்க, தமிழக அரசு வகை செய்துள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டுக்கு நீட்டிக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். 
இந்த உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல்தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த அரசு, மேலும் ஒரு மாத காலத்துக்கு - அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், 

புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணைய தள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். 

இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். 

ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். 

இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source.vikadan

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கரூரில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் இடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் பாராட்டினார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே கபடி, கோகோ, கைப்பந்து மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற 222 பேர் கொண்ட 24 குழுக்களுக்கு 372 கிராம் தங்க காசுகள், 24 கோப்பைகள் மற்றும் 222 சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அதே போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 21 மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடித்த 40 பேர் கொண்ட 4 குழுக்களுக்கு 140 கிராம் தங்க காசுகள், 4 கோப்பைகள் மற்றும் 40 சான்றிதழ்களை வழங்கினார்.

ஆக மொத்தம் 262 பேர் கொண்ட 28 குழுக்களுக்கு 512 கிராம் அதாவது 64 சவரன் எடையுள்ள தங்க காசுகள், 28 கோப்பைகள் மற்றும் 262 சான்றிதழ்களையும் வழங்கினார்.

சிறப்பாக விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜெயலலிதா பாராட்டினார். சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி, சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சு உள்ளது. இந்த நிலையில் 'அம்மா'விடமிருந்து பாராட்டைப் பெற்று விட்டதால் செந்தில் பாலாஜி பெரும் உற்சாகத்தில் இருக்கிறாராம்.

இந்தியா கிரிக்கெட்டில்: கொலைவெறி வெற்றி-HIGHLIGHTS

 ஹோபர்ட் ஒரு நாள் போட்டியில் இலங்கையின் ரன் குவிப்பை தவிடுபொடியாக்கி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்தியா.

முன்னதாக இந்திய ப䮨்து வீச்சை சுக்குநூறாக்கிய இலங்கை அதிரடியாக 320 ரன்கள் குவித்தது. ஆனால் 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 36.4 ஓவர்களில் அடைந்த இந்தியா, போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தியது. விராத் கோஹ்லியின் அதிரடி சதம், இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 18 புள்ளிகளுடன், இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்கு பதிலாக ஜாகிர்கான் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. போட்டியின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை, துவக்கம் முதலே விக்கெட் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 49 ரன்களாக இருந்த போது, கேப்டன் ஜெயவர்த்தனே, ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த தில்ஷனும், சங்கக்காராவும் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து ரன்களை குவித்தனர். 43வது ஓவர் வரை தொடர்ந்து ஆடிய இவர்கள், அணியின் ஸ்கோரை 249 ரன்களாக உயர்த்தினர். இந்த நிலையில் 87 பந்துகளில் 2 சிக்ஸ் 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்த சங்கக்காரா போல்டானார்.

பெரேரா 3 ரன்களில் ஏமாற்றினார். ஏஞ்சலோ மேத்யூஸ் 14 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்தாலும், மனம் தளராத தில்ஷன் 150 ரன்களை கடந்தும் அதிரடியை நிறுத்தவில்லை. 3 சிக்ஸ், 11 பவுண்டரிகளை விளாசிய தில்ஷன் 160 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 320 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா, ஜாகிர்கான், பிரவீன் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா 40 ஓவர்களுக்குள் அடைந்தால் மட்டுமே போனஸ் புள்ளியுடன் இந்தியா வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அதிரடியில் இந்தியா:

இதையடுத்து இந்திய அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 1 சிக்ஸ், 5 பவுண்டரிகளை விளாசிய ஷேவாக் வழக்கம் போல சீக்கிரமாக வெளியேறினார். அடுத்ததாக சச்சின் அதிரடியை தொடர்ந்த நிலையில், அவரும் 39 ரன்களில் எல்பிடபிள்யூனார். இதனால் யார் இந்தியாவை வெற்றிப் பாதையில் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.

பின்னர் விராத் கோஹ்லி, கம்பிரும் சேர்ந்து அதிரடியை தொடர்ந்தனர். ஒரிரு ரன்களை அதிகளவில் எடுத்து வந்த நிலையில், கம்பிர் அரைசதம் கடந்து 63 ரன்களில் ரன் அவுட்டானார்.

ஆனால் கோஹ்லி, ரெய்னாவுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி வழி நடத்தினார். ரெய்னா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோஹ்லி சதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தார். 86 பந்துகளில் 3 சிக்ஸ் 16 பவுண்டரிகளை விளாசிய கோஹ்லி 133 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த ரெய்னா 24 பந்துகளில் 1 சிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 36.4 ஓவர்களில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை எட்டியது. இலங்கை தரப்பில் 7.4 ஓவர் வீசிய மலிங்கா 96 ரன்களை கொடுத்து இந்தியாவுக்கு உதவினார்.

இதன்மூலம் இந்தியா போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தி உள்ளது. நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால், இந்தியா இறுதிப்போட்டியி்ல் பங்கேற்க தகுதிப் பெறும்.
**************************'த ஆர்டிஸ்ட்', 'ஹூகோ' படங்களுக்கு தலா 5 ஆஸ்கர் விருதுகள்:

84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.

'அயர்ன் லேடி' படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.இதற்கு முன் க்ராமர் Vs கிராமர் (1979), சோபிஸ் சாய்ஸ் (1982) ஆகிய படங்களுக்கும் இவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இதுவரை 17 முறை ஆஸ்கர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஊமைப் படமான 'த ஆர்டிஸ்ட்' படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கல் ஹசானாவிகஸ் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கருப்பு வெள்ளைப் படமான இந்தப் படம் ஏற்கனவே பல உலக விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

'த ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' படத்துக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மீது ஆசிட் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை இந்தப் படம் விவரிக்கிறது.

ஜார்ஜ் க்ளூனி நடித்த 'த டெசன்டன்ஸ்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் 'ஏ செப்பரேஷன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

உலகின் மிகச் சிறிய மனிதர் உயரம் 21.5 இன்ச்

நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது முதியவரான சந்திர பஹதூர் டாங்கி உலகின் மிகச் சிறிய மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்மேற்கு நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர பஹதூர் டாங்கி(72). அவரது உயரம் வெறும் 21.5 இன்ச் தான் அதாவது 54.6 செமீ. இந்நிலையில் கின்னஸ் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து காத்மாண்டு வந்தனர். அவர்கள் டாங்கியின் உயரத்தை ஒரே நாளில் 3 தடைவை அளந்தனர். இதையடுத்து உலகின் மிக குள்ளமான மனிதர் என்ற சான்றிதழை அவர்கள் டாங்கியிடம் வழங்கினர்.

இத்தனை நாட்கள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 59.9 செமீ உயரமுள்ள பாலாவிங் தான் உலகின் மிக குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். தற்போது அந்த சாதனையை டாங்கி முறியடித்துள்ளார்.

இதுவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மிக குள்ளமானவர்களிலேயே டாங்கிக்கு தான் அதிக வயது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளுக்கு செல்லவும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க விரும்புவதாகவும் டாங்கி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் ''கென்டக்கி கர்னல்'' விருது

அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் உயரிய விருதான "கென்டக்கி கர்னல்' விருது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய ‘‘கென்டக்கி கர்னல் விருது’’ வழங்கப்படுகிறது என்று அந்த மாகான ஆளுநர் ஸ்டீவன் எல். பெஷேர் அறிவித்துள்ளார்.

இந்த உயரிய விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்துச் செய்தியையும் கென்டக்கி மாகாண ஆளுநரின் செயலாளரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களது சுயநலமற்ற சேவைக்காக கென்டக்கி மாகாணத்தின் உயரிய விருது பெற்றமைக்கு வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த விருது பெறும் முதல் தமிழக அரசியல் தலைவரான ஸ்டாலின் இவ்விருதைப் பெற்றதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், அவர் ஒரு தன்னலமற்ற சமுதாய சேவகர், புதிய மாற்றங்களுக்கான சிறந்த சிந்தனையாளர் என அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஸ்டாலின் அளித்த ஊக்கமும், வழிகாட்டுதலும், மகளிர் முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சமுதாய சேவையாற்றுபவர்களுக்கு வழிகாட்டும் விளக்காக அமைந்துள்ளதாகவும், சமூக சேவர்களுக்கு ஸ்டாலின் செயல்பாடுகள் உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விருதானது மக்கள் முன்னேற்றத்திற்கான ஸ்டாலின் அளப்பரிய சேவைகளுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றும் இவ்விருதைப் பெற்றதன் மூலம் இவ்விருதுக்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறி வாழ்த்தியுள்ளார்.

இந்த விருதை மாகான கவர்னரும், வெளியுறவுச் செயலாளரும் கையெழுத்திட்டு வழங்குவார்கள்.

கென்டக்கி கர்னல் விருதைப் பெற்றவர்கள் ''மாண்புமிகு'' என்ற அடைமொழியைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கச் சட்டப்படியும் பிற உலகநாடுகளில் ராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் படியும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
1812ம் ஆண்டு, கென்டக்கி மாநிலத்தின் முதல் ஆளுநரான ஐசாக் ஷெல்பி தொடங்கிய இந்த விருது ஒருவரின் சமுதாயப் பங்களிப்பு, அவரது நாட்டிற்கு செய்த சேவை மற்றும் சிறந்த சாதனைகளுக்கும் வழங்கப்படுவதோடு, இவ்விருது பெற்றவர்கள் கென்டக்கி மாகாணத்தின் நல்லெண்ணத் தூதர்களாகவும், உலகில் உள்ள மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவராகவும் கெளரவிக்கப்படுகிறார்கள்.

இந்த விருது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் லிண்டன் பி.ஜான்சன் (37வது ஜனாதிபதி), இருமுறை ஜனாதிபதியாக இருந்து 46 ஆண்டுகளாக நீடித்து வந்த பனிப்போரைத் தீர்த்து வைத்த 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், 41வது ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் 42வது ஜனாதிபதி கிளிண்டன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2ம் உலகப் போரில் இங்கிலாந்து பிரதமராக இருந்து மிகச்சிறந்த போர்க்கால ஆட்சியாளர் எனப் பெயர் பெற்றவரும், இருமுறை பிரதமராகப் பதவி வகித்தவரும், சிறந்த பேச்சாளர், அரசியல் தலைவர், வரலாற்றறிஞர் எனப் பெயர் பெற்றவரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாத்துப் பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில் இந்த விருது பெற்றுள்ளார்.

போப் இரண்டாம் ஜான் பால், விண்வெளி வீரர் ஜான் க்ளென், குத்துச் சண்டைவீரர் முகம்மது அலி ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஜான் க்ளென், தனது வரலாற்றுச் சாதனையைப் படைத்தபோது விண்வெளியில் இருந்தபோதே இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா * தகுதிச் சுற்று பைனலில் வெற்றி

லண்டன் ஒலிம்பிக், ஹாக்கி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதிச் சுற்று பைனலில் பிரான்சை 8-1 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. சந்தீப் சிங் 5 கோல் அடித்து அசத்தினார்.

லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில், பங்கேற்பதற்கான ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டம் டில்லியில் நடந்தது. 


நேற்று நடந்த பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் வென்றால் ஒலிம்பிக் போட்டியில் விளையாடலாம் என்ற உற்சாகத்தில் இந்திய வீரர்கள் களமிறங்கினர். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் லக்ரா ஒரு "பீல்டு' கோல் அடித்து, வலுவான துவக்கம் தந்தார். 


19வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு 23வது நிமிடத்தில் பிரான்சின் மார்டின் பிரிசாக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். 26வது நிமிடத்தில் மீண்டும் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது.


கோல் மழை:
இரண்டாவது பாதியிலும் நம்மவர்கள் கோல் மழை பொழிந்தனர். 38வது நிமிடத்தில் சந்தீப் ஒரு கோல் அடித்தார். 43வது நிமிடத்தில் சுனில் ஒரு கோல் அடிக்க, இந்தியா 5-1 என முன்னிலை பெற்றது. 49வது நிமிடத்தில் சந்தீப் இன்னொரு கோல் அடித்தார். 56வது நிமிடத்தில் ரகுநாத் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். 

நூறு சதவீத வெற்றி:
இறுதியில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் வென்று, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. தவிர, இத்தொடரில் நூறு சதவீத வெற்றியை பெற்றது. தகுதிச் சுற்றில் பிரான்ஸ் இரண்டாவது இடம் பெற்றது.
16 கோல்:
கடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. இம்முறை சந்தீப் சிங் 5 கோல்(19, 26, 38, 49, 51வது நிமிடம்) அடித்து, அணியின் லண்டன் ஒலிம்பிக் கனவை நனவாக்கினார். தொடரில் 16 கோல் அடித்த இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவரது அசத்தல் "பார்ம்', தொடர்ந்து, லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

முன்னதாக நடந்த போட்டியில் கனடா அணி, போலந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மூன்றாவது இடத்துக்கான வெண்கலப் பதக்கம் பெற்றது.

கொலவெறி புகழ் 3 படத்தை ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு

கொலவெறி டி பாடல் புகழ் 3 படத்தை ஏலத்தில் விற்க படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.

3 படம் மூலம் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகியிருக்கிறார். இந்த படத்தில் தனது கணவனை நாயகனாகவும், தோழி ஸ்ருதி ஹாசனை நாயகியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்திருக்கிறார். படத்திற்கு புதுமுகம் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி பாடல் இந்தியா மட்டும் இன்றி உலகப் புகழ் பெற்றுள்ளது. இந்த பாட்டைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங் தனுஷ், ஸ்ருதியை அழைத்து விருந்து கொடுத்தார். இதனால் படத்தின் புகழ் மேலும் பரவியது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ரூ.50 கோடிக்கு வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக உள்ளனர்.

தனுஷின் திருடா திருடி படத்தின் `என்.எஸ்.சி.' வினியோக உரிமையை ஏலத்தில் விட்டது போன்று 3 படத்தையும் ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்தியா படுதோல்வி


3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் 10-வது லீக் ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு தொடங்கியது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
 
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தடை காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் டோனி இன்றைய ஆட்டத்தில் இடம்பெற்றார். இதேபோல பிரவீன்குமாரும் அணிக்கு திரு��்பினார். வினய்குமார், பார்த்தீவ் பட்டேல் நீக்கப்பட்டனர்.
 
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வாட்சன் கேப்டனாக பணியாற்றினார்.ஹாரிஸ் நீக்கப்பட்டு மெக்காய் சேர்க்கப்பட்டார்.
 
ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி இதுவரை முதலில் பேட்டிங் செய்யவில்லை.
 
பிரவீன்குமாரின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 6.2 ஓவரில் 20 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. வாட்சன் 1 ரன்னிலும், பீட்டர் பாரஸ்ட் 7 ரன்னிலும் பிரவீன்குமார் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
 
 3-வது விக்கெட்டுக்கு வார்னர்-மைக்ஹஸ்சி ஜோடி சேர்ந்தது. மைக்ஹஸ்சி 10 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே டேவிட் ஹஸ்சி களம் இறங்கினர்.
 
எதிர்முனையில் நிதானமாக விளையாடி அரைசதத்தை கடந்த வார்னர் 68 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்தில் ரைனாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
 
அதன்பிறகு வதேயும் டேவிட் ஹஸ்சியும்  ஜோடி சேர்ந்தனர். இருவரும் அரை சதத்தை கடந்தனர். 56 ரன்களுடன் வதேவும், 54 ரன்களுடன் டேவிட் ஹஸ்சியும் யாதவ் பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர்.
 
அதன்பிறகு வந்த கிறிஸ்டியன் 24 ரன்னிலும்,மெக்காய் 1 ரன்னிலும்,பிரெட்லீ 13 ரன்னிலும், டோகர்டி 14 ரன்னிலும் அவுட் ஆயினர்.
 
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
 
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடத்தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், தெண்டுல்கரும் களம் இறங்கினார்கள. சேவாக் 5 ரன்னிலும், தெண்டுல்கர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
 
அடுத்து காம்பீருடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினார்கள். இருந்தாலும் அதிக நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. கோலி 21 ரன்னிலும், காம்பீர் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ரெய்னா 8 ரன்னில் வெளியேற இந்தியா தடுமாற்றம் அடைந்தது.
 
 6வது விக்கெட்டுக்கு தோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. ஜடேஜா 8 ரன்னில் அவுட்ஆனார். இந்தியா 26.3 ஓவரில் 104 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தது பரிதவித்தது.
 
7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - தோனியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தோனி 14 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து பதான் களமிறங்கினார். 

அஸ்வினும், பதானும் சேர்ந்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். பதான் 2 சிக்சர்களை விளாசி ஆட்டத்திற்கு ஒரு உத்வேகம் கொடுத்தார். ஆனால் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சுக்கு முன்னால் இந்த ஜோடியாலும் தாக்குபிடிக்க முடியாமல் போனது. 26 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் வெளியேற, அவரைத் தொடர்ந்து பதான் 22 ரன்களுக்கும், பிரவீண்குமார் 1 ரன்களுக்கும் வெளியேற இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலியா பந்துவீச்சு தரப்பில் வாட்சன், டோகர்டி, ஹெல்பனாஸ் தலா 2 விக்கெட்டுகளும், மெக்காய், ப்ரெட்லீ, கிறிஸ்டியன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் முத்தரப்பு தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது. 

உலகிலேயே பணக்கார நாடு கத்தார்

உலகிலேயே பணக்கார நாடாக கத்தாரை புகழ்பெற்ற போர்பஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் 15 பணக்கார நாடுகளின் பெயரை போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு செல்வச் செழிப்புடன் திகழ்வதற்கு காரணம் அந்நாட்டின் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும்தான் காரணம்.

கத்தார் நாடுதான் 2022-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியையும் 2020 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த உள்ளது.

உலகின் பணக்கார நாடுகள் வரிசையில், லக்சம்பர்க்குக்கு 2-வது இடமும் சிங்கப்பூருக்கு 3-வது இடமும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்ஹாங், சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடம் பணக்கார 15 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

சர்வதேச நிதியம் வெளியிடும் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பின் அடிப்படையில் பணக்கார நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.

பணக்காரர் என்று இருந்தால் ஏழையும் இருந்தாக வேண்டும். உலகின் மிகப் பெரிய ஏழை நாடுகளின் பட்டியலையும் போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் புருண்டி, லைபீரியா, காங்கோ ஆகியவை முன்னணியில் உள்ளன.

சேவாக்குடன் கருத்து வேறுபாடு இல்லை: தோனி

ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றது. இந்திய அணி நாளை சிட்னியில் நடைபெற உள்ள போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்நிலையில் இன்று கேப்டன் தோனி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 

இந்திய அணி வீரர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது என்று பத்திரிகைகள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. அணியின் மூத்த வீரர்கள் குறித்து நான் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஏதும் உண்மையல்ல. இந்த மாதிரியான செய்திகள் வீரர்களுக்கிடையே தடுமாற்றத்தை உண்டாக்குகிறது. 

மேலும், சேவாக்குடன் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அணியில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் விளையாடி நாளைய போட்டியில் வெற்றி பெறுவதில் குறியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

கிராமங்களில் 4 மணிநேரம், புறநகரில் 2 மணி நேரம் பவர் கட்

வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 27 ) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடை அமலுக்கு வருகிறது.

ஊரகப் பகுதிகளில் இ��ு 4 மணி நேரமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக சென்னை தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் கடந்த ஆண்டின் துவகத்திலிருந்தே மின்தடை நிலவி வருகிறது. மாநிலம் முழுக்க மின் தேவை 12500 மெவா ஆகவும், கிடைப்பது 8500 மெவா ஆகவும் உள்ளது.

இதனால் ஆரம்பத்தில் 4 மணி நேரமாக இருந்த மின்தடை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மழைக்காலங்களிலும் கடுமையாக மின்வெட்டு நிலவியது அநேகமாக இந்த ஆண்டாகத்தான் இருக்கும்.

கோவை, திருப்பூரில் 12 மணி நேரம் வரை மின்சாரமில்லாத நிலை நிலவுகிறது.

கிராமப்புறங்களின் இத்தகைய மின்தடை நேரத்தை குறைக்க, சென்னையிலும் மின்தடை அமலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிப். 27 முதல் தினமும் 2 மணி நேரம் மின் தடையும், மார்ச் 1 முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மின் விடுமுறையும் அமலுக்கு வருகின்றன. இதனால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிப். 27 முதல் மின்தடை நேரம் ஓரளவு குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஏற்கெனவே 10 மணி நேரங்களுக்கு மேல் நிலவும் மின்வெட்டு, எந்த அளவு குறையும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது.

3 படத்தில் ரஜினி?

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்து வைக்கப்பட்டு '3' என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.

கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.

படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.

இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

ஆஸி அணியை வென்றது இலங்கை


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸி அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ஹோபர்ட் நகரின் பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸி அணி தமது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி ஆட்டம் முடிவடைய நான்கு பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்த வெற்றியை பெற்றது. இலங்கை அணியின் தலைவர் மஹேள ஜெயவர்தனவும், தினேஷ் சண்டிமலும் சிறப்பாக ஆடி இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் பீட்டார் ஃபாரஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை இந்த ஆட்டத்தில் அடித்தார். அவர் எடுத்த ஓட்டங்கள் 104.
இப்போட்டியில் வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற நிலை கடைசி ஓவர் வரை நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் இலங்கை முதலிடத்திலும், ஆஸி அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
தொடரில் பங்கேற்கும் மற்றொரு அணியான இந்தியா 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளும் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்தப் போட்டித் தொடரில் இன்னமும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன. அனைத்து அணிகளும் இருபோட்டிகளில் விளையாடும்.எனினும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணி தாங்கள் ஆடவுள்ள இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாலே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால் இந்திய அணியோ இனி ஆட வேண்டிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
எதிர்வரும் ஞாயிறன்று, அதாவது இம்மாதம் 26 ஆம் தேதி சிட்னியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளும், செவ்வாய்கிழமை 28 ஆம் தேதி ஹோபர்ட்டில் இந்திய இலங்கை அணிகளும் மோதுகின்றன.
இப்போட்டியில் தகுதிச் சுற்றின் கடைசி ஆட்டம் மெல்பர்ண் நகரில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு பிறகு மூன்று இறுதி ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதில் முதல் போட்டி பிரிஸ்பேனிலுள்ள காபா மைதானத்திலும் அடுத்த இரு ஆட்டங்களும் அடிலைட் ஓவல் மைதானத்திலும் இடம்பெறுகின்றன.
இறுதிப் போட்டிகள் மார்ச் மாதம் 4, 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணியின் ஆட்டம் மோசமாகவே இருந்துள்ளது என்றும் அணிக்குள்ளேயே சில முரண்பாடுகள் இருந்தன என்றும் விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியா விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து இரண்டில் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

தண்டனையாக 3 மணி நேரம் ஓடிய சிறுமி பலி


 சாக்லேட் சாப்பிட்டதற்காக 9 வயது சிறுமியை தண்டிக்க அவரை 3 மணி நேரம் நிற்காமல் ஓடும்படி செய்துள்ளனர். இதனால் நா வறண்டு மயங்கிய சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த சிறுமி சவன்னா ஹார்டின்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள். அவளது மாற்றான் தாய் ஜெசிகா மே ஹார்டின்(27), பாட்டி ஜாய்ஸ் ஹார்டின் காரட்(47). கடந்த வெள்ளிக்கிழமை சவன்னா சாக்லேட் சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த ஜெசிகாவும், ஜாய்ஸும் சவன்னாவை 3 மணிநேரம் நிற்காமல் ஓடச் செய்துள்ளனர்.

ஓடி, ஓடி கலைத்த சிறுமி இறுதியில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெசிகா மற்றும் ஜாய்ஸை கைது செய்தனர். சவன்னாவை மிரட்டி ஓடச் செய்தார்களா, அல்லது அடித்து ஓட விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப பார்ட்னராக்கிய ஹீரோ மோட்டோ கார்ப்

ஹோண்டா பிரிந்து சென்றதையடுத்து, தொழில்நுட்பத்துக்காக தவித்து வந்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தற்போது புதிய துணையை தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தை தனது புதிய தொழில்நுட்ப பார்ட்னராக அந்த நிறுவனம் தெரிவு செய்துள்ளது.

இந்தியாவின் பைக் உற்பத்தியில் கோலோய்ச்சி வரும் ஹீரோ ஹோண்டா நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹோண்டா விலகியது. இதையடுத்து, ஹீரோ நிறுவனம் தனித்து களமிறங்கியது.

இருப்பினும், ஹீரோவுக்கு வரும் 2014ம் ஆண்டு வரை தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஹோண்டா உத்தரவாதம் கொடுத்தது. இதற்காக, கணிசமான தொகையை ஹோண்டாவுக்கு ஹீரோ ராயல்டியாக தந்து வருகிறது.

இந்த நிலையில், புதிய தொழில்நுட்ப பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஹீரோ தீவிரப்படுத்தியது. சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தை வழங்கும் பார்ட்னரை தேர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.

இதற்கு தற்போது பலன் கிட்டியுள்ளது. பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தை தனது புதிய தொழில்நுட்ப பார்ட்னராக ஹீரோ மோட்டோ கார்ப் தேர்வு செய்துள்ளது.

எதிர்காலத்தில் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பைக்குகள் தயாரிப்பதற்கான வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளை எரிக் புயெல் ரேஸிங் வழங்கும்.

ஹோண்டா தற்போது அளித்து வரும் தொழில்நுட்பத்திற்காக கணிசமான அளவு ராயல்டியை ஹீரோ வழங்கி வருகிறது. இதை வெகுவாக குறைக்கும் வகையில் புதிய பார்ட்னரை ஹீரோ தேடிப்பிடித்துள்ளது.

சென்னையில் நள்ளிரவில் 5என்கவுண்டர் -வட மாநில வங்கி கொள்ளையர்கள்


சென்னையி்ல் இரு இடங்களில் நடந்த வங்கி்க்கொள்ளையில் தொடர்புடைய வடமாநிலத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாயினர்.

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

இதை அறித்த கொள்ளயைர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கமிஷனர் திரிபாதி விரைவு: சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்..

வடமாநிலத்தவர்கள்: துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார்.நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்: 
சென்னையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துபாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதாக என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எச்சரித்த போலீசார்:
வேளச்சேரி அருகே உள்ள செக்போஸ்ட் சென்ற போலீசார் கொள்ளையர்களை இடத்தை நோக்கி வீட்டை விட்டுவெளியே வருமாறு எச்சரித்தனர். ஆனால் போலீசார் சுற்றி வளைக்கப்பட்டதை தெரிந்து கொண்ட கொள்ளயைர்கள் முதலில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது தான் இரு போலீசார் குண்டுகாயமடைந்தனர். இதற்கு பதிலடியாகத்தான் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்

கொள்ளை கும்பல் தலைவன்
சென்னையில் நேற்று வங்கி கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி படத்தை வெளியிட்ட ‌போலீஸ் கமிஷனர் கூறுகையில், நேற்று வெளியிட்ட வீடியோ படத்தில் உள்ளவன் தான் கொள்ளை கும்பல் தலைவன் எனவும் சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலை.யில் பொறியியல் படித்தவன் எனவும் தெரிவித்தார். மேலும் கொள்ளையர்‌களின் கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகின்றது


அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்
கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர். நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.

வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்:சென்னை பெருங்குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.


மாஜி ரெளடியின் வீட்டில் குடியிருந்தனர்
சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர்.


இவர் வட மாநில மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப்பகுதியி்ல் கூறி வந்துள்ளனர். மேலும் இந்த என்கவுன்டர் நடப்பதற்கு முன்பு முன்னாள் ரெளடியின் மகள் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் ‌எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள்
என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீல் (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.


தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர்
சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர் போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இரவோடு இரவாக தப்பிக்க திட்டம்
சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.
**************
courtesy.dinamalar.dinakaran