கரூரில் போலி மதுபான ஆலை


கரூரில் எஸ்.பி., அலுவலகம் அருகே, வாடகைக்கு வீடு பிடித்து, போலி மதுபான ஆலை நடத்திய நபரை, சென்னை மத்திய புலனாய்வு பிரிவு (அமலாக்கம்) போலீசார் கைது செய்தனர்.கரூர் தாந்தோணிமலை, "கிரேப்' கார்டன் பகுதியில் சிலர், வாடகைக்கு வீடு எடுத்து போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக, சென்னை மத்திய புலனாய்வு பிரிவு (அமலாக்கம்) போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை மத்திய புலனாய்வு பிரிவு, ஏ.டி.ஜி.பி., காந்திராஜன் உத்தரவின்படி, சென்னை டி.எஸ்.பி., மதி, திருச்சி மண்டல இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர், நேற்று முன்தினம் கரூர் வந்தனர்.போலி மதுபான ஆலை நடப்பதாகக் கூறப்பட்ட, கிரேப் கார்டன் பகுதியை நோட்டமிட்டனர். அப்பகுதியில், சேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மர்மமான முறையில், சிலர் வந்து போவது தெரிந்தது. அங்கு, போலி மதுபானங்கள் பதுக்கி வைத்திருப்பதை, போலீசார் ஊர்ஜிதப்படுத்தினர்.

இதையடுத்து, சென்னை போலீசார், கரூர் ஏ.டி.எஸ்.பி., ராஜன், மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் உதவியுடன் போலி மதுபானம் தயாரித்த வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
போலி மதுபானம் தயாரிக்கப் பயன்படும், "சீல்' வைக்கும் இயந்திரம், 16 கேன்களில் ஸ்பிரிட் (எரி சாராயம்), 1,334 மதுபாட்டில்கள், 20க்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் கேன்கள், இரண்டு பேரல்கள், ஸடிக்கர், மூடி, நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகள் எனக் குவிந்திருந்தது. வீட்டிலிருந்த தேவக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன்,32, என்பவரை கைது செய்து, பொருட்களையும் கைப்பற்றினர்.

இதுகுறித்து, கரூர் ஏ.டி.எஸ்.பி., ராஜன் கூறுகையில், ""போலி மதுபான ஆலை இயங்குவதாக வந்த தகவலின்படி, இந்த வீட்டில் சோதனை நடத்தினோம். 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரு நாட்களுக்கு முன், தோகமலை பகுதியில் சிக்கிய சாராயக் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறாம். விசாரணையில் இது தெரியவரும். தாந்தோணிலை சேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டை, 4,000 ரூபாய் வாடகைக்கு பிடித்து, மூன்று மாதமாக போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை முடிவில் அனைத்து விவரங்களும் தெரியும்'' என்றார்.

Post a Comment

1 Comments

உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ திரட்டியில் பகிர மறக்காதீர்கள்..